இன்றெலாம் கேட்கலாம்
5 பொண்ணு புடிச்சிருக்கு
எஸ்.ஏ.ராஜ்கண்ணு தமிழ் சினிமாவின் முக்கிய முகங்களில் ஒருவர். ஸ்ரீ அம்மன் க்ரியேஷன்ஸ் 16 வயதினிலே,கிழக்கே போகும் ரயில், வாலிபமே வாவா போன்ற பாரதிராஜாவின் படங்களைத் தயாரித்தவர். கன்னிப்பருவத்திலே படமும் இவரது தயாரிப்புத் தான்.
இவற்றுக்கெல்லாம் அடுத்தாற் போல் ராஜ்கண்ணு தயாரித்த படம் பொண்ணு புடிச்சிருக்கு. பாரதிராஜா இளையராஜா எனும் இருவரிடமிருந்தும் விலகி கே.ரங்கராஜ் இயக்கம் மற்றும் சந்திரபோஸ் இசை என ராஜ்கண்ணு வேறு திசை கண்ட படம். இதில் தான் அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே எனும் S.ஜானகியின் பாடல் இடம்பெற்றது.
ரங்கராஜ் பாடல்களை மிக யதார்த்தமான அழகுடன் படமாக்குவதில் பெயர் பெற்றவர். இந்தப் படத்துக்கப்பால் இளையராஜா இசையில் நிலவு சுடுவதில்லை, உன்னை நான் சந்தித்தேன், உதயகீதம், கீதாஞ்சலி அமுதகானம் மனிதனின் மறுபக்கம் உனக்காகவே வாழ்கிறேன் பாடு நிலாவே நிலவே ஒரு சங்கீதம் கிராமத்து மின்னல் தர்மம் வெல்லும் எனப் 10 படங்களை இயக்கினார். பாடல்களின் பெருங்காலத்தில் ரங்கராஜின் பங்குபாகப் பகிர்வுகளாக அவற்றின் பல பாடல்கள் காற்றைக் களவாடின. நடுவே உயிரே உனக்காக படம் மட்டும் லக்ஷ்மிகாந்த் ப்யாரிலால் இசையில் இயக்கினார் ரங்கராஜ். 91 ஆமாண்டு சிவரஞ்சனி என்ற படத்தை புதுமுகங்கள் சுசித்ரா அரவிந்த் நடிப்பில் இயக்கினார். இதற்கு இசை அமைத்தவர் எஸ்.ஏ.ராஜ்குமார். இந்தப் படத்தில் மனோ பாடிய டூயட் பாடல் ஒன்று ரஞ்சனி சிவரஞ்சனி கண்மணி என் கண்மணி என்று ஆரம்பிப்பது. இன்றைக்குக் கேட்டாலும் இன்றெலாம் கேட்கலாம் என்பதான பாடல். சுசித்ரா அந்தக் காலகட்டத்தின் பிரபல விளம்பர மாடல் என்பது குறிப்பிடத் தக்கது. இதற்கடுத்து சரத்குமார் நடிப்பில் எல்லைச்சாமி என்ற படத்தை இயக்கினார் ரங்கராஜ். அதற்கும் எஸ்.ஏ.ஆர் தான் இசை. அதன் பின் அவர் எதுவும் படம் இயக்கவில்லை.
ராஜ்கண்ணு தயாரிப்பில் உருவான பொண்ணு புடிச்சிருக்கு படத்தில் ” சைட் அடிக்க போகாதீங்க பொண்ணுகளைப் பார்க்காதீங்க” எனும் முத்துபாரதி இயற்றிய பாடலும் ரொம்பவே பிரபலமானது. ஊருக்கு மேற்காலே எனும் இன்னொரு பாடல் புலமைப்பித்தன் எழுதிய பாடலும் ஜானகி பாடிய இதமான கானம். இந்தப் பாடலில் சந்திரபோஸ் இசையூட்டிய முரணிசைக் கருவிகளின் கூட்டு பாடலை முற்றிலும் புதிய கேட்பனுபவமாக்கித் தந்தது. ஊருக்கு மேற்கால அந்தப்புரம் செவந்திப் பூப்பூத்த நந்தவனம் சிங்காரச்சிட்டுக ஆணொன்னு பொண்ணொன்னு சங்கீதம் பாடுது கேளு மச்சான் எனத் தொடங்கிற்று.
ஜானகியின் குரல் பல பாடல்களில் மிக ஆழமான புரிந்துணர்வை நிகழ்த்தித் தருவது. அந்தரங்கமான ஒன்றாகப் பல பாடல்களை நிகழ்த்திக் காட்டிய குரல். பல்லவியில் வெகுவாகப் பாடலின் இசை வரையறைக்குள் இயங்குகிற அதே குரல் சரணத்தில் பேருருக் கொள்வது இயல்பாக ஜானகி நிகழ்த்திக் காட்டுவது. ஜானகி தென் நிலத்தின் லதா மங்கேஷ்கர் என்று சொல்லும் பொழுதே வட நாட்டின் ஜானகி என்று லதாவையும் சேர்த்தே சொல்ல முடியும். எந்த விதத்திலும் லதா மங்கேஷ்கரின் குரலுக்குக் குன்றாத ஒளிர்தலைக் கொண்டு ஒலிப்பது ஜானகியின் சிறப்பு.
ஒவ்வொரு பாடலுக்கும் தன் குரலைத் தனித் தனியாக அலங்கரித்துக் கொள்வது அவரது தனித்துவம். அந்தப் பாடலில் என்ன மாதிரியான பாய்ச்சல் என்பதை அதன் ஆழத்திலிருந்தே எடுத்துக் கோப்பது அவரது ஸ்டைல். இன்னொரு அழகு என்னவெனில் ஜானகியின் குரல் வேறு யார் குரலைப் போலவும் ஒலிக்காது. காடெல்லாம் பிச்சி என்று ஒரு நாட்டுப்புறப் பாடல் தொடங்கும். அப்படிக் காடெல்லாம் மணக்கும் பிச்சி அவரது குரல்.
பல ஆயிரம் பாடல்களைப் பாடிய குரல் மாமலர் ஜானகி. அவருடைய குரலில் சந்திரபோஸ் இசையமைப்பில் புலவர் புலமைப்பித்தன் இயற்றிய இந்தப் பாடல் அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே {To See The Song Click The UNDERLINED TEXT} இரவெல்லாம் நில்லாமல் பெய்யும் மகாபெரிய மழை ஒன்றினைப் போல் ஒலிக்கிறது. கிட்டத் தட்ட 28 வருடங்களுக்கு முன்பாகப் பதிவான இந்தப் பாடலைக் கேளுங்கள். இன்றைக்குத் தான் சில மணி நேரங்களுக்கு முன்பாகப் பதிவு செய்தாற் போன்ற சில்வண்டு ரீங்கரித்தலாக மனமெல்லாம் நிரம்புவதைக் கேளுங்கள்.
அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே
இந்த கண்ணுல தோணுது மனம் கங்கையில் ஆடுது..
(அந்த)
நாளை விடிகாலையில் நாதஸ்வர ஓசையில்
மாலையிடும் வேளையில் என்ன மயக்கம்
முதல் நாள் இரவை மனம் எண்ணும்போதிலே
அடடா எனக்கே இத சொல்லத் தோணல
அலை பாயுது விளையாடுது நெஞ்சம் வானிலே
(அந்த)சின்னவளின் சேலையை மன்னனவன் ஆசையால்
மெல்லத் தொட்ட மாதிரி ஒரு கனவு
மெதுவாய் விழித்தேன் அந்த ராசா காணல
அதனால் எனக்கே இரு கண்ணும் மூடல
தவிச்சேன் உடல் கொதிச்சேன் இந்த வாடக் காத்துல
(அந்த)
புலமைப்பித்தனின் எளிய நேரான தமிழும் ஜானகியின் யூகிக்க முடியாத குரலும் சந்திரபோஸின் புதிர்பெருகும் இசையும் சேர்கையில் இந்தப் பாடல் தீராப் பேரழகென்றே நேயர்கூட்டத்தை வென்றெடுக்கிறது. இன்றெலாம் கேட்பதற்கான திறப்பும் சிறப்புமான பாடல்.
வாழ்க இசை