சமையல் குறிப்பு
குறுங்கதை
முன்பெல்லாம் மாதேஸ்வரி படு சூட்டிகை வெளியில் வராவிட்டாலும் வீட்டினுள் இங்குமங்கும் அலைந்த வண்ணம் இருப்பாள். மதியம் சாப்பிட்டுவிட்டு திண்ணையில் உட்கார்ந்தபடி அமர்த்தலான சத்தத்தோடு அரட்டையடித்துக் கொண்டிருக்கும் தியாகு பெரியப்பாவிடம் உள்ளிருந்தபடியே பொறுப்பாகக் கேட்பாள்
“நா கொஞ்சம் கண்ண அசரட்டுமா..? எதுனா வேணுமா?”
தியாகு பெரியப்பா சட்டென்று ஒரு கணம் கண் மூடி தியானித்து விட்டு “ம்ம்” என்பார்.
திருத்தல தரிசனம் கிடைத்த பக்த கோடி போலாகி அகம் குளிர உள் அறைக்குப் போகும் மாதேஸ்வரி தலைக்குப் பலகை வைத்துத் தூங்கத் தொடங்குவாள். அசந்தால் அதிகபட்சம் முக்கால் மணி நேரம் பிறகு எழுந்து கொள்வாள். காபி என்கிற தேவாசுர சமரசத்தை அவளன்றி வேறாராலும் அப்படி அவ்வண்ணம் தயாரித்து விட முடியாது. அடுக்களை நோக்கிச் சென்றால் மறுபடியும் வீட்டுப் பெண்கள் எல்லோரிடத்திலும் அதிகாரம் கொடி பறக்கும். இப்போதெல்லாம் மாதேஸ்வரிக்குப் பாழாய்ப் போன மூட்டு வலி அதற்கு என்னென்னவோ ஆங்கிலத்தில் பேரெல்லாம் வைத்துச் சொல்வாள் சுவீதா. அவளுக்கு மூட்டு வலி என்பது தான் புரியும். ஒரு நாளைக்கு நாலே தடவை குளிக்க, ஒப்பனை அறைக்குச் சென்று திரும்ப மதியம் பின் கட்டுக்குப் போகும் வழிவரை சென்று திரும்புவாள். என்னவோ வயற்காட்டைப் பார்த்தாற் போன்ற சிறு திருப்தி. சாயந்திரமானால் தத்தித் தத்தி சாமி ரூமுக்குப் போனால் அங்கே ஐந்து நிமிடம் கண் மூடி வணக்கம் செய்துவிட்டுத் திரும்புவதோடு சரி. எத்தனை நடந்தவள் இப்போது இப்படிச் சுருங்கி விட்டாள். இது முதுமை. வாழ்வின் பின்வாசல். அப்படித் தான் இருக்கும் என மனத்துக்கு அவளே ஆறுதல் சொல்லிக் கொள்வாள். இப்போதெல்லாம் தியாகு பெரியப்பா வேறு இல்லை என்பதால் அந்த வீட்டின் வாசலும் மொத்த அமைப்புமே மாறித் தான் போயிருக்கிறது. ஒரு ஆள் இருந்து இல்லாமற் போவதன் லட்சணவிலக்கு அப்படி.
அலர்மேல் வள்ளி வந்திருக்கிறாள் என்று சொல்லப்பட்டதும் தனது அறைக்கு அவளை வரச் சொன்னாள் மாதேஸ்வரி. யார் வந்தாலும் அவளே எழுந்து வருவாள் தன்னறைக்கு யாரையும் அழைப்பது பிடிக்காது என்ன இருந்தாலும் அலமு அவளது ரத்த உறவல்லவா..? அவள் உடன்பிறந்த தங்கையின் ஒரே மகள்.
பாவம் இந்தச் சிறு வயதில் எத்தனையெல்லாம் சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறாள் என்று அவளை நினைத்தாலே மாதேஸ்வரிக்குக் கண் கசிந்துவரும் அலமு அவள் பெண் தேனாம்பிகையோடு வந்தவள் பெரியம்மா எப்படி இருக்கீய?” எனக் கேட்டமாத்திரத்தில் லேசாய் கண்கலங்கினாள். அந்தப் பெண் ஸ்டூலில் அமர்ந்து கொள்ள அலமு முதியவளின் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
என்னென்னவோ பேசிவிட்டு விஷயத்துக்கு வந்தாள் அலமு. பெரியம்மா அந்த கற்பூரத் தேங்காய் பால் பொங்கல் எப்படி பண்றது என்று கேட்டாள் மாதேஸ்வரியின் உதடுகள் துடித்தன குரல் ரொம்பவே சன்னமாய்த் தான் எழுகிறது. பழைய கண்கள் மட்டும்அப்படியே இருந்தன முகமெல்லாம் மாறி முதுமை தன்னை வரைந்து கொண்டிருந்தது லேசாய் உலர்ந்து சிரித்தவள் என்னடி இப்போ அவசியம் வந்தது எனக் கேட்டாள். அவள் அப்படி கேட்டதற்கு அலமு எந்த பதிலும் சொல்லவில்லை அப்படியே அமர்ந்திருந்தாள். தேனாம்பிகாவிடம் நீ போயி ஹால்ல புலி படம்லாம் இருக்கும் பார் என்று அனுப்பினாள். அவள் ஹைய்யா என்றவாறே முன் பக்கம் சென்றாள் அலமு மாதேஸ்வரியின் கைகளை எடுத்து பற்றிக்கொண்டு லேசாய் அழுத்தினாள். பேசத் தொடங்கினாள்.
அவள் சொன்னதை எல்லாம் கேட்டுவிட்டுத் “தண்ணி எடு” என்றாள் மாதேஸ்வரி பக்கத்தில் இருந்த சொம்பை எடுத்து சரித்தவாக்கில் பிடித்துக்கொள்ள கொஞ்சம் கொஞ்சமாய் குடித்துவிட்டு சப்தமற்ற குரலில் யேவ் என்று ஏப்பம் விட்டாள்.
நடுக்கமான குரலில் “முதல்ல பாசிப்பருப்பை லேசா வறுத்துக்கோ. தேங்காய்ப் பாலை ஆட்டி எடுத்துக்கோ பச்சரிசி 2 கைப்பிடி வறுத்த பாசிப்பருப்பு தேங்காய்ப்பால் இதோட கொஞ்சம் தண்ணி விட்டு 15 நிமிஷம் வேக வை அப்புறம் எடுத்து மையா மசிச்சுக்க. வெல்லத்தை கால் டம்ளர் தண்ணி சேர்த்து காய்ச்சு. திரண்டதும் வடிகட்டி பாகு வை. அதோட முன்னாடி சொன்ன கலவையை சேர்த்து அடுப்புல வச்சு பத்து நிமிஷத்துக்கு நல்லா கிளறி இறக்கிரு.”
அவள் கேட்டுக் கொண்டே இருந்தாள் மாதேஸ்வரியின் கண்களை ஒருமுறை கூட பார்க்கவே இல்லை .
“ரெண்டு ஸ்பூன் நெய் அதுல முந்திரி திராட்சை ஏலப்பொடி மூணையும் பொடிச்சிப் பொங்கலில் போடு. எல்லாம் ஆனதும் அந்தப் பொடியை வெந்நீர்ல கரச்சிப் பொங்கல்லே ஊத்தி நல்லாக் கிண்டிக் கிளறி இறக்கி வை. சூடு குறையறதுக்குள்ளே சாப்டக் கொடுத்துரு” என்றாள்.
அலர்மேல் வள்ளி எப்படி மேற்கொண்டு பேசுவது எனத் தெரியாத தயக்க உணர்வோடு குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள். எதிர்ப்புற சாமி ஷெல்பைக் கை காண்பித்த மாதேஸ்வரி “விளக்குப் பிறைக்குள்ளே கடசீல கையை வை. அங்கே சின்னூண்டு டப்பா இருக்கா?” எனக் கேட்டாள். இவள் அதை விரல்களால் நிரடி எடுத்தாள். மை டப்பா போலத் தெரிந்ததைக் கொண்டு வந்தாள். தன் நடுங்கும் விரல்களைக் காட்டி கட்டை விரலை ஆட்காட்டி விரலால் சேர்த்து அதன் நுனியை நீட்டி அளவு சொன்னாள். “இத்துனூண்டு போடு. போதும். அதிகமாய்டக் கூடாது” என்றாள்.
தலையசைத்துக் கொண்டே கிளம்ப எத்தனித்தவளை நோக்கிச் சன்னமான குரலில் ‘அலமூ’ என்றாள் என்ன பெரிம்மா என்று திரும்பியவளிடம் “நீ தேவையானதை எடுத்துக்கிட்டதும் இந்த டப்பாவைத் தொறந்த மேனிக்கி ஓடுற ஆத்துல விட்டெறிஞ்சிரு. இதை வீட்ல வச்சிட்டிருக்கது தான் சீக்கு”என்றாள். அவள் தலையை அசைத்துக் கொண்டே கிளம்பினாள். எதிரே உறைந்த புன்னகையோடு தியாகு பெரியப்பாவின் படம் தெரிந்தது.