தமிழ்ப் பாடல்கள் எத்தனையோ மாறுபாடுகளைச் சந்தித்த வண்ணம் இருப்பதுதான். காலத்திற்கேற்ப இசையில் பாடும் குரலில் தொனியில் இசைக்கருவிகளின் பயன்பாட்டில் பாடல் பதிவில் என எல்லாவற்றிலும் ஏற்படுகிற மாற்றங்களைப் போலவே எழுதப்படுகிற பாடல்களிலும் மாறுதல் என்பது இருந்தே தீரும். ஒரே நதி இரண்டு இடங்களில் கடப்பதில்லை என்ற கூற்றுக்கேற்பத் திரைப்பாடல் சரிதத்தில் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்களினூடாகத் தத்தமது பெயரைப் பொன்னெழுத்துக்களில் பதித்துச் சென்ற கவிமேதைகள் பலர். அவர்களில் முக்கியமானவர் சுரதா.
இயற்பெயர் ராஜகோபாலன். சுப்பு ரத்தின தாசன் எனும் பேரைச் சுருக்கி சுரதா என்று அழைக்கப் பட்ட கவிஞர் சுரதா எழுத்தில் தமிழ் வெள்ளம். பாவேந்தரின் மீது கொண்ட பற்றின் காரணமே சுரதா எனும் பெயர்க்காரணம். கவிதையில் தன் உயிரையே வைத்திருந்தவர். கவிதைக் கென்றே தனியிதழ் நடத்தியவர். நூற்றுக்கும் மேற்பட்ட சினிமாக்களில் பங்களித்தவர். கதை திரைக்கதை வசனம் பாடல்கள் என இவரது எழுத்தோவியம் திரையில் தவறாமல் மிளிர்ந்தது. பாவேந்தர் விருது கலைமாமணி விருது உள்ளிட்ட பல சிறப்புக்களுக்கு உரிய சுரதா எண்பத்து நாலாம் வயதில் 2006 ஆம் ஆண்டு காலமானவர். எதிர்வரும் 2021 இவரது நூற்றாண்டு. என் தங்கை அன்பு நல்லதீர்ப்பு கதாநாயகி நாணல் நீர்க்குமிழி அமரகவி மறக்கமுடியுமா மேஜர் சந்திரகாந்த் திருமணம் தலை கொடுத்தான் தம்பி இந்திரா என் செல்வம் என் தங்கை போன்ற பல படங்களில் சுரதாவின் பாடல்கள் இடம்பெற்று இனிக்கின்றன.
நாடோடி மன்னன் படத்தில் ஒரு பாடல் —
இன்பக் காவியக் கலையே ஓவியமே
எஸ்.எம்.எஸ் இசையில் டி.எம்.சவுந்தரராஜனும் ஜிக்கியும் பாடிய பாடல். தன் தமிழ் கொண்டு தேனள்ளித் தாரைகளாக்கி மழைக்கச் செய்தார் சுரதா. சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே எனும் பொழுது மண்ணில் ஓடி விரைந்தேகும் விமானம் போல் வட்டமிடும் பாடல்வரிகள்
இன்ப காவிய கலையே ஓவியமே
எழுதப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆன பிற்பாடும் தன் புத்திளம் தன்மையை இழக்காமல் இருப்பது தான் இந்தப் பாடலின் சிறப்பு. வாசிக்கும் போதே குரலாகவும் இசையாகவும் மாற்றமெடுத்து ஒலிக்கும் எத்தனையோ பாடல்களுக்கு மத்தியில் தமிழின்பத் தேன் தித்திப்பு கொஞ்சமும் குன்றாமல் ஒலிக்கிற இத்தகைய பாடல்கள் அரிய செல்வந்தம் போன்றவை. சுரதாவின் எழுத்தாளுமைக்கு இதொரு சான்றாவணப் பாடல்.
நேர் காணுமே நீரோடுதே
சுரதாவின் தமிழின்பத் தமிழை நன்கு உணரத் தருகிற இன்னுமோர் பாடல் அமுதும் தேனும் எதற்கு நீ அருகில் இருக்கையிலே எனக்கு என்ற பாடல். 1958 ஆமாண்டு திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் இசையமைப்பில் வெளிவந்த காலத்தால் அழியாத திரைக்காவியம் தான் தை பிறந்தால் வழி பிறக்கும். அந்தப் படத்தில் சுரதா எழுதியது தான் அமுதும் தேனும் பாடல்.சீர்காழியின் சீர்மிகு தொனியோட்டத்தில் மறக்க முடியாத பாட்டாக இன்றளவும் இனித்துக் கொண்டிருக்கிறதல்லவா?
கிருஷ்ணன் கோயில் வெங்கடாச்சலம் மகாதேவன் என்ற இயற்பெயரை உடையவரான கே.வீ.மகாதேவன் திரையிசைத் திலகம் என்ற பேரில் புகழப்பட்டவர். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென் திசையில் திரையிசைச் சக்கரவர்த்தியாக நாற்பதாண்டு காலம் விளங்கியவர் கே.வி.மகாதேவன். காலத்தின் கல்வெட்டுக்கள் எனவே இவரது பல நூறு பாடல்கள் கான சத்தியங்களாய்க் காற்றை ஆண்டு கொண்டிருக்கின்றன. தமிழின் முழுமுதல் திரையிசை மேதமை கேவி.எம் என்று சொல்வதற்கான சகல தகுதிகளும் நிரம்பப் பெற்றவர் மகாதேவன். கந்தன் கருணை சங்கராபரணம் போன்ற படங்களுக்காக தேசிய விருது பெற்றவர். 2001 ஆமாண்டு தனது 83 ஆம் அகவையில் இறையடி சேர்ந்தார். எண்ணிலடங்காத கானங்கள் என்றும் மாறாத ரசிகர்கள் என இசையின் உச்சத்தில் இடம்பெறுகிற பெயர்களில் ஒன்று கேவீ.எம்.
புது நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்
நான் கொய்யும் கொய்யாக் கனியே வான்
விழியாலே காதல் கதை பேசு
மலர்க்கையாலே சந்தனம் பூசு – தமிழ்
உடல் நான் உயிர் நீ தானே வான்