தேவதை மகன்
வாசிப்பு அனுபவம்
பாத்திமா பாபு க்ளப் ஹவுஸ் செயலியில் கதை நேரம் என்றொரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். 175 கதைகளைத் தாண்டி வெற்றிகரமாகத் தொடர்ந்து வரும் நிகழ்வு அது. அமர எழுத்தாளர்கள் தொடங்கிப் புத்தம் புதிதாய்க் கதை என்னும் வடிவைக் கையில் பற்றியிருக்கும் எழுத்து விரும்பிகள் வரைக்கும் பாரபட்சமே இன்றிக் கதைகளைத் தேர்வெடுத்து வாசித்து வருகிறார். ஏற்கனவே என்னுடைய தென்னம்பாளை அதிகாரி இரண்டு மைதிலிகள் மற்றும் ஒயிலா ஆகிய கதைகள் வாசிக்கப் பட்டன. ஒவ்வொரு நிகழ்வுமே நேயர்களின் நிறைவான பங்கேற்பும் பாத்திமாவின் தரம் மிகுந்த வாசிப்பும் மனத்தில் நிறைந்த மகிழ்கணங்கள்.
இன்றைய சமூக விரிவாக்கங்களில் ஒன்று தான் க்ளப் ஹவுஸ். சமூக வலைமனைகளின் அடுத்த அவதரிப்பு. அது குரல்களின் உலகம். அங்கே குரலுக்கு முகம் உண்டு. முகப்புத்தகத்தின் அடுத்த விரித்தலாய்க் கொண்டோமேயானால் அது குரல்புத்தகம் என்ற பேர் சூட்டச் சரியாக இருக்கும்.
நேற்று மதியம் என்னிடம் இன்றோ நாளையோ எனதொரு கதையை வாசிக்கலாமா எனக் கேட்டார். நான் இன்றே சிலாக்கியம் என்று பதில் பகிர்ந்தேன். எனது கணிப்பொறி அந்த நேரம் பார்த்து அப்டேட் ஆகிக் கொண்டிருந்தது. அதற்கே ஒரு மணி நேரம் பிடித்தது. அப்புறமாய்ச் சட்டென்று மூன்றுகதைகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தேன். எதற்கும் செல்பேசியில் அழைத்துத் தகவல் தந்து விடலாம் என்று பாத்திமாவை அழைத்தேன். வாசித்துக் கொண்டிருப்பதாகப் பதில் வந்தது. நன்றென்று கொண்டேன்.
சில மணி நேரங்களே இருந்தது. என் போன்புக்கில் இருக்கும் வெகு சில நண்பர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி பகிர்ந்தேன். எட்டு ஐம்பதுக்கு நிகழ்வு தொடங்கிற்று. எந்த எதிர்பார்ப்பும் இன்றித் தான் நிகழ்வினுள் கலந்தேன். அறுபதுக்கும் அதிகமான நேயர்கள் பங்கேற்றனர். தேவதை மகன் கதையை பாத்திமா வாசித்தளித்த விதம் அற்புதம். குரலே தவமாய்க் கொண்டாலொழிய இது அசாத்தியம். கதைகளின் நெடுவரலாற்றில் தன் குரல்வழி பாத்திமா நீங்காத நல்லிடம் பெற்று நிரந்தரிப்பது உறுதி. இலக்கிய விரும்பிகள் சிறப்புத் திறனாளிகள் வயதானவர்கள் எனப் பல சதுக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இப்படி வாசித்துத் தருவது பெரிய உபகாரம். இலக்கியம் வளரும்.
தேவதை மகன் சிறுகதை நிசத்தில் நாவலாக எழுதியிருக்க வேண்டிய கதை. என் கதைகளைப் பற்றிய பேச்சு எழுகையிலெல்லாம் ஒரு நாவலை சிறுகதையாக்கிவிட்டதாக மஞ்சு என்னிடம் அங்கலாய்ப்பார். நேற்றைய வாசிப்பில் அதை நான் முழுமையாக உணர்ந்தேன். அந்தக் கதை 1980 ஆமாண்டு ஆரம்பித்து 2013 ஆமாண்டு நிறைவடையும். அதன் உட்கண்ணிகளை அத்யந்தமான ஆழத்தில் உணர்ந்த்தும் கேட்பவர்களுக்கு உணர்வித்ததும் பாத்திமா பாபு கதை வாசித்தலை கலாபூர்வ செயல்பாடாக பரிமளிப்பதன் நற்பலன் தான். கதையை வாசிப்பது என்பது வெறுமனே வாசிப்பது அல்ல. வாசகன் தன் கண்களால் வருடிக் கொண்டு மனத்தால் அடைகிற வாசித்தல் எனும் செயல்முறை ஒருவிதம் என்றால் அவனது கேட்பனுபவத்தின் மூலமாகக் கதையின் மொத்தக் கூருணர்வை அதன் மையப் பெருந்தொகுப்பை மட்டும் அறியத் தருவது அல்ல. மாறாக வாசித்தலின் மூலமாக சிறுகதையாசிரியன் எழுத்தின் வழியாகச் சொல்ல முனைந்த யாவற்றையும் சின்னஞ்சிறு தருணங்களையும் உப நுட்பத் தரவுகளையும் காலம் இடம் ஏன் கதை நிகழ் களத்தின் பிரத்யேகங்களையும் ஏற்படுத்தித் தருவதும் கதையினை வாசிப்பவரால் உணர்த்தித் தர முடியும். இவற்றை அட்சரம் பிசகாமல் தனது வாசிப்பில் சாத்தியப்படுத்தினார் பாத்திமா.
கதை வாசிப்பை ஒரு நிகழ்த்துக் கலையாக வளர்த்தெடுத்து வருகிற பாத்திமா பாபுவுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
நேற்றைய கதை குறித்து
எர்ஷாத்,ஏழுமலை,கிருபா,கௌசிகா,நரேந்திரா,டாக்டர் பெரியதுரை,ரமேஷ் கல்யாண்,ஷங்கரநாராயணன்,ஸ்ரீனிவாச ராகவன்,தமிழ் நண்பன்,தென்றல், உமாதிரு,யஷோ, மற்றும் கௌரி ஆகியோர் தமது கருத்துக்களை அர்த்தப் பூர்வமாக முன்வைத்தனர். ஜீரோடிகிரி பதிப்பகத்தின் நிர்வாக இயக்குனரும் எழுத்தாளருமான காயத்ரி முழு நிகழ்விலும் கலந்து கொண்டு கதை குறித்த தனது பார்வையினை நுட்பமுறப் பதிவு செய்தார்.
க்ளப் ஹவுஸ் செயலியில் பாத்திமா நிகழ்த்துகிற சிறுகதை நேரம் நிகழ்வு எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் ஒருங்கே ஒரு அற்புதத்தின் வெவ்வேறு விள்ளல்களை சாத்தியப்படுத்திப் பகிர்ந்து வருகிறது. இந்த நிகழ்வு இன்னும் பல நூறு கதைகளைத் தாண்டிப் பீடு நடை போடவேண்டும் நிச்சயம் வென்றேறும் என்று வாழ்த்துகிறேன்.
நேற்றைய நிகழ்வைத் தவற விட்டவர்கள் பாத்திமாவின் குரலில் இங்கே யூட்யூப் காணொலியாக தேவதை மகன் சிறுகதையைக் கேட்கலாம்.
வாழ்தல் இனிது.