தேன் துளிகள் 3

             


                                                      பு ல ன்  ய க் க ம்


31
சேராமல் போகும்போது காதலுக்கு ஒரு புனிதத் தன்மை வந்துவிடுகிறது. காதலில் வென்றவர்கள் கல்யாண ஆட்டத்தில் தோற்கத் தொடங்கி விடுகிறார்கள்
*

32
அன்பு என்பது நிர்வாகம் சம்மந்தப்பட்ட ஒரு விஷயம். ஒரு புனைவு புனிதமாக மற்றும் வாழ்வியல் நிஜமாக, இருவேறு முகடுகளுக்கிடையில் அலைவுறும் குறளியின் பேர் அன்பு. எனக்கே எனக்கான என்னுடைய நீ, உனக்கே உனக்கு மட்டுமான உன்னுடைய எனக்கு, எதை எப்படி, எங்கனம் தரவேண்டும் என்பதை சதா வரையறுத்துக் கொண்டே இருக்க விழையும் எண்பது சதவிகித சாத்தானின் பேர் அன்பு.
*

33
உண்மையில், அன்பாய் இருப்பதென்பது மனிதன் மீன் வளர்ப்பதைப் போன்றது. தொட்டிக்கு வெளியே இருக்கும் தனக்கு, தொட்டிக்குள் இருக்கும் அத்தனையும் சொந்தம் என்று நம்புவதும், நம்ப விரும்புவதும், நம்ப வைக்க விழைவதுமாக, அன்பென்பது அபத்தக் கூத்து. இருபது சதவிகிதக் குழந்தைமை ததும்பும் செல்லத் தீவிரவாதம் அப்படியானதொரு அன்பு, போதைப் பற்றுதலின் உள்ளாழ நெடுந்தூரம் போலவே நிகழுமாயின் சர்வ தருணம் சதா ரணம்

*
34
சிலைக்கு ஏன் அத்தனை மரியாதை..?சிலை செய்வதன் கஷ்டம் சொல்லில் அடங்காதது.எந்த நிலையில் தவறு நேர்ந்தாலும் அதுவரைக்குமான உழைப்பும் முயற்சியும் எத்தனமும் இன்னபிற எல்லாமும் அப்படியே வீணாகிவிடும் என்பது சாதாரணமல்ல.உளவியல் ரீதியாக மாபெரிய உறுதியும் கட்டுப்பாடும் இருந்தால் மட்டுமே ஒரு சிலையை முழுமை பெறச் செய்ய முடியும்.சிற்பி தன் உளியைக் கீழே வைக்கும் அந்த ஒரு பொழுது தான் பொன்வைர மின்னற்காலம்.அந்த ஒரு கண நேரத்திற்காகத் தான் முந்தைய பெருங்கால எத்தனமும்.ஆமாம்.இந்த சிலையை நான் முடித்து விட்டேன் என்று அவன் திருப்தியுறுவது ஒற்றை நிகழ்வல்ல.காலமும் சரித்திரமும் ஒன்றுகூடுகிற புள்ளியில் மூன்றாவது அலகு சிற்பியின் தோன்றல்.
*
35
ஒச்சமற்று இருத்தல் சிலைக்கான லட்சணம்.சிற்ப சாத்திரங்கள் அறிந்தவர்கள் நுட்ப நுணுக்கமாய்ப் பார்க்கும் போது அவர்களது அவதானத்தில் உருவாகக் கூடிய விமர்சன பிம்பம் என்பது உள் ஆழம்.வெளிப்படையாக எதுவும் தெரியாத அதிதிப் பார்வையில் முடுக்கேதும் இல்லாமல் இருப்பது அதி அவசியம்.மேலும் அது தான் சிலைவாழ்வின் ஆரம்பமும் கூட.
*
36
பாடல் என்பது நிகழ்த்தப்படுகிற ஒன்று.அது தன்னைக் கொண்டாடுகிற ஒருவனை எப்போது வந்தடையும் என்பது சுவையான ஆருடம்
*
37
ஒரு பாடல் நிகழ வேண்டும்.ஒச்சமற்ற ஒரு பாடல் அபூர்வம்.அதன் வணிக வெற்றி இன்னபிற எல்லாவற்றையும் தாண்டிய நீட்சி அவற்றுக்கு உண்டு.அப்படி நிகழ்கிற பாடலின் கண்களைத் திறந்து வைப்பது அதன் துவக்க இசை.துவக்க இசை ஒரு பெரிய அனுபவத்தின் முன் கட்டியமாக நிகழலாம்.அல்லாது போனால் பின்னே வரக் கூடிய யானையை யூகிக்கவிடாத சின்னஞ்சிறிய மணிச்சப்தமாகவும் இருக்கலாம். இவை ஏதுமற்ற வேறு அனுபவம் எப்படி இருக்குமென்றால் உள்ளே நிகழ்வதை யூகிக்க முடியாமல் செய்வதற்காக ஏற்படுத்தப் படுகிற வெளித்தோற்ற மாயைகளின் திட்டமிட்ட வருகையுடன் இருக்கும்.மிகச்சிறந்த பாடல் இவற்றில் எப்படி வேண்டுமானாலும் தொடங்கும்.
*
38

சுழலிசைப் பாடல்கள் எப்போதுமே சொக்கத் தங்கம்.சுழன்று முடிந்து மீதொடரும் அதன் வகைமை அவற்றின் தனித்துவம். ஆரம்ப இசை மின்னலுடைய வருகைக்குப் பிந்தைய மழை பற்றிய எதிர்பார்ப்பைப் போன்றதாக அமைவது வரம். ஒரு பாடலைப் பாடிய குரல்கள் அடுத்த காரணம்.ஆன்மாவின் நீர்மத்தில் பாடலின் வார்த்தைகளை அலசி எடுத்து உதடுகளால் அர்ச்சிக்க வேண்டும்.ஒரு வேட்டைக்காரனின் ஏமாற்றம் போல மிக மெல்லிய சமரசத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும்.ஒரு குழந்தையின் பிடிவாதம் போன்ற விடாவெறியுடன் பாடலைக் கொண்டு செலுத்த வேண்டும்.
*
39
கலையில் மாத்திரமே காலத்திற்கு முந்தையவர்களின் வருகை சாத்தியமாகிறது. அப்படியானவர்களின் வருகை ஒரு வகையில் தீர்க்கதரிசனம்தான். ஒருவகையில் கலை என்பது பிறழ்தல். கலை என்பது வரிசையிலிருந்து விலகி நிற்பது. அப்படி விலகி நிற்பவர்களின் வரிசையற்ற வரிசையிலிருந்து விலகுதல் அடுத்த படி. தனித்தலும், ஓங்குதலும், உயர்தலும், இவை யாவும் கலையின் அம்சங்களே. சவுக்கின் நுனி பல உடல்களைத் தரிசிக்கும் என்றபோதும் அதன் அடிப்பகுதி இடம் மாறுவது எளிதானது அல்ல. கலைஞன் காலத்தின் சவுக்காகிறான். கரவொலிக்கும் மாந்தர்கள் நுனி தீண்டும் உடல்கள்.
*
40
கலை எனும் நதி பயணிக்கும் தடம் நெடியது. கலைஞர்கள் வந்தவண்ணம், போனவண்ணம் இருக்கிறார்கள். காலவஞ்சக இருளில் கலாமேன்மை தீபமாகிறது. இப்படித்தான் காலம், கலை இரண்டும் இணைந்து மேதமைகளை இனம் கண்டு, சமூகத்தின்முன் நிறுத்துகிறது. பணம், புகழ், கலை மீதான பித்து, ஆர்வம் போலப் பல காரணங்கள் ஒருவரைக் கலையின்பால் திருப்பிவிட முடியும். நட்சத்திரங்களுக்கு நடுவில் தனித்து ஓங்குகிற ஒளித்தெறல் நாயகர்கள் அபூர்வமாய்க் கிளைக்கிறார்கள். அப்படியானவர்கள் எப்போதாவது எப்போதும் தோன்றியபடியே இருக்கிறார்கள். இதன் முரண் இதன் அழகு. அபாரம் மதிப்பிற்குரியதுதான் என்றபோதும் கலையில் அபூர்வம் மேலதிக சிறப்பு.
*
41
யானை தான் அமர்வதற்குக் குறைந்தபட்ச இடத்தை சமரசம் செய்து கொள்வதே இல்லை. யானைக்குத் தன் உடலைக் குறுக்கிக் கொள்ளத் தெரியாது. குறுகலான இடத்தில் இருப்பதை நிர்ப்பந்திப்பதன் மூலமாக மெல்ல மெல்ல யானைக்கு மதமேற்ற முடியும். உண்மையில் யானை ஒரு குழந்தை. அதன் இருப்பிடம் குறித்த நிர்ப்பந்தம் அச்சமாய்க் காய்த்து, ஆக்ரோஷமாய்க் கனியும்
*
42
கலை என்பது உண்மையில் தேவையின் நிமித்தமா அல்லது ஒரு திறன் தன்னை நுகர்வதற்கான ஒரு இடத்திற்கு நகர்த்திச் சென்று தயாரித்துத் தன் பரிமாணத்தை நிகழ்த்துவதா? கலை என்பது ஒருபுறம் கண்டனமாகவும் மறுபுறம் குதூகலமாகவும் புரிந்து கொள்ளத் தக்கது. ஆட்சேபங்களும் வினவுதலும் நேர்ப்படுத்துதலும் ஒவ்வாமையும் கோபமும் எப்படிக் கலையில் வெளிப்படத் தக்கவையோ அப்படியே வாழ்த்தும், விஸ்வசித்தலும், நன்றி நவிலலும், கோரிக்கை வைத்தலும், கொண்டாட்டமும் கலையாகின்றன
*
43
ஒரு திரைப்படத்தின் தேவை என்ன?
கதைகள் தீர்ந்து போகும் வரை கதைகள் பேசவேண்டியதாகிறது. மனிதர்களுக்குப் பின்னால்தான் கதைகள் தீர்ந்து போகும் போல் இருக்கிறது. ஓட்டுக்கு மேலும், தோலுக்கு உள்ளேயும் ஆன கனிப் பகுதி என ருசிக்கிற இந்த வாழ்தல் இனிது. எப்போதும் திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எப்போதாவதுதான் திரைப்படங்கள் நிகழ்கின்றன.
*
44
மனித வாழ்வின் அறிவியல் கண்டுபிடிப்பின் பூர்வமான நகர்தல்கள் சிலவற்றைக் கைவிடச் செய்யும். கிராம வாழ்வுகள் சார்ந்த கலைகள் மாற்றி அமைக்கப்படும் போது, நவீனத்துடனான சமனறு தன்மை அவற்றைக் கைவிட நிர்ப்பந்திக்கும். அப்படியான தருணங்களில், புதிய கலைகளின் மீதான நாட்டம், அல்லது கலைகளற்ற வெறுமை இவ்விரண்டில் ஏதோ ஒன்று நிகழும். இதற்கு மேலும், கூட்டு மற்றும் தனிநபர் சார்ந்த நிராகரிப்புகள், தன்னைக் கால வளர்ச்சியோடு பொருத்தி மேலெழுதிக் கொள்ளாத எந்தக் கலையும் அதனைச் சார்ந்தோர் வாழ்வில் நேரடி மற்றும் மறைமுக நிராகரிப்புகளுக்கு உள்ளாவதையும் பதிவு செய்யும்
*
45
மனதால் உணரக் கூடிய பல வண்ணங்கள் புறவய உலகில் காணத் தக்கவை அல்ல
*
46
 கலையின் அழிவு, தனிமனிதனின் அழிவு, இவ்விரண்டில் மனிதனின் அழிவுக்குக் காலம் பொறுப்பேற்கிறது, கலையின் அழிவுக்கு அது மனிதர்களைக் கைகாட்டுகிறது
*
47
சட்டென்று மாறி மழைக்குத் தோதான வானிலையாய்த் தோற்றம் தருகிற சற்றைக்கு முன்பிருந்த அத்தனை வெயிலையும் காணாது அடித்து வெறும் வெம்மையாய்த் தகிகக்ச் செய்தபடி நம்மை அயர்த்துகிற அந்திக்கு முந்தைய மாலைப் போழ்தின் மழைவருகை கணங்களாய் இசை நமக்குள் பரவுகிறது
*
48
காட்சி ஊடகத்தின் சிறப்புக்களில் ஒன்று எழுதியதைப் பன்மடங்கு விரிவாக்கிக் காணச்செய்வது.அப்படியான அனுபவம் ஒரு பாடலில் கிட்டுமாயின் வார்த்தைகள் இசை காட்சி ஆகிய மூன்றுமாய் காண்பவர் மனமெல்லாம் நிரம்பி வழியும்
*
49
எந்தக் கலயத்துக்குள்ளும் நிரம்புவதும் எத்தனை நிலமென்றாலும் தவழ்ந்தோடிக் கலைவதும் தான் ஒரு நதியின் குணாம்சம்
*
50
வரலாற்றில் சில இனிமைகளுக்கு மீவருகை இருப்பதே இல்லை.
இருக்கத் தேவையும் இல்லை