மது மாது மழை
முடிவுற்ற சாலையின்
கடைசி வீட்டிலிருந்து அவன் வெளிப்படுகிறான்
அவனது கையில் இருந்த
வயலினை சாலையின் நடுவாந்திரம் வைக்கிறான்
வயலின் பறந்துவிடாதிருக்க
அதன் தலையில் ஒன்றும் வாலில் இரண்டுமாகச்
சிறுகற்களை வைக்கிறான்
வீட்டின் உள்ளே
சென்று திரும்புகிறவனின் கையில்
ஒரு கிளிக்கூண்டு இருக்கிறது
அதனை
வயலினுக்குப் பக்கவாட்டில் வைக்கிறான்\
இந்தமுறை
வீட்டிலிருந்து வருகிறவன் கையில்
நாலைந்து புத்தகங்கள்
படித்துக் கொண்டிருக்கும் பக்கங்களை
விரித்து குப்புறக் கவிழ்க்கிறான்
வயலினுக்கு அப்பால்
ஒரு திவானை எடுத்து வந்து விரிக்கிறான்
ஒரு தட்டில் நொறுக்குத் தீனிகள்
வகைபிரித்து அடுக்கப்பட்டிருப்பதை
கிளிக்கூண்டுக்குப் பக்கத்தில் வைக்கிறான்
வெவ்வேறு தேசங்களிலிருந்து
இறக்குமதி செய்யப்பட்ட
மதுபோத்தல்கள் மூன்று
அவற்றில் இரண்டு
ஏற்கனவே உபயோகிக்கப் பட்டவை
ஒன்று உறைபிரிக்காத திரவம்
அவனது
வலது கரத்திலிருந்து
நடுவிரலைக் கட்டை விரலோடு இணைத்து
உதடுகளுக்குள் குவித்து சீழ்க்கையடிக்கிறான்
மெல்ல வயலினை
அதன் மேலிருக்கிற கற்களின்
பிடியிலிருந்து விடுவிக்கிறான்
வயலின் ஒரு சகியைப் போல்
அவனது கரங்களுக்கு இடையில் நாணுகிறது.
அவளது இடுப்பில்
ஒரு தேர்ந்த வாசிப்பாளனாகத்
தன் புதிய இசைக்குறிப்பை வாசிக்கிறான்
அவள் தன் உடலைக் குறுக்குகையில்
அவளது இடுப்புச்சரம் அறுந்து
சாலையெங்கும் மணிகள் தெறிக்கின்றன
அவள் அவனது காதோடு
“நீ ராட்சசன்..”என்று முணுமுணுக்கிறாள்
அன்றைய தினத்திற்கான
தனது வார்த்தையாக அதனைப் பற்றிக்கொண்டு
“ராட்சசன்…ராட்சசன்..”என்று
திரும்பத் திரும்பக் கத்துகிறது கிளி
கவிழ்த்து வைக்கப் பட்ட
புத்தகங்களில் ஒன்றை எடுத்து
அன்பிற்கான புதிய பாடலைப் பாடுகிறான்
இப்போது
முயங்கி முடித்த அயற்சியில்
அவனது மடியில் தலை சாய்த்து
உறங்கிக் கொண்டிருக்கிறாள் வயலின்
புத்தகத்திலிருந்து கண்பிரிக்காமல்
கூண்டின்
சின்னஞ்சிறு கதவைத் திறந்து
கிளியை வெளியேற்றுகிறான்
தானறிந்த
அத்தனை வார்த்தைகளையும்
இரண்டு சிறகுகளால் உதிர்த்தபடி
பறந்து செல்கிறது கிளி
அவன்
இரண்டு குவளைகளை நிமிர்த்துகிறான்
ஒன்றில்
மூவகை திரவங்களையும் கலந்து
பாதிக்குவளையை நிறைக்கிறான்
இன்னொன்றில்
சிவப்பு ஒயினை மட்டும்
இரண்டு விரற்கிடை அளவுக்கு ஊற்றுகிறான்.
மழை துவங்குகிறது.
உடல் சிலிர்க்க எழுந்துகொள்கிறாள் வயலின்
அவளது முகத்தில் துளிர்க்கிற
நீர்ப்பூக்களைத்
தன் விரல்கொண்டு அகற்றுகிறான்
அவனது விரல்மென்மைக்கு
நன்றி சொல்கிறாள் வயலின்
“ராட்சசன் என்றாய்” என வினவுகிறான் அவன்
அந்தக் கேள்விக்குத்
தன் நாணத்தை
மீண்டும் பதிலாக்குகிறாள் அவள்
இரண்டு குவளைகளிலும்
மழை நிரம்பியிருக்கிறது
அவன் தனக்கானதை எடுத்துக் கொள்கிறான்.
அவளிடம் சிவப்புஒயினை உபசரிக்கிறான்
இரண்டு குவளைகளும்
லேசாக முட்டிக்கொள்கின்றன
மதுவாய்ப் பொழிகிறது மழை