தேன் மழைச்சாரல் 13
மாயவநாதன்
ஜெய்சங்கர் ஜாலிராஜா.
தமிழ் சினிமாவில் முன்னும் பின்னும் அப்படி ஒரு மனிதரைப் பார்த்தல் அரிது என்று பன்னெடுங்காலமாய்ப் புகழப்படுகிறவர். தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்று ஜெய் ஆனதெல்லாம் சர்க்கரைக்குள் எறும்பு தவறி விழுந்தாற் போன்ற இனிய விபத்து. நாயகனாக அவர் மின்னி மிளிர்ந்ததை விடவும் வில்லனாக குணச்சித்திர வேடங்களை எல்லாம் ஏற்று நடித்த காலகட்டம் தான் அவருடைய நடிக வாழ்வின் பரிமளம் என்பது என் தீர்மானம்.
ஜெய்க்கு பாடல் ராசி அமோகம். அவருக்கு அமைந்த பல பாடல்கள் காலத்தின் டோல்கேட்டுக்களைத் தகர்த்துக் கொண்டு முன்னகர்பவை. காதல் படுத்தும் பாடு ஜோஸப் தளியத் ஜூனியர் இயக்கியது. இவர் தான் ஜெய்சங்கரைத் தன் முந்தைய இரவும் பகலும் படத்தில் அறிமுகம் செய்தவர். காதல் படுத்தும் பாடு தான் இவரது கடைசிப் படமாகவும் அமைந்தது.
ஜெய்யும் வாணிஸ்ரீயும் இணைந்து தோன்றும் கருப்பு வெள்ளைக் கானம், இந்தப் பாட்டு. டி.ஆர்.பாப்பா இசைத்தது. மாயவநாதன் எழுதியது.
மாயவநாதன் எழுதியவற்றில் தண்ணிலவு தேனிறைக்க படித்தால் மட்டும் போதுமா நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ பந்தபாசம் என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய் தொழிலாளி பூந்தென்றல் இசைபாட தாயின் கருணை மல்லிகை பூப்போட்டு தாலாட்டு புன்னகையோ பூமழையோ டெல்லி டு மெட்ராஸ் ஆகியன குறிப்பிடத் தக்க பாடல்கள்.
எழுத்தில் ஒச்சமில்லாத பொன் நிகர் மொழிதலை வியக்காமல் எப்படி.?
இவளொரு அழகிய பூஞ்சிட்டு வயசு
ஈரொம்போது பதினெட்டு
உடலது பனி விழும் மலர் மொட்டு பேசும்
ஒவ்வொரு சொல்லும் தேன் சொட்டு
(இவளொரு)
இவருக்கு வயசு மூவெட்டு – பொங்கி
இளமை சதிராடும் உடற்கட்டு
விழியது கூரியவாள் வெட்டு – நான்
விளையாடும் மார்பு பூந்தட்டு
(இவருக்கு)
பல்லவி ரொம்பவே நேரான விளக்கச் சொல்லாடலாக அமைந்திருக்கிறதல்லவா..? சரணத்தில் விளையாடி இருக்கிறார் மாயவநாதன்
சித்திரப் பூவடி சாமந்தி
இவள் சிரிக்கிற அழகு செவ்வந்தி
நெற்றியிலே துண்டு நிலவேந்தி
இங்கு நெருங்குதம்மா அல்லிப் பூச்செண்டு
தாமரைப் பூமுகம் சிவப்பேற -இங்கு
தள்ளாடும் கால் கொஞ்சம் இளைப்பாற
உன்னிளம் மார்பில் இடம் உண்டா –
இந்தக் கன்னியைத் தாங்க மனம் உண்டா
மெட்டுக்குத் தப்பாத தமிழ்ச்சாற்றைக் கவியாக்கித் தந்தார் மாயவநாதன். டி.எம்.சவுந்தர்ராஜனும் பி.சுசீலாவும் சேர்ந்து பாடிய ஆயிரக்கணக்கான பாடல்களில் இதுவுமொன்று என்று தள்ளிவிட முடியாத வண்ணம் தமிழால் அதன் அழகால் இதனைத் தனிக்கச் செய்வது பாடல் வரிகளின் நேர்த்தி.
இன்றெல்லாம் கேட்கலாம்