சாலச்சுகம் 20
காணாமச்சம்
திடீரென்று ஒரு மச்சத்தைக் காணவில்லை.
நேற்று இரவு உறங்கும் போதும்
அந்த மச்சம்
என்னோடு தான் இருந்திருக்கிறது
என்று நம்ப விரும்புகிறேன்.
உண்மையில் எப்போது அதனைக்
கடைசியாக கவனித்தேன்
என்று தெரியவில்லை..
இந்த தொலைதல்
மிகவும் அந்தரங்கமாகத் தோன்றுகிறது
அந்த மச்சத்திற்கு
என்னிடம் சொல்லுவதற்கு
ஏதோவொரு செய்தி இருந்திருக்கக் கூடும்.
என்னிடமிருந்து விலகிச் செல்வதன் மூலமாக
தன் ரகசிய செய்தியொன்றை உணர்த்தப் பார்க்கிறது.
அதை நான் அறியும் வரை
அந்த மச்சம் என்னிடம் திரும்பிவரப் போவதில்லை எனவும்
தோன்றுகிறது.
ஒருவேளை இவையெலாம் அப்படியே நிகழலாம்.
அல்லது
துயிலெழுகையில்
மீண்டும் தன் பழைய இடத்துக்கே
அந்த மச்சம் திரும்பியிருக்கவும் கூடும்
முன்பொரு முறை
என் மீன் தொட்டியிலிருந்து
இரண்டு மீன்கள்
சில தினங்கள் எங்கோ வெளியே சென்றுவிட்டுத்
திரும்பிவந்ததையும்
இன்னொரு தடவை
நினைத்துக் கொள்கிறேன்.
எதையும் யூகிக்காமல்
அதனதன் போக்கில் இருந்துவிடுவதுதான்
உத்தமம்,
சாலச்சுகம்.