(சவிதா எழுதிய ” உ பா ச கி “ தொகுப்புக்கான அணிந்துரை)
கலை எதையும் கலைக்கும். எல்லாவற்றையும் வினவும். எதன் மீதும் ஐயமுறும். எப்படியானதையும் மறுதலிக்கும். நிரூபணங்களை நொதிக்கச் செய்யும். சாட்சியங்களை எள்ளி நகைக்கும். உரத்த குரலைத் தீர்ப்பாய் எழுதும். மௌனத்தைக் கைப்பற்றித் தண்டனை செய்யும். அதுவே வலி, மருந்து, மற்றும் நிவாரணம் யாவுமாகும். சுயத்தின் நமைச்சல் கவிதையாகக் கூடும். ‘ஏன் இந்த வேண்டாத வேலை?’ என்று உள்ளே ஒலிக்கும் அதட்டலை அலட்சியம் செய்து மொழியின் கரங்களைப் பற்றுகிற தேவ கணம் கவிதை தன் பேய்மை பொங்கும் பற்களால் முதல் முறை கடிக்கும். ‘கவிதை என்பது ஸோம்பியாக மாறுவது’. திரும்ப முடியாத குகைவழியோட்டம்.
மொழி தன் தேர்ந்தெடுத்த அடிமையிடம் “எஜமான், நானுங்கள் அடிமை!” என்று பவ்யம் பேசுகிறது. லாகிரிப்பழக்கம் போலவே நிழல்சுடும் கணங்களைப் பரிசளிக்கிறது. காலமும் மொழியும் ஆடிப்பார்க்கும் விளையாட்டின் சதுரங்கக் காய்களாகவே இருந்திருந்து தீர்கின்றன வாழ்வுகள். கவிதை எழுதப்படாத மொழி என்று எதாவது இருக்குமா என்ன?. தன் அறிதலினூடாக மனிதன் நிகழ்த்தவல்ல மாபெரிய காரியம் கவிதை. அது உடைக்க முடியாத ஒற்றை. பகிர்ந்தளிக்க முடியாத செல்வந்தம். வசியத்தின் உட்புறம். அறியக் கூடாத ரகசியம். அல்லது யாரும் சென்று பார்க்காத வனம். எப்போதுமே பெய்கிற மழை. ஒப்புக் கொடுத்தலின் உன்னதம். சுயமிடுக்கு. மொழியை ஏற்பதும் மொழி ஏற்பதுமாகக் கவிதை என்பது உயரிய-வரம், மகா இலக்கியம்.
உபாசகி என்ற தலைப்பு சற்றே பொறாமையூட்டிற்று. “இதனை மட்டும் எனக்குத் தந்து விடுங்களேன்” என்று மனசுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்ட பிறகு பொதுமுகத்தின் சாத்வீகத்துடன் ‘நல்ல தலைப்பு’ என்று பாராட்டியபடி அதனின்றும் சற்றே விலகி நடக்கத் தலைப்படுகிறேன். தலைப்பு பலமிகுந்த ஈர்ப்பினை ஏற்படுத்தி விடுகிறது.
இத்தொகுப்பின் ஆகச்சிறந்த வரி என்று இதனைச் சொல்வேன்
வான் பார்த்துக் கிடப்பதென்பது
அவ்வளவு இனிய ஒன்றா
கவிதை ஆகாசப் பித்து. பித்துப் பிடிப்பதில் இஃதொரு வகை. எல்லாமே எல்லோரைப் போலவும் சகஜமாய் இருந்து கொண்டிருந்தாலும் வானம் மீதான வியத்தல் அபரிமிதமாக இருக்கும். அடிக்கடி வான் பார்த்து அப்படியே மணிக்கணக்கில் லயிப்பது. நட்சத்திரங்களை எண்ணுவது. அவற்றில் ஒரு சிலவற்றுக்குப் பேர் வைப்பது. நிலாவை சொந்தம் கொண்டாடுவது. வானத்தில் தென்படுகிற நிறங்களின் முரண்களை எல்லாம் எப்போதும் கணக்கெடுத்தபடி இருப்பது. மொட்டை மாடியில் அல்லது பரந்த வெளியில் எதாவதொரு இடத்தில் அமர்ந்தபடி வானத்தைப் பார்த்துப் பேசிக்கொண்டிருப்பது. சற்றே மேல் நோக்கிய விழிகளோடு நிரந்தரிக்கிற வாதையின் பேர் தான் ஆகாசப்பித்து. கவிதை என்பதும் அவ்வண்ணமே நிகழும் பித்துத் தான்.
ஏன் காதலை எழுத வேண்டும். காதலை எழுதுவதற்குத் தான் மனங்கள் இருக்கின்றனவே காமத்தை எழுதிப்பார்க்கத் தானே உடல்கள் அப்படியானால் உடல்களையும் மனங்களையும் எழுதிப் பார்க்கக் கவிதைகள் தானே தேவைப்படுகின்றன? காலம் காலமாய் உலகின் சகல நிலங்களிலும் எழுதிக் குவித்த பின்னரும் தீராத கருப்பொருளாய் உடலும் மனமும் எஞ்சுகின்றன. உடலும் மனமும் எஞ்சாத ஓர் புள்ளியில் உருக்கொள்கிறது கவிதை. புழங்கிச் சென்ற மொழியில் விளைந்து விடுகிற நல்நெல் என்று கவித்துவமாய்ப் பகிரத் தோன்றுகிறது. காதலை எழுதுவது கடனோ கடமையோ அல்ல. அது நிறம் மணம் குணம் ஏதுமற்ற வெற்றுத் திரவத்தை உட்கொள்ளும் நியம கணம்.
காதலைத் தன் சம்மட்டிச் சொற்களால் எழுதிப் பார்க்கிறார் சவீதா. அவனும் நானும் மற்றும் நானும் நீயுமாய்ப் பெருகி வழிந்தோடுகிற அன்பின், இரக்கத்தின், சுயமருகுதலின், வதங்கலின், விடுபடுதலின், இயலாமையின், பிரார்த்தனையின், எதிர்பார்த்தலின், கைவிடுதலின், துரோகத்தின், நிராகரிப்பின், நற்கணங்களின், தனிமையின், துவளுதலின், கையறுதலின், வீழ்தலின், நம்பிக்கையின், எதிர்பாராமையின் மற்றும் வாழ்கணங்களின் துத்துளிக் கவிதைகள் இவை. அந்தரங்கத்தை ஆயிரமாயிரம் துண்டுகளாய் உடைத்துச் சிதறச் செய்கையில் ஒன்று பிறவற்றோடு நிகழ்த்திப் பார்க்கிற ஆரவாரப் பொழுதிடையே நிகழ்ந்திட வல்ல ரகசியக் கேவல்கள்.
இந்தத் தொகுப்பின் கவிதைகளை இன்னும் செப்பனிட்டிருக்கலாம். எடுத்தெறிந்து செதுக்கிச் செம்மை நோக்கியிருப்பின் இன்னும் அர்த்தப்பூர்வமும் கட்டும் செட்டுமான கவிதைகளாக அவை விளங்கியிருக்கக் கூடும். இது குறை சொல்வதல்ல. சவீதா தன் கவிதைகளை அவற்றின் போக்கில் வனைந்தெடுத்த சிற்பங்களாக முன் நோக்கத் தருகிறார் என்பதைச் சொல்வதற்கான முகாந்திரம் அது. கவிதைகளுக்கான மொழியும் கவிதைகளை வார்த்தலும் ஒரு புறம் அபாரங்களைக் குறிபார்த்து அடித்து விடுகிற வல்லமையோடு நிகழ்த்துகின்றன.இன்னொரு புறம் ‘நிறை பர ப்ரும்மம், ஸ்மரணை’ போன்ற சொற்கள் கனத்து உறுத்துகின்றன. இவற்றைத் தவிர்த்திருக்கலாம்.
சிதறுண்ட கூலம்/ சிறுவெட்டனத் தொடங்கும் புலரி/கூகைகள் குழறும் இரவுகள்/ இரவுக்கான அவி போன்ற புத்தம் புதிய சொற்கூட்டுகள் மிகவும் வசீகரிக்கின்றன.
‘லேசாய்ப் பிறை வடிவில் நக அழுத்தமொன்று’ என்பதைக் கடக்கும் போது கீறலுக்கு முந்தைய கணத்தின் வெம்மையில் விகசிக்கிறது மனத்தின் உடல்.
‘நர்த்தனமிடுகின்ற
செஞ்சாந்துக் குழம்பிட்ட
பாதங்களின் வளைவுகளில்
சிரச்சேத இயந்திரங்களின்
அபாய வளைவு’
என்றெழுதுவது மாபெரும் கேன்வாஸை மனச்சுவரில் விரித்து வைக்கின்றது. ஒன்று மற்றொன்றாக மாறுகிற அனாயாச கணத்தினூடாக வாசிப்பவன் கரைந்து காணாமற் போவது வாசிப்பனுவத்தில் விளைகிற நல்வினை. அதனை அதிகம் சாத்தியம் செய்கின்றன ‘உபாசகி’ தொகுப்பின் அனேகக் கவிதைகள்.
தாபமேறிய விலங்கு நான்.
தீயில் உருகிடும் கொழுஞ்சுவை ஊன் நீ
இத்தனை பலமாகச் சொல்ல முடியுமா என்று அப்படியே விக்கித்து நின்றுவிடுகிற நிழலைக் கூட வரச்சொல்லி அதட்டுவதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது. வெற்றிலைபாக்கில் வாய் சிவத்தல் பற்றி இப்படி எழுதுவது எத்தனை ரௌத்ரம் பாருங்கள் – ‘மூர்க்கமுறு மோகம்’.
“கண்களில் மறைப்பது கண்ணீரா வியர்வையா” என்கிற வரி லெவல் க்ராஸிங்கில் கதவு திறப்பதற்காகக் காத்திருக்கக் கூடிய காரணமற்ற தாமதங்களில் ஒன்றைப் போல் காட்சி மரத்துக் கனக்கிறது.நெடுநேரம் கடந்து செல்லாமல் மன ரயில் சமன் குலைந்து அல்லாடுகிறது.
“எரிந்துபோனபின்னும்
எழுந்தமரும் சவம் போன்றே
ஆகிக்கொண்டிருக்கிறது
அவன் முகம்”
தமிழுக்கு மிகப் புதிதான சொலல் முறைகளும் சொல்லாடல்களும் எவர் கைப்பற்றிக் கவிதையுள் நிகழ்ந்தாலும் நல்லது. கவிஞர் சவீதா நிச்சயமாக அப்படியான சொல்வசியங்களைச் செய்வதற்கான நிறைதகுதிகள் கொண்டவர் என்பதை மேற்காணும் ஒற்றைச் சித்திரம் ஓங்கி ஒலிக்கிறது.
நடுவீதியில் தடுமாறிய
கண்திறவா நாய்க்குட்டி
வீட்டில் சேர்த்துவிட்ட கரங்களை
நாவினால் துளாவியதைப் போன்றே
நன்றியோடு பத்திரப்படுத்திக் கொள்கிறேன்
இந்த இரவை
மேற்காணும் கவிதையில் “நன்றியோடு” என்ற சொல் தேவையில்லை. அதை வாசிப்பனுபவம் உணர்த்திவிடும். அதைத் தாண்டி இந்தக் கவிதை நம்மை அயர்த்துகிற அபாரம் கூறத் தக்கது.
இன்னொரு கவிதை முடிவதை இங்கேயே சேர்த்துக் கூறத் தோன்றுகிறது
கைவிடப்பட்ட நாய்க்குட்டிக்கும்
கழற்றி எறியப்பட்ட நேசத்துக்கும்
ஒரே உணர்வு தான்
இல்லையா
மனமென்பது கண் திறவா நாய்க்குட்டியாகத் தன்னை எடுத்தேந்துகிற கரவெம்மையை நாளும் உபாசித்தபடி வாழ முற்படுகிறது. பெரும்பாலும் கைவிடப் பட்ட நாய்க்குட்டியாய் விம்மிவெதும்பி வெடித்தலைகிறது. கவிதைகள் விரிகொன்றை மலர்கள் உதிரும் பெருவனக் கல் இருக்கையில் தனித்திருக்கும் நாய்க்குட்டியின் படத்தைத் தன் முகப்பாகக் கொண்ட அத்தகைய நாய்க்குட்டிகளின் ஆல்பமாக உருக்கொள்கின்றன. புரட்டிப் பார்க்கிறவர்களின் தன்னியல்புக் கண் துளிகளைப் பருகி உயிர்த்துக் கொள்கின்றன.
திரும்பத்திரும்பத் துழாவி
திரும்பும் தொட்டி மீனென
சுழன்று திரும்புகிறேன் உன்னில்
அந்த மீன் அதன் தொட்டி அதற்கேயுண்டாகும் துழாவல் இவற்றினூடாகக் கவிதையில் மட்டுமே சாத்தியப்படுகிற திரும்புதல் இவற்றை எல்லாம் நுட்பமாக இனம் காணும் மொழிமனம் வாய்ப்பது கொடுப்பினை. சவீதாவின் மொழிமனத்தை “மேலும் கவி செய்க, மென்மேலும் காதல் எழுதுக, இன்னுமின்னும் மின்னும் வான் பார்த்தல் தொடர்க” என்று வாழ்த்துகிறேன். உபாசகி கவிதைத் தொகுதி பெருவொளி பெற்று மிளிரட்டும்.
வாழ்தல் இனிது
15.03.2021