ஒரு சீன்
வெய்யில் சுத்தமாக இறங்கியிருந்தது.ஒரு புண்ணியவான் விளக்கிய லெஃப்ட் ரைட் எல்லாம் சரியாகத் திரும்பியதில் ரங்கராஜபுரம் ஐந்தாவது தெருவில் வந்து நின்றிருந்தேன். வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தி ஹெல்மெட் லாக் செய்து செண்டர் ஸ்டாண்ட் போட்டேன்.சென்னையில் வாகனத்தை நிறுத்துவது தனி கலை.அந்தக் கலையில் சமீபத்தில் தான் கொஞ்சமாய்த் தேறியிருக்கிறேன்.எதிர் திசையில் “.வெப் சொல்யூஷன்ஸ்” என்னும் பதாகை தெரிந்தது..அதன் உரிமையாளன் விசு என் கூடப் படித்தவன்.அதென்னமோ மகா நகரமான சென்னைக்கு வந்தபிறகு எதிர்ப்படும் ஒவ்வொரு முகத்தையும் உற்றுப்பார்த்து அதில் எவனெல்லாம் நம்ம ஊர்க்காரன் என்று தேடத் தோன்றும் போல.
சென்னைக்கு வந்து மூணு வாரமாயிற்று.”இந்த வீக் எண்ட் வந்துரு” என்று நூறு தடவையாவது கூப்பிட்டிருப்பான் .வேறு ஆப்ஷனே இல்லாமல் விசுவைத் தேடி வந்திருக்கிறேன்.ஸ்கூல்டேஸிலேயே டொக்கு விழுந்த கண்களும் பூஞ்சை உடம்புமாகக் கம்ப்யூட்டர் துறைக்கென்றே அளவெடுத்தாற் போல இருப்பான்.அதிகம் துவைக்காத ஆங்கில வாசக டீஷர்ட்டும் ஒரு தரம் கூட துவைக்காத கார்டுராய் பேண்டுமாக அவன் ஒரு விற்பன்னனாகவே வலம் வந்தான்.எட்டு வருடங்கள் கழித்துப் பார்த்தால் இந்த ‘வெப் சொல்யூஷன்ஸ்’ கம்பெனியை சொந்தமாக நிறுவிப் பத்துப்பதினைந்து பேருக்கு வேலை கொடுத்துக் கொண்டிருப்பதாகப் போன தரம் ஊருக்கு வந்தபோது சொன்னான்.பொறாமைக்கு வாய்ப்பே இல்லாத ஸ்னேகம் எங்களது.
மாடிக்கு மொத்தம் பதினெட்டுப்படிகள்.ஏறிச்சென்று பார்த்தால் வாசலில் அமர்ந்திருந்த செக்யூரிட்டி “ஒர்த்தரும் இல்ல.நாளைக்கு வாங்க..” என்று என்னைத் திரும்ப அனுப்புவதிலேயே குறியாய் இருந்தார்.நான் பேசியது அவர் காதுகளில் கேட்கவில்லை போலும். பன்ச்சராகிக் கீழே இறங்கினேன்.””எங்க போனே ராசா”” என்று தூரத்தில் பாட்டு கேட்டது.எரிச்சலாகி செல்லில் அழைத்தேன்.கட் செய்துவிட்டு அடுத்த நிமிசம் அவனே கூப்பிட்டான்.
“சாரி மாப்ள…ஆஃபீஸ் ஸ்டாஃப் ஒருத்தவுங்க அப்பா திடீர்னு இறந்திட்டாரு.. எல்லாரும் அங்கே தான் இருக்கோம்.இன்னும் ஒன் அவர்ல வந்துருவேன். கோச்சுக்காம வெயிட் பண்ணு மாப்ள.”
அவன் சொன்ன காரணம் ஒரு முட்டுச்சந்தைப் போல முடிவுற்றிருந்ததால் ‘சரி’ என்று முனகிவிட்டு வைத்தேன்.டூவீலரை நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்தேன். எங்கே செல்லலாம் என்று எத்தனை யோசித்தாலும் ஒரு இடமும் தோன்றவில்லை.சீனு இருப்பது மேடவாக்கம்.எட்வின் வேலை பார்ப்பது எண்ணூர்.ஒரு மணி நேரத்தைக் கொல்வதற்காக இரண்டு இடத்தையும் நோக்க முடியாது.அப்படியே நின்றேன்.
என்னை நக்கல் செய்வதற்காகவே பெய்தாற் போல திடீர் மழை ஆரம்பித்தது.அன்னியர்களை துரத்தி விளையாடுவதில் மழைக்குத் தான் எத்தனை ஆனந்தம்…?சட்டென்று ஓடி எதிர்தாற்போல் இருந்த டீக்கடையில் நுழைந்தேன்.மழை வந்தாலே ஒன்று நன்றாக நனைய வேண்டியிருக்கிறது அல்லது நனைவதற்குள்ளாக ஓடி எதாவதொரு கூரைக்குக் கீழே ஒதுங்க வேண்டியிருக்கிறது.
அதிர்ஷ்டவசமாக அந்த டீக்கடையின் உட்புறம் ஒரே ஒரு டேபிள் இருந்தது.அதைச்சுற்றிலும் மூணு சேர்கள் இருந்தன.பாதி தான் உட்கார முடியும் போல அவ்வளவு சின்ன சேர்களை அதற்கு முன் பார்த்ததில்லை.ஒரு டீயை சொல்லிவிட்டு சேரில் அமர்ந்தேன்.மத்தியான நேரம் ஏற்படுத்தித் தந்த லேசான இருள் ரம்மியமாக இருந்தது.மேலே ஒரு மின்விசிறி கட்டக் கட்டக் என்று சப்தமெழுப்பியபடி சுற்றிக்கொண்டிருந்தது.மேலே இருந்த டீவியில் சப்தமில்லாமல் டாம் அண்ட் ஜெர்ரி ஓடிக்கொண்டிருந்தது.பூனையை சத்தாய்க்கும் எலி என்பது யாரையும் கவர்ந்துவிடுகிறது.நான் சொல்லிய .டீ வருவதற்குள் சடாரென்று உள்ளே நுழைந்த ரெண்டு பேர் சேர்களை கைப்பற்றிக்கொண்டார்கள்.
அதில் ஒருவன் நன்றாக நனைந்திருந்தான்.லேசான தாடி.ப்ரவுன் நிறக் கண்கள்.நெற்றியில் ஒரு சின்ன வடு இருந்தது. எனக்குத் தெரிந்த யாரையோ நினைவுபடுத்தினான்.யார் என யோசிக்க முடியவில்லை.இன்னொருவன் சற்றுப் பருமனான உடல்,பகல் நேர உறக்கத்திலிருந்து எழுந்து வந்தாற்போலத் தோற்றம்..ரெண்டு பேருமே ஜீன்ஸில் இருந்தனர்.பருமன் இப்போது ஒரு சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்தான்.
மழை வலுவாக அடித்து ஆடிக்கொண்டிருந்தது.பார்க்கும் தருவாயில் மழை மனசுக்கு இதமாகிவிடுகிறது.எந்த இடமாக இருந்தாலும் மழை பார்க்கையில் ஏதோ சந்தோஷமாய்த் தான் இருக்கிறது.நானும் ஒரு தம்மைப் பற்ற வைத்தேன். கல்லாவின் முன்னால் அமர்ந்திருந்தவர் அனேகமாக முதலாளியாக இருக்கக் கூடும்.நெற்றியில் குங்கும சந்தன திருநீற்றுப் பட்டைகளுடன் ஆன்மீகமாய்த் தெரிந்தார்.ஏதோ கணக்கு நோட்டை எடுத்துவைத்துக்கொண்டு தன் முன் இருந்த ஸ்லேட்டில் எதையோ எழுதிக்கொண்டிருந்தார்.
கடையின் உள்புறமிருந்து வந்த மாஸ்டர் தாம்பாளத்தில் இருந்து வடைகளை ஹாட்பாக்ஸிற்கு இடம் மாற்றினார்.வடையின் மணம் மட்டும் அறையெங்கும் கமழ்ந்து மிஞ்சியது.அந்த ஒல்லியான மனிதன் அங்கே நான் என்ற ஒருவன் இல்லாதது போலப் பேச ஆரம்பித்தான்.
“அபத்தமா இருக்குது வினோ..என்னால இதுக்கு மேல பொறுத்துக்க முடியாது.குட்பை சொல்லிட்டு கெளம்பிரவா நானு..?“என்றான்.
அதற்கு அந்தப் பருமனான வினோ “காரியம் பெருசா வீரியம் பெருசா..?“என்றான்.
தன் ஒரு விரலால் மோவாயைத் தேய்த்தபடி வீரியம் இல்லாம காரியம் எப்பிடி செய்றது..?”என்றான்.
அதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட வினோ “ராஜி…நான் சொன்னா கேளு.படம் முடியிற வரைக்கும் நவதுவாரத்தையும் மூடிட்டு அட்ஜஸ்ட் செஞ்சிக்க.அடுத்து நீ நெனைக்கிறா மாதிரி படம் பண்ணலாம்.அந்தாளைப் பத்தித் தெரியாதா..?தான் சொல்றதை அந்தக் கடவுளே வந்து சொன்னாலும் மாத்திக்கிற டைப் இல்லை. வெட்டியா ஏன் ஆர்க்யூ பண்றே…?’
கண்ணால் அந்த ராஜி கேட்டிருப்பான் போலும்,அவர்கள் இருவருக்கும் தலா இரண்டு வடைகள் வழங்கப் பட்டிருந்தன.அதைப் பிய்த்து தன் வாய்க்குள் அனுப்பியபடியே
“சரி மக்கா..நீ சொல்றது ரைட்டு…ஒரு லாஜிக் வேணாமா..?ஹீரோ யாரு..?இல்ல கேக்குறேன் அவனோட கேரக்டர் என்ன..? நீ சொல்லு மச்சி..நீ சொல்லு நான் கேக்குறேன்.”
இதற்கு வினோ மௌனமாக இருந்தான்.என் கண்களை ஒருதரம் வெட்டுக்கத்தி போலப் பார்த்த ராஜி அவனே மறுபடி தொடர்ந்தான்.
“ஹீரோ ஒரு வாத்தியாரு.கிட்டத்தட்ட நவயுக விவேகானந்தர் மாதிரி ஒரு கேரக்டர்..நீ தானே சொன்னே..நீ தானே சொன்னே? தன் முன்னால் இல்லாத ஒரு நபரை திட்டுகிற தொனியில் சொன்னான்.அவன் குரல் சற்று உச்சஸ்தாயிக்குப் போயிருந்தது.
“அப்பிடி எல்லாம் பில்ட் அப் குடுத்திட்டு செகண்ட் ஆஃப்ல எப்பிடி ஹீரோ தண்ணியடிச்சிட்டு குத்துப் பாட்டு பாடுற மாதிரி உன்னால கற்பனை செய்ய முடியிது..?..”
இப்போது குரலின் ஸ்தாயி குறைந்திருந்தது.
“மச்சி அது செம்மை கேரக்டர்டா… அந்தாளு சொன்னது வெறும் ஷெல்லு..உனக்குத் தெரியாததா..?ஆனந்தன் ஒரு வாத்தியாருன்னு மட்டுந்தான் சொன்னாரு டைரக்டர்.பார்த்துப் பார்த்து நான் உருவாக்கலை..?.உரு ஏத்துனேன்ல..?எப்பிடி நிப்பான்..எப்படி நடப்பான்.. என்ன மேனரிஸம்… என்ன வாய்ஸ் மாடுலேஷன்ல பேசணும்னெல்லாம் எத்தனை சொல்லிருப்பேன் டிஸ்கஷன்ல..?முதல் ஷெட்யூல்ல ஹீரோ சிவகுரு கிட்டே என்ன சொன்னாரு..?ஆனந்தன் கேரக்டர் முழுக்க ராஜியோட வார்ப்பு ஸார் அப்டின்னு சொன்னாரா இல்லையா..?இப்ப எங்கேருந்து வந்தது குத்துப்பாட்டு..?” வரிசையாக இருமினான்.நாலைந்து முறை இருமியவன் தன் கைக்குட்டையால் வாயைப் பொத்திக்கொண்டு “ஸாரி” என்றவன் மறுபடி நிதானமாக ஆரம்பித்தான்
“குத்துப்பாட்டுன்றது ஒரு படத்துக்குள்ளே ஆமை புகுந்தாப்ல மச்சி.என்னா மாதிரி சீன் வெச்சிருந்தம்..?ஆனந்தனுக்கு வேலை போயி வெக்ஸ் ஆகி நடந்து வருவான்.அப்போ ஒரு அறுபது வயசுப் பெரிசு அவன் கிட்டே டாஸ்மாக்குக்கு வழி கேப்பாரு.இவன் விரக்தியா சிரிச்சிட்டே “எனக்குத் தெரியலைய்யா” ந்னு சொல்லி நகருவான்.சட்டுன்னு மழை கொட்டும்.ரோட்டோரத்தில கிடக்குற யூஸ் அண்ட் த்ரோ தம்ப்ளர்ல மழைத்தண்ணி நிரம்பும்.அப்ப ஒரு பார்வை பார்ப்பான் ஹீரோ.செம்மை பொயட்ரிடா அந்த சீனு.இப்ப குடிச்சிட்டு ஹீரோ குத்துப்பாட்டு பாடுறான்.இந்த சீனைத் தூக்கிட்டாண்டா அந்தாளு…செத்துறலாமான்னு வருது.”
இப்போது டாமுக்கும் ஜெரிக்குமான துரத்தல் உக்கிரமாகியிருந்தது.என் பார்வை அங்கே இருந்தாலும் என் கவனம் அவர்களின் சம்பாஷணையில் லயித்தது.“எதுக்கு வினோ குத்துப் பாட்டு..?வரிசையா நாலு ஹிட்டு அதுல ஒரு படத்துக்கு ஸ்டேட் அவார்ட்.இடையில ஒரே ஒரு படம் ஓடலைன்னதும் குத்துப் பாட்டு வெக்கிறதை என்னால ஏத்துக்க முடியாது.”என்றவன் தன் கைவிரல்களை அந்தரத்தில் சொடக்கியவன் யாருமற்ற திசை பார்த்து “ஏன்..பயம்மா மிஸ்டர் பி,எம்.ராமநாதன்..?பயப்படுறீங்
ராஜின் முகம் முழுவதுமாக வியர்த்திருந்தது.மிகவும் உணர்ச்சி வசத்தில் இருப்பதை முகம் சொன்னது.சாமி வந்த சிறுமியைப் போல லேசாகத் தள்ளாடினான்.கல்லா பக்கத்தில் அமர்ந்திருந்த முதலாளி லைட் சுவிட்ச்சைத் தட்ட குழல்வெளிச்சத்தில் .அந்த இடமே வேறொன்றாக மாறியது..நான் அமைதியாக அவர்கள் இருவரையும் பார்த்தபடி ஆனால் அவர்களுக்கு உறுத்தாத வண்ணம் அமர்ந்திருந்தேன்.
பி.எம்.ஆர் பெரிய்ய இயக்குனர்.அவர் எடுத்த நர்த்தனம் படம் எட்டு வருசங்களுக்கு முன் வந்தது.ஐந்து படம் எடுத்திருக்கிறார்.அதில் கடைசியாக எடுத்த மகாவரம் நல்ல கதை இருந்தாலும் அட்டர் ஃப்ளாப்பாகி இருந்தது.அதற்கடுத்த படத்தைப் பற்றித் தான் பேசிக்கொள்கிறார்கள்.எனக்கு வியப்பாக இருந்தது .சினிமாவின் ஜிகினா மேல் எனக்கு எப்போதும் லேசான கிறக்கம் உண்டு.எல்லாப் படத்தையுமே பார்க்கும் லோகிளாஸ் ரசிகர்களில் ஒருவன் நான்.போன தரம் சென்னை டு மதுரை மதுரை டு சென்னை பஸ்சில் சென்று வந்த போது அடுத்தடுத்த நாள் ஒரே படத்தை ஆர்வமாகப் பார்த்தவன் என்றால் புரியும்.என் முன்னால் அமர்ந்திருக்கும் இருவரும் ஆனானப் பட்ட பி.எம்.ஆர் படத்தில் வேலை பார்க்கிற உதவி இயக்குனர்கள் போல.ஒரு சினிமாவை எப்படி உருவாக்குகிறார்கள் என்று கிட்டத்தில் பார்க்கும் வாய்ப்பு ஒருதரம் கூட வாய்க்காத எனக்கு அவர்கள் இருவரையும் பார்க்கும் போது லேசான பிரமிப்பாக இருந்தது.
தெளிவான குரலில் முன்பிருந்த உரத்த தொனிக்குப் பதிலாக மௌனமாக பேசினான் ராஜி.
“மச்சி..நீ என்ன சொல்றே..?.குத்துப் பாட்டு வேணாம்னு நான் சொன்னது தப்பா..?தப்புன்னா செருப்பால அடி.நான் வாங்கிக்கிறேன்.”
இப்போது தன் தம்மை பற்றவைத்துக் கொண்டு என்னை ஒருதரம் பார்த்த வினோ வெளியே மழையைப் பார்த்தான்.அது விடுவதாயில்லை.இன்னும் விசு வருவதற்கு நேரமிருந்ததால் நான் டீவீ பார்ப்பதைப் போல அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
“ராஜி…உன் சைட் எந்தத் தப்பும் இல்லை.டைரக்டரை யோசி.அவருக்கு ஃபைனான்ஸ்ல நெருக்கடி.முன்னாடி ப்ராமிஸ் பண்ண இடத்துலேருந்து ஒரு பல்க் அமவுண்ட் வர்வேண்டியது வரலை.இப்ப பத்துவட்டி பரமு கிட்டே வாங்கியிருக்காரு போல.பணம் குடுக்குற நெருக்கடி என்னானு உனக்குத் தெரியாதா..?அதான் கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணிக்க நினைக்கிறாரு.”
மறுபடி ரௌத்ரமானான் ராஜி
“என்னா ம..த்த காம்ப்ரமைஸ் பண்ணிக்க நெனைக்கிறாரு..?மொதல் நாலு படத்துலயும் எந்தக் கீறலும் விழாம எடுக்க முடிஞ்சதில்ல..?அப்போல்லாம் செய்யலை.இப்ப நீயே ப்ரொட்யூசர்ன்றதால உன் படத்துக்குள்ளே குத்துப்பாட்டு வருது.பன்ச் டயலாகும் வெக்கத் தான் போறே…?இதுக்கு எதுக்கு வார்த்தைக்கு வார்த்தை என் சினிமா என் சினிமான்னு க்ளெய்ம் பண்ணிக்கினே அலைஞ்சே… முன்னாடி சொன்ன வார்த்தையெல்லாம் மயக்கத்துல இருக்கிற பாம்பு மாதிரி தான் மச்சி.அது திடீர்னு எழுந்து வந்து கண்ணைக் கொத்தியே தீரும்.”
“இதுல உனக்கென்ன வலிக்குது..?அவருக்கு இது லைஃப் பிராப்ளம் இந்தப் படத்தை முடிச்சி குடுத்துட்டு நல்ல பிள்ளைன்ற பேரை எடுத்துட்டு படம் பண்ணப் போ.அதை விட்டுட்டு பாதில போறது உனக்கும் நல்லதில்ல.அவருக்கும் மனக்கஷ்டம்.காரியம் பெருசா வீரியம் பெருசா..?சொல்றதைக் கேளு மச்சி.டைரக்டர் எது சொன்னாலும் தலையை ஆட்டிட்டே இன்னும் இருபது நாளை கழிச்சிடு.சரியா..?”:
அதன் பிறகு கொஞ்ச நேரம் அந்த ரெண்டு பேருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை.அங்கே ஒரு அசிங்கமான மௌனம் ஏற்பட்டிருந்தது.
நான் எனக்கு முன்னால் நிகழ்ந்துகொண்டிருக்கிற ஒரு நாடகத்தின் முடிவை அறிந்துகொண்ட பிறகு வெளியே கிளம்பலாம் என்று ஆவலாய்க் காத்திருந்தேன். வாசல் பக்கம் பார்த்ததில் மழை குறையத் தொடங்கியிருந்தது.ஓரிரு தைரிய மனிதர்கள் தலையில் கேரிப்பையை சுற்றிக்கொண்டு சைக்கிளிலும் நடந்துமாகத் திரியத் தொடங்கியிருந்தார்கள்.நான் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு எதாவது செய்தாக வேண்டுமே என்று சலனமேதும் இல்லாத என் கைக்கெடிகாரத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
“க்கும்” என்று செருமியவாறே “வினோ…நீ சொல்றது கரெக்ட்டு.பி.எம்.ஆர் எக்கேடு கெட்டா எனக்கென்ன..?நான் பேசப்போறதில்ல.ஆனா பாக்கப்போறேன்.குத்துப்பாட்டு வெக்கட்டும்.எதை வேணா எடுக்கட்டும்..?ஏற்கனவே இந்தக் கதையை இவர் எடுக்குறது மேல எனக்கு ஹோப் இல்லை..இப்ப பாதில கழண்டா எனக்கு லாஸூ…முழுசா முடிச்சிட்டு பை சொல்லிட வேண்ட்யது தான்.டப்பிங்குக்கெல்லாம் இருக்கப் போறதில்ல நானு.”என்றவன் ஒரு தம்ளர் தண்ணீரை எடுத்துக் குடித்தான்.
தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு “நம்மாளு போன படம் செஞ்சாரில்ல அமுதா ஃபிலிம்ஸ்க்கு அந்த ப்ரொட்யூசர் நாராயணனோட மச்சான் ஒருத்தர்.பேரு நந்த கோபால்னு ஜ்வெல்லரி ஓனர்.ஒண்ணாரூவால முடிச்சிருவீங்களான்னு கேட்டிருக் காரு.உனக்கு சொல்லிருக்கேன்ல சாயங்கால தேவதைகள்னு லவ் ஃபெய்லியூர் மேட்டர்..அதை தான் ஒன்லைன் சொன்னேன்.சீக்கிரம் ஆரம்பிச்சி டலாம்னு சொல்லிருக்காரு.பார்ப்போம்..நீ எப்டி இந்தப் படத்தோட கழண்டு வந்துருவியா..?இல்ல..?”
இதற்கு அந்த வினோ “என்ன மச்சி இப்டி கேக்குறே..?நீ வான்னு கூப்பிடும் போது டாண்ணு வந்திருவேன்ல..உனக்காகத் தான்யா நான் இருக்கறதே…?”
இப்போது அவர்கள் இருவரும் எழுந்துகொண்டார்கள்,தன் ஜீன்ஸ்பாண்டின் பின் பாக்கெட்டில் புடைத்துக் கொண்டிருந்த அழுக்குநிற பர்ஸை எடுத்து அலட்சியமாகப் பிரித்தான் ராஜி.ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்து கல்லாவில் நின்றிருந்த மனிதரிடம் நீட்டினான்.மிச்ச சில்லறையை வாங்கி இன்னொரு பாக்கெட்டில் செருகிக்கொண்டே நடக்க ஆரம்பித்தான்..,டீவீயில் ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்த கார்டூன் பூனை முழுவதுமாகத் தோற்று சர்வாங்கமும் நடுங்கிக் கொண்டே நின்றிருந்தது.எலி மிக ஏளனமான புன்னகையோடு இருந்தது.
இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவதாக விசு எஸ்.எம்.எஸ் பண்ணி இருந்தான். நானும் டீக்கு காசை கொடுத்துவிட்டுக் கிளம்பத் தயாரானேன்.நான் நீட்டிய ஐம்பது ரூபாயை வாங்கி தன் மேசையில் வைத்துக்கொண்டே .கல்லாவில் இருந்த மனிதர் எட்டிப் பார்த்தார்.அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே நடப்பதை உறுதி செய்தவராகத் தன் சட்டைப் பையில் இருந்த செல்லை எடுத்தார்.எந்த பட்டனையும் அழுத்தாமல் தன் காதில் வைத்து
“சார்…ஆமாம் சார் கெளம்பிட்டாங்க சார்…”என்றவர் லேசாகத் திரும்பிப் பார்த்தார்.
எதிர்முனை எதுவோ பேச உம்..உம்..என்று கேட்டுக்கொண்டே இருந்தவர்
“பீ.எம்.ஆர் சார்…நீங்க பெரிய டைரக்டர்..நீங்க கேக்கும் போது எப்டி சார் மறுக்கமுடியும்..?அதான் சார் 2 பேரும் வந்ததும் செல்லுல உங்க நம்பரை அடிச்சி பைக்குள்ளே வெச்சிக்கிட்டேன்.பக்கு பக்குன்னு இருந்திச்சி சார் உங்க நேரத்துக்கு மழை வேற அடிச்சி ஊத்துச்சா…அதான் இங்கனயே உக்காந்துட்டாங்க……”
நான் அந்த திருநீறும் குங்குமமும் வியர்த்துக் கொண்டிருந்த நெற்றிக்குக் கீழே இருக்கும் அவரது கண்களைத் தேடினேன்.
“நான் இப்பிடி செல்லை ஆன் செஞ்சி வெச்சிருந்தேன்னு தயவு செஞ்சி சொல்லிடாதீங்க சார்…”இப்போது அந்தக் கண்கள் எங்கேயும் பார்க்காமல் தாழ்ந்தன.அவரது குரலில் இன்னுங்கொஞ்சம் நடுக்கம் தெரிந்தது.
“சரி சார்…இருக்கட்டும் சார்…அப்பறம்..”.லேசாக இழுத்தவர் “என் மச்சான் வெங்கடேசுன்னு..உங்க படம்னா பைத்தியம் சார்…அவனுக்கு ஒரு சீன்ல தலையைக் காட்டிறணும்னு ரொம்ப நாளா அனத்துவான் சார்.இந்த மாதிரி பீ.எம்.ஆர் சார் ஆபீசு உங்கடைக்கு எதுத்தாப்ல தானே இருக்கு..எனக்கு ஒரு சீன்ல நடிக்கவெய்யி மாமான்னு ஒரே நச்சரிப்பு சார்.போன படத்தப்பவே ஒரு தரம் கேட்டேன்…”.லேசான சிரிப்புடன்
“ரொம்ப தாங்க்ஸ் சார்…ஓக்கே சார்….ஓக்கே சார்..வர்ற வெள்ளிக்கிழமை தான சார்…ஏவியெம்மா சார்… சரிங்க சார்…ரொம்ப நன்றிங்க சார்…”
பயபக்தியுடன் செல்லை டேபிள் மேல் வைத்தார்.இன்னும் நான் நிற்பதைப் பார்த்துவிட்டு கொஞ்சம் கறாரான குரலில்
“என்னா வேணும்..?”
“50 ரூ கொடுத்தேன்.மிச்சம் தர்லை…”
உடனே தன்னால் தாமதம் என்பதை உணர்ந்துகொண்டவராக
“சாரி சார்..முக்கியமாப் பேசினதுனால கவனிக்கலை..இந்தாங்க சார்…”அவர் கொடுத்த மிச்சத்தைக் கையில் ஏந்தியபடியே வெளியே வந்தேன்.எதிர்ப்புறம் விசுவின் அலுவலகத்தை நோக்கி நகர்ந்தேன்.அதற்கு முந்தைய வாசலில் நின்றபடி இன்னும் சுவாரசியமாகத் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்த ராஜியையும் வினோத்தையும் பார்த்துக்கொண்டே கடந்து சென்றேன்.சற்று முன் அவ்வளவு மழை பெய்ததற்கான அறிகுறியே இல்லாமல் பளீரென்று முடிவடைந்திருந்தது அந்தக் காட்சி