தானாய் சுழலும் இசைத்தட்டு
3 உமர்கயாம் ஓவியம்
பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்யநாதன் இசையுலக மேதை. அவருடைய வயலின் இழைதல்கள் காதலோடு ஒலித்தவை. கலைமாமணி, கர்நாடக இசைஞானி, சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில விருது சங்கீத நாடக அகாதமி விருது, ராஜா சாண்டோ விருது உட்படப் பல சிறப்புகளைப் பெற்றவர். தன் 73 ஆம் அகவையில் 2008 ஆமாண்டு இசையோடு கலந்தார் குன்னக்குடி. தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத பல படங்களை இசையமைத்தவர். தகர்க்க முடியாத வைரங்களாக அவரது பாடல்கள் மிளிர்கின்றன. வெவ்வேறு சப்தங்களை உண்டாக்குவதிலாகட்டும், பலவேறு வாத்தியங்களின் இசையிழைதலைத் தன் வயலினூடாகத் தோற்றுவிப்பதாகட்டும், குன்னக்குடி வாழ்ந்த காலத்தில் இசையால் ரசவாதம் புரிந்தார் என்பதே மெய்.
1969 ஆமாண்டு ஏபி நாகராஜன் இயக்கத்தில் உருவான குழந்தைகள் திரைப்படமான வா ராஜா வா படம் தான் குன்னக்குடியாரின் முதல் படம். 1970 ஆமாண்டு வெளிவந்த திருமலை தென் குமரி வண்ணப் படம் சக்கை போடு போட்டது. முதல் இரண்டுமே வெற்றிப் படங்கள் என்பது கவனிக்கத் தக்கது தான். திருப்பதி மலை வாழும் வெங்கடேசா மதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி பாடல்கள் இரண்டும் சீர்காழியின் காலம் கடந்த சோலோ சிற்பங்கள். இதையும் இயக்கியவர் நாகராஜனே.
ஜி.என்.வேலுமணி இயக்கத்தில் நம்ம வீட்டு தெய்வம் 1970 ஆமாண்டு வந்த இன்னொரு படம். எங்கெங்கு காணினும் சக்தியடா பாடல் உள்ளங்களை உருக்கியது. திரைப்பாடலுக்கிருந்த அத்தனை துவக்க லட்சணங்களையும் மீறித் தன் பாடல்களைத் தொடங்கச் செய்தார் குன்னக்குடி. பாடலின் அமைப்பு நகரும்விதம் வாத்தியங்கள் குரலில் ஆளுகை எனப் பலவற்றையும் மாற்றத் துணிந்தார். பக்திப் பாடல்கள் எனும் திரை சாராப் பாடல்களின் பேருலகில் மிகுந்த செல்வாக்கைப் பெற்ற வடிவமுறையைத் தன் பாடலுருவாக்கத்தில் பெரிதும் சார்ந்தார் என்றும் சொல்ல முடியும்.
கண்காட்சி அடுத்தாண்டு வெளிவந்த வண்ணப்படம். இதையும் நாகராஜனே இயக்கினார் . துள்ளும் மங்கை முகம் என்ற பாடல் பாலுவும் எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடியது.சற்றே நெடிய பாடலானை இதில் தொகைக்குரலும் தொடக்க இசையும் தாண்டிப் பல்லவியின் முதற்சொல்லைப் பாடுவதற்கு ஒன்றே முக்கால் நிமிடமாகும். மொத்தப் பாடலும் ஆறே கால் நிமிடத்துக்கு நீண்டு ஒலிக்கும். கேட்பதற்கு இனிய கானமது. இந்தப் பாடல் மொத்தமும் ஃப்யூஷன் இசைக் கோவைகளால் நிறைந்தொலிப்பது. இணைப்பிசைத் தூவல்களாகட்டும் பாடல் மடைமாறும் விதமாகட்டும் ரசிக்கத் தகுந்த பாடலாக ஒலிப்பது.
லயகலா ரத்தினம் டெங்கினிக் கோட்டை ஆர்.முனிரத்தினம் ஸ்பெஷல் தவுல் இசை இந்தப் படத்தில் பாடல்களிலும் பின் இசையிலும் இடம்பெற்றது. அவர் பெயர் தனி டைடில் கார்ட் போடுவார்கள்.
ஏபி நாகராஜன் இயக்கத்தில் காரைக்கால் அம்மையார் படமானது குன்னக்குடி இசையமைப்பில் கேபீ சுந்தராம்பாள் முக்கிய வேடத்தில் நடித்த படம். அவர் குரலில் பாடல்கள் ஓங்கி உயரந்தொட்டன. தகதகதக தகதகவென ஆடவா பாடல் இன்றும் நன்றாய் ஒலிக்கும் நாதமழை.
அன்னை அபிராமி படமெல்லாம் பாடல்கள். மொத்தம் 15 பாடல்கள் என நினைவு. இதை இயக்கியவர் ஜி.என்.வேலுமணி. கே.ஆர் விஜயா முக்கிய வேடம். இதில் வாகீச கலாநிதி எழுதிய
பேசாத தெய்வமெல்லாம்
பேசிடவே ஆசைகொண்டு
பிறந்து வந்த பிறவிகளே
பேசும் தெய்வங்களே
எனத் துவங்குகிற சோலோ பாட்டை சுசீலா பாடியிருப்பார். குழந்தையும் தெய்வமும் வெவ்வேறல்ல என்பதைப் பறைசாற்றும் பாடலிது. கேட்பவரெல்லாம் கரைந்துருகுவர்.
திருமலை தெய்வம் சிசுபாலன் மனிதனும் தெய்வமாகலாம் மேல் நாட்டு மருமகள் குமாஸ்தாவின் மகள் போன்ற படங்கள் குன்னக்குடியின் இசையமைப்பில் உருவாகின.
வியட்னாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் கந்தர் அலங்காரம் இந்தப் படத்தில் இடம்பெற்ற சந்தனம் மணக்குது பாடல் சேர்ந்தொலிக்கும் ஆண்குரல் பாடல்களில் என்றும் தீராவியப்பொன்றாக மனமுன் விரிகிற மாயமலர். இந்தப் பாடல் பல தினங்களைத் தொடங்கித் தருகிற காலைகானமாகத் தொலைக் காட்சிகளில் இன்றும் வலம் வருகிறது.
ராஜராஜசோழன் படம் நாகராஜன் குன்னக்குடி மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோர் இணைந்த படம். தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம் எனும் பெருமைக்குரியது.
புத்திமந்துடு என்ற தெலுங்குப் படம் கேவீ மகாதேவன் இசைத்தது. இதில் கண்டஸாலா பாடிய சோலோ ஒன்று.குடித்து விட்டு வீட்டை வெறுத்து மனசஞ்சலத்தோடு பாடுகிறான் நாயகன். அக்கட தேசத்தின் சூப்பர் ஸ்டார் அக்கினேனி நாகேஸ்வர ராவ் தான் அந்த நாயகலு. டாட்டா வீடுகோலு என்ற அந்தப் பாடல் அங்கே பிரசித்தம்.
படத்தைத் தமிழில் மீவுரு செய்தார் தேசியவிருது பெற்ற இயக்குனர் பி.மாதவன். சிவாஜிகணேசன் நாயகன். மனிதனும் தெய்வமாகலாம் என்பது பெயர். இங்கே இசை நம் குன்னக்குடியார். டி.எம்.சவுந்தரராஜன் பாடிய வாழ்க்கையே போதை நாடகம் அந்த சோலோவை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். தெலுங்கைக் காட்டிலும் தமிழில் அந்தப் பாடல் பெரிதாக இனித்தது எனச் சொல்ல வேண்டும். பொதுவாகவே சொற்களோடு சேர்ந்து தன் குரலைச் சோகத்திலாழ்த்துகிற வல்லமை தெரிந்தவர் டி.எம்.எஸ். இந்தப் பாடலின் இசைக்கோவைகள் குன்னக்குடியின் வெர்ஸடாலிடிக்கு உதாரணம்.
வாழ்க்கையே போதை நாடகம்
வாலிபம் காதல் காவியம்
உமர்கயாம் போட்ட ஓவியம்
நாளை என்று ஒன்று இல்லை இன்று வா(வாழ்க்கை)
பன்னீரில் திராட்சை பல்லாக்கு மெத்தை
பந்தாடும் மைதானங்கள்
சிவலோகமா சுகலோகமா
அதுவரை போகும் ஆனந்தம் இங்கே உண்டு
மதுரசம் காட்டும் மாயங்கள் எங்கே உண்டு
வேதங்கள் கூறும் ரகசியம் பெண்ணில் உண்டு
சரியெது தவறெது எவனைக் கேட்பது(வாழ்க்கையே)
அம்மன்கள் இங்கே ஆரத்தி இங்கே
அபிஷேகம் செய்யுங்களேன்
கடல் வேண்டுமா நதி வேண்டுமா
தீர்த்தங்கள் ஆடு பாவங்கள் தீர்ந்தே விடும்
தேவியின் பூஜை செய்தால் புண்ணியம் வரும்
திருவிளையாடல் என்பது தானே வரும்
அரகரா சிவசிவ சரணம் நீயப்பா(வாழ்க்கையே)
எம்ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமானார் குன்னக்குடி. அந்தப் படம் அவருக்குப் பலிதமாகவில்லை. பிறகு அதற்கு எம்.எஸ்.வி இசைத்தார். குன்னக்குடி இசையமைப்பில் எம்ஜி.ஆர் நவரத்தினம் படத்தில் நடித்தார். இருந்தாலும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் அகலவுயர ஆழநீளங்களோடு சற்றும் பொருந்தாத வேறொன்றாகவே நவரத்தினம் அமைந்துவிட்டது. எண்பதுகளுக்கப்பாலும் வெகு சில படங்களுக்கு இசையமைத்தார் குன்னக்குடி. தோடி ராகம் வித்யாசமான படம். பேசப்பட்ட பாடல்களைக் கொண்டிருந்தது. கொட்டாம்பட்டி ரோட்டிலே பாடல் இன்றும் ஒலிக்கும் வலிநிவாரணிப் பாடலாக ஒலிக்கிறது. இதே படத்தில் சரிகமபதநி எனும் சப்தஸ்வர தாளம் என்று தொடங்கும் பாட்டை பாலுவும் வாணி ஜெயராமும் பாடினர். வானொலி நிகழ்வுகள் பலவற்றில் நேயர்விருப்ப கானமாகக் காற்றை வருடியது அந்தப் பாடல்.
ராக பந்தங்கள் என்ற படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய மலரோ நிலவோ மலைமகளோ என்ற பாட்டை எப்படி மறக்க முடியும்..? இன்றெல்லாம் கேட்பதற்கான பெரும்ப்ரியப் பாட்டு அது. தேவி வடிவாக அமர்ந்தவள் யாரோ என்ற இடத்தில் மனசெல்லாம் குழைந்து மலர்போலாகும். நீ தானா அழைத்தது நீதானா நெடுநாளாய் நினைத்ததும் இதைத் தானா என் தேவி உனக்கிது சரிதானா என் தேவி உனக்கிது சரிதானா மின்னல் மின்னும் இருவிழியில் அன்னை உன்னை இதயமலர் அள்ளி அள்ளி கவிதை தருவேன் என்று எடுத்தாளும் போது எல்லாமே மாறிப் பாடலே நாமாய்க் கலைந்து கசிவதை உணர முடிகிறது.
1990 ஆமாண்டு திடீரென்று உலா வந்த நிலா என்ற பேரில் ஒரு படத்தை இசையமைத்து தயாரித்து இயக்குகிறார் குன்னக்குடி என்று நாளிதழ்களில் சேதி வந்தது. பாடல்களை வைரமுத்து எழுதினார். பாண்டியனும் சித்ராவும் நடித்த படம். மொத்தம் ஆறு பாடல்கள். பூர்ணச்சந்தர் எனும் புதியவரும் வாணி ஜெயராமும் சேர்ந்து பாடிய டூயட் பாடலான வெள்ளி அலைகள் துள்ளித் துள்ளி வருகுதே என்ற பாடல் கேட்க இனிமையாக இருந்தது. அந்தப் படம் படுதோல்வியை அடைந்தது. குன்னக்குடி அதன் பிறகு திரைத் துறையில் ஈடுபடவில்லை.
குன்னக்குடி வைத்யநாதன் ஒரு இசையமைப்பாளாராக தமிழ்த் திரையுலகில் இருபதாண்டுகளில் இருபதுக்கும் குறைவான படங்களே இசைத்திருந்தாலும் தவிர்க்க முடியாத பல பாடல்களை நல்கியவர்.வினோத பரிசோதனை முயல்வுகளை செய்து பார்த்தவர். இசையுள மட்டிலும் இருக்கின்ற பெயர்களிலொன்று குன்னக்குடியாரின் பெயர்.
வாழ்க இசை