கவிதையின் முகங்கள் 6

   கவிதையின் முகங்கள்
6 மெய்ப்பாட்டு விள்ளல்கள்


The PIP (Project for Innovative Poetry) Blog: Antonio Machado


My philosophy is fundamentally sad, but I’m not a sad man, and I don’t believe I sadden anyone else. In other words, the fact thatI don’t put my philosophy into practice saves me from its evil spell, or, rather, my faith in the human race is stronger then my intellectual analysis of it;there lies the fountain of youth in which my heart is continually bathing.

-Antonio Machado


விதைக்கும் காலத்துக்குமான தொடர்பு என்ன வகையிலானது? கவிதையோடு பொதிந்துகொண்டபடி நார் பிரியா மல்லியாக சிக்குண்டு கிடப்பது எதுவும் கவிதையில் எப்போதாவது நிகழும் அசாதாரணமா அல்லது அப்படி ஒன்றைத் திட்டமிட்டு அல்லது எதிர்பார்த்து உருவாக்கிவிட முடியுமா? காலத்தின் நெடி கவிதையின்மீது ஒரு நிரந்தர சுகந்தமாகவோ அல்லது அந்துப்பூச்சியை வரவழைத்துவிடக்கூடிய முடைநாற்றமெனவோ எதாவது ஒன்றாக மாறுமா அல்லது யாரும் சென்று பார்த்திராத நீர்ப்பரப்பு தன்மீது மெழுகிக்கொண்டிருக்கிற கூரைபோல் காணக்கிடைக்கிற பாசிபடர்தல்போல் மற்றொன்றாய் தெரியவாய்க்கிற வேறொன்றா?

உண்மைகளுக்கும் தத்துவங்களுக்கும் வழங்கப்படுவதை விடவும் மாபெரிய வணக்கங்களும், மிகையான பொருட்படுத்துதல்களும் நிலம், இனம் என எந்தப் பாகுபாடுமின்றி சகல மொழிகளிலும் கவிதைகளுக்கு மட்டும் ஏன், இந்த மாபெரும் மரியாதை? தத்துவங்களுக்கும் உண்மைகளுக்குமான பயன்பாட்டு மரியாதை கவிதைகளுக்கு இருக்கிறதா? உண்மையில் எங்கு, எவ்விதம் செல்லத்தக்கது கவிதை? போற்றியபடியே சற்றுத் தள்ளினாற்போல் கையாளப்பட்டுக்கொண்டிருக்கிறதா கவிதை? சகலத்தின் அரசியலில் எப்போதும் மயக்கத்திலாழ்த்தியபடி கவிதையைப் பராமரித்துக்கொண்டிருப்பது அதன்மீதான அச்சத்தின் விளைவா? பூட்டுகள் தானாய்த் திறந்துகொள்ளக்கூடிய ஒரு அற்புத வருகை தினத்தில் கவிதைகள் நிரந்தரமாய் ஒளிரத் தொடங்குமா அல்லது அவை ஒளிவனத்தில் வெறும் பூச்சிகள்தானா? தருவதற்கும் பெறுவதற்கும் இடையில் என்னவாக உறைகிறது கவிதை? அபாயமாக இப்படிச் சிந்தித்துப் பார்க்கலாம். ஒரு மொழி இல்லாமற் போனபிறகு அதன் கவிதைகள் என்னவாய் எஞ்சும்?

மனதுக்கும் புத்திக்குமான சமன்பாடு என்ன? ஒருவகையில், காரணங்களற்றுப் போவதும் அதிகக் காரணங்களும் ஒன்றுதானா? எல்லாவற்றையும் தொகுத்துப் பார்ப்பது ஒருவித நோய்மைதான். எதையும் அறிதலின்பின்னால் பயன்பாடாக மாற்றிக்கொள்ளாமல் இருந்திருந்தால் இந்த உலகம் இப்படியே இருந்திருக்காது என்பதிலிருந்து இந்த வாக்கியம் எழுதப்பட்டிருக்காது என்பது வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்? வள்ளுவரின் கைத்தடியையும், பாரதியின் கண்ணாடியையும் கொண்டு நவகாலத்தைப் பார்ப்பது சரிதானா? ஞானத்தைச் சுமக்கிற கலயத்தின் கனம் தாளவொட்டாமல் இறக்கி வைத்துவிட்டு சும்மாட்டுத் துணியை உதறுவதுபோல் கவிதைகள் உதிர்கின்றனவா? மௌனம் எல்லாம் தரும் என்றால் முன்பின் சொற்களின் ஊடாக எதற்குத் தியானம்? ஞானம் வலி என்றால் எது உல்லாசம்?

அம்ஷன் குமார் எழுதி, அன்னம் பதிப்பகத்தின் வெளியீடாக ‘எழுத்தும் பிரக்ஞையும்’ எனும் கட்டுரை நூல். அதன் தலைப்புக்கான கட்டுரையின் இடையில், ‘அவன் நல்ல எழுத்தாளன்தான், ஆனாலும் அவனைச் சிறந்த எழுத்தாளன் என்று கூறிவிட முடியாது. ஏனெனில் அவன் திறமைபெற்றவனே ஒழிய, வரம் (ரீவீயீt) பெற்றவனில்லை என்று விமர்சகர்கள், எழுத்தாளர்கள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பதைப் பார்த்திருக்கிறோம். இங்கே குறிப்பிடப்படுகிற வரம், உண்மையில் எடுத்து அலசி ஆராய வேண்டிய ஒரு பதம். எப்படி எழுதினேன் என்றே தெரியவில்லை என்று தன் மனதினின்றும் தானே விலகி நின்று அயர்ந்து நோக்குகிற கணம், மீண்டும் மீண்டும் கலைஞர்களின் வாழ்வில் வந்துபோகிற விடயம். அதனைப் பற்றிய நீண்ட பொழிதலை தெளிவான விளக்கத்தை முன்வைக்கக் கூடிய கட்டுரையாக அம்ஷன் எழுதிய மேற்படி கட்டுரை விளங்குகிறது.

தேவதச்சன் | அழியாச் சுடர்கள்

ஒளி எனும் தேவதச்சனின் இந்தக் கவிதை உயிர்மை தொகுத்து வெளியிட்டிருக்கிற முழுக் கவிதைத் திரட்டான ‘மர்மநபர்’ என்பதிலிருந்து

ஒளி

 

கவிதை எழுதுவது
என்பது
ஒரு
குண்டு பல்பை
ஹோல்டரை மாட்டுவதுபோல் இருக்கிறது
முழுமையானதின்
அமைதியை ஏந்தி
பல்ப்
ஒளிவீசத் தொடங்குகிறது.
ஒரு
மெல்லிய இழை
நிசப்தத்தில்
எவ்வளவு
நீள
தன் கணம்

தேவதச்சனின் கவிதைகளை அணுகுவதில் வாசகனுக்கு ஒரு ஏகாந்தத்தை அணுகித் திரும்புகிற அயர்தலின் பேரளவு மிக நிச்சயமாக ஏற்படுவது அவர் எழுத்தின் பெருமை. எழுதிய காலத்தோடு உறைந்துவிடாமல் திசைகளற்று அலையத் தெரிந்த இறகுகளெனவே அவரது கவிதைகள் நீச்சல் செய்கின்றன. எந்தக் கணத்தின் நுனியில் நின்று புரட்டிப் பார்த்தாலும் அதற்கே உண்டான சத்த மௌனங்களுக்குள் ஒலித்துவிடுகிற காலச்சமன் பொதுவாய் கவிதைகள்வழி கிட்டவாய்க்காத எட்டாக்கனி.

ஒரு பிதற்றலைப் பகிர்ந்துகொள்ளக் கூடிய பித்துநிலையின் இருவேறு மாந்தர்களைப் போல அர்த்தமற்ற சமகால விள்ளல்களாக கவிதை என்பது ஆகிப்போகுமோ என்னவோ.

கவிதை என்பதை சன்னதம் எனச் சொன்னால், அதன் புதிர்த்தன்மை பேசுபொருளாகிறது. ஒரு கணிதத்தை அணுகுகிறாற்போல் கவிதையை அணுகுவதும் ஓசைமிகு நடத்தல்தான்.

No description available.

காதல் ஒரு கதவு
கதவைத் திறந்தேன்
ஏதுமற்ற சூன்யம்
கதவைத் திறந்தேன்
யாவுமுற்ற வெளி
பூட்டு இல்லாக் கதவுக்கு
ஆயிரம் சாவிகள்

கல்பனா ரத்தன்
மனம் உதிரும் காலம்
கல்பதரு பதிப்பகம்

மேற்காணப்படும் கவிதை வழமையிலிருந்து விலகுவதற்கு நான்காவது வரியில் இரண்டாவது முறையாக இடம்பெற்றிருக்கும் ‘கதவைத் திறந்தேன்’ எனும் பதத்தைச் சுட்ட விருப்பம். ஒரு எளிய கதவைத் திறப்பதன் வழியாக, அறிந்த ஒளியை நோக்கி ஓடக்கூடிய கவிதை, இல்லாத இன்னொரு கதவைத் திறந்ததாய்ச் சொல்லும்போது நிகழ்த்தித் தருகிற திசைமாற்றம் இந்தக் கவிதையை மிக முக்கியமான ஒரு அனுபவமாக மாற்றித் தருகிறது. கல்பனா ரத்தன், அதிராத மென்குரல் கவிதைகளை சாசன வாக்கியங்களாக்கி மொழிவெளியில் படர்த்திச் செல்லுகிறார்.

…..

இயலாதவன்
குழந்தைகளிருக்கிற வீடுகளில்
இந்த
வெறுங்கைகளை வைத்துக்கொண்டு
நுழையாமலே இருந்திருக்கலாம்

கு.விநாயகமூர்த்தி
நூலாம்படை

கலக்கல் ட்ரீம்ஸ் வெளியீடு


நூலாம்படை | Buy Tamil & English Books Online | CommonFolks

ஒரு கனம் மிகுந்த கதையை கவித்துவச் செறிவுகொண்ட மொழிதலும், எதையும் வலிய அணிவிக்காத மொழியாடலும் கொண்ட, சமீபத்தில் ஒளிபிசைந்த சொற்கள் ரசிக்கச் செய்கிற விநாயகமூர்த்தி, பந்து வீச்சாளன் எதிர்பாராத கணத்தில் மட்டையை உயர்த்தி, பந்தை வான் நோக்கித் திருப்பிவிடும் சாகசக் காரியம் நன்கு கூடிய புதிய கவிசொல்லி.

அன்டோனியோ மச்சாடோ 26 July 1875 – 22 February 1939

அன்டோனியோ மச்சாடோ ரூயிஸ் 20 ஆம் நூற்றாண்டின் ஸ்பானிஷ் மொழியில் சிறந்த கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் செவில்லில் பிறந்தார். மச்சாடோ துவக்கத்தில் இன்ஸ்டிடியூசியன் லிப்ரே டி என்சென்சாவில் படித்தார். பின்னர், அவர் மாட்ரிட்டில் சான் ஐசிட்ரோ மற்றும் கார்டனல் சிஸ்னெரோஸ் ஆகிய பள்ளிகளில் தனது படிப்பை முடித்தார். பாரீஸில் ரூபன் டாரியோவைச் சந்தித்து கார்னியர் என்ற வெளியீட்டு நிறுவனத்தில் சில மாதங்கள் பணிபுரிந்தார். மாட்ரிட்டில் மச்சாடோ இலக்கிய மற்றும் நாடக உலகில் பங்கேற்றார், மரியா குரேரோ மற்றும் பெர்னாண்டோ தியாஸ் டி மென்டோசா குழுவிலும் அங்கம் வகித்தார் 1907ஆம் ஆண்டில், மச்சாடோ சோரியாவில் பிரெஞ்சு மொழிக்கான இருக்கையை வகித்தார், ஃப்ரெஞ்சு கற்பிக்கும் ஆசிரியப் பணியில் அவர் உளப்பூர்வமாக ஈடுபட்டார். செகோவியாக்குச் சென்ற மச்சாடோ அங்குள்ள செகோவிய பல்கலையில் சில ஆண்டுகள் பங்களிப்புச் செய்தார். 1920 முதல் 1930 வரையிலான காலகட்டங்களில் மச்சாடோ, தனது சகோதரர் மானுவேலுடன் இணைந்து நாடகங்களை எழுதினார். ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரின்போது அவர் மாட்ரிட்டில் தங்கி குடியரசுக் கட்சியின் வெளியீடுகளில் தன் பங்கேற்பை நல்கினார். 1939ஆம் ஆண்டில் அவர் வலென்சியாவுக்கு சென்ற அவர் 1939இல் கோலியூரில் இறந்தார். கோலியூரில் உள்ள அவரது கல்லறை இப்பகுதிக்கு வருகைதரும் ஸ்பானிஷ் மக்களுக்கு ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது.

அண்டோனியோ மச்சாடோவின் இரண்டு கவிதைகள்.

தமிழில்: தென்றல் சிவக்குமார்

1 பாதசாரி

 

பாதசாரியே, இங்கே பாதையேதுமில்லை.
உன் தடங்களன்றி வழி ஒன்றும் இல்லை.
பாதசாரியே, இங்கே பாதையேதுமில்லை
முன்னே சென்று உனக்கான பாதையை அமைத்துக் கொள்
சஞ்சரித்த இடங்களைத் திரும்பிப் பார்க்கையில்,
அந்தப் பாதையில் இனி ஒருபோதும்
உன் தடம் பதியாதெனப் புலனாகும் தொலைவுவரை
முன்சென்று உனக்கான பாதையை அமைத்துக் கொள்
பாதசாரியே, இங்கே பாதையேதுமில்லை
இருப்பதெல்லாம்
தண்ணீர்மேல் நிகழும் தடம் மட்டுமே

 

2 நேற்றைய உறக்கத்தில் ஒரு கனவு- அருளப்பட்ட மாயை

 

நேற்றைய உறக்கத்தில் ஒரு கனவு-அருளப்பட்ட மாயை
மனதினூடாகப் பிரவகித்தது ஒரு நீரூற்று
முன்னர்ப் பருகிடாத உயிர்ச்சுனைத் திரவமே
நீயென்னை அடைவதற்கான ரகசியப் பாதை எது

நேற்றைய உறக்கத்தில் ஒரு கனவு-அருளப்பட்ட மாயை
என்னுள்ளே இருந்ததோர் தேன் கூடு.
பொன்னிகர்த் தேனீக்கள் என் ஏமாற்றங்களின் கசப்பிலிருந்து
வெண்மெழுகும் தித்திக்கும் தேனுமாய்
உருவாக்கிக் கொண்டிருந்தன.

 நேற்றைய உறக்கத்தில் ஒரு கனவு-அருளப்பட்ட மாயை
 எனக்குள் பற்றியெரியும் சூரியன் கனன்றது
 இதமான குளிர்வீட்டின் கணப்பென அது கனன்றது
 கண்கூசும் மினுமினுப்போடு என்னை அழச்செய்த சூரியனேதான் அது

 – நேற்றைய உறக்கத்தில் ஒரு கனவு-அருளப்பட்ட மாயை
 அந்தக் கனவு என் உள்ளாழத்திலிருந்தது
 கடவுளே தானென்றது

 

ந்யூ சாங்க்ஸ், காம்பஸ், ஜூவான் தே மெய்ரேய்ன உள்ளிட்ட பல முக்கிய நூல்களை எழுதினார் மச்சாடோ. அவரது கவிதாமொழி தனக்குள் உரையாடுகிற பாணியிலானது. மேற்காணும் கவிதைகளில் சிதையாத அந்தரங்கமொன்றின் ஒருமைத் தன்மையில் தானும் தன் மொழியுமாக நிகழ்த்திப் பார்க்கிற சொல் விளையாட்டெனவே மச்சாடோவின் தனித்துவத்தை உணரமுடிகிறது.

சி.மணி என்கிற வே.மாலி என்கிற எஸ்.பழனிச்சாமி (1936 – 2009) தமிழின் அபூர்வங்களில் ஒன்றென விளைந்தவர். மணியின் மொத்தக் கவிதைகளையும் க்ரியா பதிப்பகம் ஒரு ஆன்ட்ராய்ட் செல்ஃபோன் சைஸ் புத்தகமாக 1996ஆம் ஆண்டு முதலில் பதிப்பித்ததை 2017 நவம்பரில் மறுபதிப்பு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். கவிதை விரும்பிகள் மறவாமல் படித்து உய்ய.

மணியின் கவிதை உலகம் அபாரமான பூடகங்களை எளிமையான நேரடிச் சொற்களின் அறிதலின் பின்னால் ஒளித்துவைத்து விளையாடுவது. முடிந்தபிறகு சுழலத்தொடங்கும் நிசப்தத்தின் அமானுட இசைத்தட்டு தெளிவித்துக் கலக்கியும் விடுகிற மனச் சகதி, நுழைவதற்கும் திரும்புவதற்கும் மாறி மாறித் திறந்து மூடுகிற கதவுத் தொடர்ச்சி, அறிந்த தலத்தின் பிரகார நடை நடுவே திடீரென காணவாய்க்கிற ஒரு ஒளிக்கீற்றின் முன்பறியாத் தோன்றல் நிகழ்த்திவிடுகிற மாயக் குளுமை குழந்தையின் முதற்சொல் போலவே அரிதினும் அரிய வகை கவிதைகள்.

நிழல்

கம்பி என்று காலிரண்டும்
எம்பி வீழ்ந்ததும், இளித்தது
கம்பியதன் நிழல்

(எழுத்து – அக்டோபர் 1966)

எழுத்து இதழில் ஆகஸ்டு 1965ஆம் ஆண்டு சி.மணி எழுதிய அணைப்பு எனும் இந்தக் கவிதை மேற்சொன்னவற்றுக்கான மெய்ப்பாட்டு விள்ளல்.

க்ரியா பதிப்பகம் புத்தகங்கள் (Crea Publishers tamil books list )

அணைப்பு

என்னை
நீரா யணைத்தா யணைத்து
விட்டதும் கரியானேன் ஆனதும்
இருவிழிப் பொறியால் தீமூட்டித்
திரும்ப நெருப்பாக்கி
தேமல்
விரிந்தே கிளைத்த மரத்தின் இலைகள்
பிரிந்தே இளைத்த நிலத்தில்
தெளிக்கும்
நிழலொளித்
தேமல்.

(கணையாழி – ஜூன் 1969)

மணியின் கவிதைகள் காலத்தை அயர்த்தும் சொல்வனப் பட்சிகள். நீர்வயல் தாழப் பறந்து நிழல் நனையாது சட்டென வானேகி, திசை கிழித்துக் காணாது போகும் காலமாற்றிகள். போலச் செய்யவியலாத பழுப்பேறிய சொற்கள். சாஸ்வதப் பெருமொழி.