கதைகளின் கதை 4

   கதைகளின் கதை 4
கரிப்புகைச் சித்திரங்கள்


ஒரு சிறுகதையின் ஆகச்சிறந்த வேலை என்னவாயிருக்கும்..?படிப்பவனுக்குள் ஒரு சிறுகதை சென்று உறைவது எங்கனம்..?அறம் ஒழுக்கம் வாழ்வு முறைகள் தீது நன்று என்றெல்லாம் நன்னெறிகளாகட்டும். நாளைய விடியலைப் பொன் பொழியும் பொழுதாக மாற்றித் தருவதற்கு மொழியை ஆழ அகழ்ந்து விசித்திர சூட்சுமங்களை அறிந்து தருவதாகட்டும் மாபெரிய ரகசியங்களை நம்பிக்கை ஊட்டுகிற அமுத நிகர் சொல்லாடல்களை இன்னபிறவற்றை உள்ளடக்கிய விஷயப் பிரதானங்களாகட்டும் இவற்றுக்கெல்லாம் அப்பால் ஒரு சிறுகதை வாசிப்பு வாசகனுக்குள் எதை நேர்த்துகிறது..?

தொடர்ச்சியாக வாசிப்பவன் தன் அனுபவத்தைச் சேகரித்தவாறு நகர்ந்து கொண்டே இருக்கிறான்.அது வெறும் அனுபவம் சார்ந்ததன்று.எழுத்து மெய்ப்பிக்கிற அனுபவம் மாத்திரமல்ல மாறாக அது சேகரிப்பவனின் ஆழ்மனதில் தொடர்ச்சியாக கலாச்சாரமும் பண்பாடும் சார்ந்த செம்மையுறுதலை நிகழ்த்திக் கொண்டே இருக்கவல்லது.பெரும் படிப்புக்களை படித்த பாண்டித்யத்துக்குச் சற்றும் குறைவில்லாதது தான் தீவிர இலக்கிய வாசகனுடைய அறிதலும் கண்டடைந்த ஞானத்தின் ஒளிர்தலும் எனலாம்.சிறுகதை தானே என்று ஒதுக்கி விட முடியுமா என்ன..?தமிழ் மாத்திரம் அல்ல அகிலத்தின் அத்தனை மொழிகளிலும் சொல்லாப் பொருளைச் சொல்ல வருவதன் முழுமுதல் ஆடுகளம் சிறுகதையாய்த் தான் இருக்கிறது.இனியும் இருக்கும்.

தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றில் கால வரிசைப்படி அல்லாது முன்னும் பின்னுமாய் எழுதப்பட்ட சிறுகதைகளை அலசுவதே இந்தக் கதைகளின் கதை தொடரின் நோக்கமாகிறது.காலவரிசைப்படி அணுகுவதில் ஒரு சிறு ஒவ்வாமையை உணர்கிறேன்.சிறுகதைகள் எழுதப்பட்ட மொழி அவற்றின் உள்ளீடுகளின் தன்மை மற்றும் கதாபாத்திரமாக்கல் தொடங்கி சிறுகதையின் உபகூறுகள் சலிப்பை ஏற்படுத்தி விடக் கூடிய காலக்கிரம அபாயத்தைத் தவிர்ப்பதற்கே முன்னும் பின்னுமாய்க் கலைத்துப் போடப்பட்ட படைப்புக்களை அலசுகிறோம்.வரிசையற்ற வரிசை எப்போதும் நல்லது.

No photo description available.

இருபதாம் நூற்றாண்டுக்கு அப்பால் எழுதப்பட்ட சிறுகதைகள் பெரும்பாலும் வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை எப்போதும் மாறிக் கொண்டே இருக்கக் கூடிய தொடர்பின்மையை பேசுகிறவையாக எழுதப்படுகின்றன.காலம் சார்ந்த மாற்றம் என்று மாத்திரம் இதனைக் கொள்ள முடியாது.மேலோட்டமாய்ப் பார்த்தால் சமீபத்தின் பல கதைகள் காத்திரமற்ற வெற்றுக் குமிழிகளாகவும் தரவுகள் மற்றும் புத்தனுபவ விவரணை சார்ந்த மாய சொலல் முறை வரைபடங்களாகவும் மாத்திரம் முடிந்து போவதாகத் தோன்றலாம்.இருபதாம் நூற்றாண்டின் முடிவுக்கு அப்பால் எழுத வந்திருக்கும் எல்லோரையும் ஒற்றைச் சொல் கொண்டு மொத்தமாய் நிராகரித்து விடுவதும் ஆகாது.சிறுகதை என்பது முன்னைக் காலத்தை விடவும் அதிகளவில் எழுத முனைவதாக ஒரு தோற்றம் மறுமுனையில் சிறுகதைகளுக்கான இதழியல் இட ஒதுக்கீடுகள் முற்றிலுமாய்க் குறைந்திருப்பது புதிய சித்திரம்.

இவற்றுக்கு நடுவே இன்றைய காலகட்டத்தில் தொண்ணூறுகளுக்கு அப்பால் எழுதவந்து இரண்டாயிரமாவது ஆண்டுகளைத் தாண்டி நிலைபெற்றிருக்கும் சிறுகதை எழுத்தாளர்களில் மறுதலிக்க முடியாத ஒருவர் எஸ்.செந்தில் குமார்.
நாற்பத்து ஒன்பது வயதாகும் எஸ்.செந்தில் குமார் கடந்த 23 ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்தில் அறியப்பட்ட எழுத்துக்களுக்குச் சொந்தக் காரர்.8 சிறுகதைத் தொகுதிகள் 6 நாவல்கள் மற்றும் மூன்று கவிதைத் தொகுதிகள் மற்றும் ஒரு கட்டுரைத் தொகுதி ஆகியவற்றை எழுதி உள்ள எஸ்.செந்தில்குமாரின் முக்கியமான சிறுகதைத் தொகுப்பு அலெக்சாண்டர் என்னும் கிளி.இது 2014 ஆமாண்டு உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்தது.

செந்தில்குமாரின் கதை உலகம் நிச்சலனமானது.பெரும் அதிர்வுகளுக்கு மாற்றாக ஒரு இலையும் அசையாத வனாந்திரத் தனிமையை அதன் புழுக்கத்தை சாமான்ய மனதின் ஊசலாட்டங்களை பெரும் சாலைகளாகவும் இரக்கமற்று விரையும் வாகனங்களின் கரிப்புகைச் சித்திரங்களாகவும் ஞாபகத்திற்கு எதிர்த்திசையில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் நிலத்தின் நகரங்களை அதன் பெயர்களற்ற மாந்தர்களை அவர்தம் வாழ்வின் ஒரு காட்சியை எடுத்துக் கதை செய்து பார்க்கிறார் செந்தில்குமார்.தன் பெரும்பாலான கதைகளை ஒரு சஞ்சாரியின் நிலையற்ற அலைதலாகவே விரிக்கத் தலைப்படுகிறார்.அவரது கதை மாந்தர்கள் பலவீனமும் தயக்கமும் நிரம்பியவர்கள்.எந்த வகையிலும் நாயகத்துவமோ முன் நின்று நெஞ்சம் நிமிரும் சூட்சுமச்சித்தமோ வாய்க்கப் பெறாதவர்கள்.நிஜத்துக்கு வெகு அருகாமையில் வாசிப்பவர்களின் உலகத்திலிருந்தே கதைக்களனையும் அதன் சம்பவ அடுக்குகளையும் தேர்ந்தெடுக்கும் செந்தில்குமாரின் கதைகள் பெருந்திருப்பமோ ரகசியத் தீர்மானமோ அற்றவை.மாறாக வாசிப்பவனின் சமாதானத்துக்குள் தங்களைப் பொருத்திக் கொள்ளும் பூர்வ அபூர்வ தீர்வுகளை நோக்கி ஓடுபவை.ஒரு வெட்டுக்கத்தியின் கச்சிதத்தோடு தன் கதைகளின் முடிவுகளை ஏற்படுத்துவது செந்தில்குமாரின் இன்னொரு சிறப்பு.,அவரது கதைகள் ஒருபோதும் வாசகர்களைக் குழப்புவதில்லை.

மந்திரதந்திரங்களையோ சூத்திர உபாயங்களையோ நாடுவதற்கு மாற்றாக இயல்பு வாழ்வின் மீவுரு மாறாத ஒரே போன்ற ஓட்டங்களையே சலித்து நிறுத்துவதன் மூலமாகத் தன் கதைகளைத் தொடங்கும் செந்தில்குமார் கதைகளின் போக்கில் பாத்திரங்களின் முரணை வெகு அழகாக வளர்த்தெடுப்பதை எப்போதும் விரும்புகிறார்.அவரது பாத்திரங்கள் முரண்பட்டுக் கதையின் சாலையைப் பல துண்டங்களாக்குகின்றன.முடிவை நோக்கி நீர்மமாய் ஓடி முதலில் தொடும் உபபாதை கதையைத் தீர்த்து வைக்கிறது.

மேற்சொன்ன தொகுப்பில் ஒரு கதை அ.பூங்குழலி என்னும் தலைப்பிலானது.

சுந்தரேசன் எனும் பாத்திரம் வழக்கமாய்ச் சென்று வரும் சாலை ஒன்றில் ஓரிடத்தில் தினமும் ஒரு பெண் போலீஸைப் பார்க்க நேர்கிறது.சுந்தரேசனுக்கு அந்தப் பெண் போலீஸ் மீது பேரார்வம் பிறக்கிறது.அவள் பெயர் அ.பூங்குழலி என்று அவளது நேம் பேட்ஜ் சொல்கிறது.மூன்று மாதங்களுக்கு முன்னால் கல்லூரிப் பெண் ஒருத்தி மேம்பால நிறைவில் பஸ்ஸிலிருந்து கீழே தவறி இறக்கிறாள்.அதிலிருந்து அந்த இடத்தைக் கடக்கையிலெல்லாம் சுந்தரேசனுக்கு அவள் ஞாபகம் வந்து போகிறது.அதே இடத்துக்கு அருகாமையில் தான் அவன் அ.பூங்குழலியைச் சந்திக்கிறான்.

நிமித்தம் சார்ந்து அ.பூங்குழலியை அடிக்கடி ஏன் தினமும் சந்திக்கிறான் சுந்தரேசன்.அவளுக்கு அவனைத் தெரியாது.ஆனால் அவளைத் தொடர்ந்து தொடர்பவன் சுந்தரேசன்.வாரா வாரம் வெள்ளிக்கிழமை அவளுக்கு வார விடுப்பு.அன்றைக்கு மாத்திரம் அவள் இருந்த இடத்தில் வெ.பெரிய நாயகி என்ற ஒருத்தி தோற்றத்தில் அப்படியே பூங்குழலிக்கு நேரெதிர் உருவ அமைப்பைக் கொண்டவள் வந்து செல்வாள்.அவளைப் பார்க்கையில் சுந்தரேசனுக்கு வித்யாசமாக இருக்கும்.சிரிப்பாக வரும்.மறு நாள் மறுபடி அ.பூங்குழலியைப் பார்த்த பிற்பாடு தான் அவனுக்கு நிம்மதி பிறக்கும்.

அ.பூங்குழலியை சந்திக்கும் வாய்ப்புகள் யதேச்சையானவை.ஒரு முறை சாலையில் ட்ரை சைக்கிளுக்கும் இன்னொரு வாகனத்துக்கும் இடையே வாய்ச்சண்டை முற்றி கைகலப்பாகையில் அதிக நேரம் பூங்குழலியைப் பார்க்கிறான்.இன்னொரு தடவை பூங்குழலியை அவளது தந்தை யூனிஃபார்மில் இருப்பதையும் பொருட்படுத்தாமல் பணம் கேட்டு தகறாறு செய்து அடிக்கிறார்.என்னை கேட்பது போல என் சகோதரியையும் கேளேன் என்று சொல்லும் பூங்குழலியிடம் எல்லாம் எனக்குத் தெரியும்.உங்களை கொன்றுவேன் என்று மறுபடியும் சாலையில் வைத்தே அடித்ததும் அவள் அழுகிறாள்.சுந்தரேசனுக்கு அவள் மீது பரிதாபமாகிறது.
சுந்தரேசனுக்கு அ,பூங்குழலி மீது பெரும் ப்ரியம் அதிகதிகமாகிறது.ஒரு நாள் அவளைத் தேடிக்கொண்டு அவள் வீடிருக்கும் பகுதிக்கு செல்கிறான்.அவளிடம் பேசமுயல்கிறான்.அவள் அவனைக் காதிலேயே வாங்கவில்லை.தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளிடம் தன் காதலை சொல்கிறான்.அவள் அழுதபடியே வீட்டுக்குச் சென்றுவிடுகிறாள்.இவன் திகைக்கிறான்.ஏன் அழவேண்டும் என்று புரியவேயில்லை.

அதன் பிற்பாடு இரண்டொரு தினங்கள் பூங்குழலி வேலைக்கு வரவில்லை.அவனால் அவளை சந்திக்க முடியவில்லை.அடுத்த தினம் அவளைப் பார்க்கையில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நான் உங்களைக் காதலிக்கிறதா சொன்னேன்.நீங்க ஏன் அழுதிட்டே போயிட்டீங்க என்று கேட்கிறான்.
“கவர்ன்மெண்ட் யூனிஃபார்ம் போட்டிருக்கிற கவர்ன்மெண்ட் லேடீஸ்கிட்டே பேசுற பேச்சா இது..?ஒழுங்கா போயி சேரு.ஆட்டோக்காரன் கிட்டே சொல்லி சைடில இடிச்சி விட்டுருவேன் பார்த்துக்கோ என்கிறாள்.இவனுக்கு நடுக்கமாகி அகன்று செல்கிறான்.சீருடையில் பூங்குழலி சற்று குட்டையானாற் போலத் தோன்றுகிறது.தன்னைக் காதலிக்காத பெண்ணை தொடர்ந்து எப்படி அணுகுவது எப்படி அந்தக் காதலை நேர்ப்படுத்துவது என்று குழம்புகிறான்.என்றாலும் என்றைக்காவது ஒரு நாள் அ.பூங்குழலி தன்னைத் தேடி வந்து தன் காதலை ஏற்றுக்கொள்வாள் என்று நம்புகிறான். இனி அ.பூங்குழலி என்னும் சிறுகதையின் இறுதி இரண்டு பத்திகளை அப்படியே தருகிறேன்.

சுந்தரேசனுக்கு நகரத்தின் நெரிசலினிடையே போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் பொருட்டு நின்றிருக்கும் பெண் கான்ஸ்டபிள்களின் முகத்தையும் அவர்கள் பெயர் பதித்திருக்கும் பேட்ஜையும் பார்க்கும் போது அவளது ஞாபகம் தவிர்க்க முடியாததாக இருந்தது.பெண் ட்ராஃபிக் கான்ஸ்டபிள்களின் முகங்கள் எல்லாம் ஒன்று போலிருந்தன.அவர்களது உடையும் ஒரே மாதிரியானதாக இருந்தது.அவர்களது பேச்சும் அவர்கள் வாகனங்களைப் பார்க்கும் பார்வையும் சாலையில் நடக்கும் மனிதர்களை அலட்சியப்படுத்திக் கொள்வதும் கூட ஒன்று போலிருந்தன.அவர்கள் மனிதர்களையும் வாகனங்களையும் ஒரு பொருளாகப் பார்த்துக் கொண்டிருப்பது போல அவனுக்குத் தோன்றியது.அ.பூங்குழலி தன்னைப் பார்ப்பதைக் கூடப் பொருட்படுத்தாமல் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்று புரியாதவனாக இருந்தவன் ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில் அவளைப் பார்க்க வேண்டுமென கமிஷன் மண்டிக் கடைகள் பக்கமாக சென்றான்.சற்றுமுன்பாக அவ்விடத்தில் ஒரு விபத்து நடந்திருந்தது.கூட்டமாக நின்றிருந்தனர்.ஆம்புலன்சும் போலீஸ் வேனும் நின்றிருந்தது.கூட்டத்தில் நிச்சயமாகப் பூங்குழலி நின்றிருப்பாள் என்று நடந்தான்.

கூட்டத்தினூடே அவளை எங்கும் காணவில்லை.போலீஸூம் ட்ராபிக் கான்ஸ்டபிள்களும் வாக்கி டாக்கிகளுடன் கூட்டத்தில் திரிந்து கொண்டிருந்தனர்.பூங்குழலி எங்கே சென்றிருப்பாள் என்று தேடினான்.எங்கும் இல்லை.தற்செயலாகத் தான் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்த ப்ரேதத்தைப் பார்த்தான்.வெள்ளைச் சட்டை முழுவதும் ரத்தத்தில் நனைந்து அ.பூங்குழலி என்ற நேம் பேட்ஜ் தனியாகத் தெரியும்படியாகக் கிடந்த உருவத்தை அவன் பார்த்தான்.அவனையறியாமல் பூங்குழலீ என்று கத்தத் தொடங்கினான்.கூட்டத்திலிருந்த சிலர் அவனைத் திரும்பிப் பார்த்தனர்.அவனுக்கு அழுகை கண் இமையில் தொட்டு நின்றது.கூட்டத்தை விட்டு சற்று தூரத்தில் பூங்குழலியின் அக்காவும் அம்மாவும் ஆட்டோவிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தனர்.அ,பூங்குழலியைப் போல இருக்கும் அ.தேன்மொழியைக் கூட்டத்திலிருந்தவர்கள் யாரும் பார்த்துக் கொள்ளவில்லை.தேன்மொழி கூட்டத்தை விலக்கி விட்டுத் தன் தங்கையின் மேல் விழுந்து கதறி அழத் தொடங்கினாள்.

நவ வாழ்வில் சாலையிலேயே இயங்கும் இன்னொரு உலகத்தின் யதார்த்தத்திற்கு வெகு அருகாமையில் எழுதப்பட்டிருக்கும் அ.பூங்குழலி சிறுகதை எஸ்.செந்தில்குமாரின் எழுத்தாற்றலுக்கு ஒரு நற்சான்று என்பேன்.இந்தக் கதையில் பூங்குழலிக்கும் தேன்மொழிக்கும் இடையிலான உருவ ஒற்றுமை மற்றும் சுந்தரேசனுக்கு அவர்கள் இருவருடன் நிகழும் சந்திப்புகள் இவற்றினூடே ஒரு தலைக்காதலின் இன்றைய செறிவூட்டப்பட்ட பிரதியாக இக்கதையைப் படைக்கிறார்.மேலும் இக்கதையின் துன்பம் சார் அழகியலாக இதன் தொடக்கத்தில் யாரெனப் பேர் தெரியாத ஒரு பெண் அதே பாலத்தில் சுந்தரேசனின் கண் எதிரே பேருந்திலிருந்து தவறி விழுந்து இறந்து போகிறாள்.சாலையில் சந்திக்கும் யாரோ ஒருவள் என்னும் அவளது சித்திரம் மெல்ல சுந்தரேசனின் ஞாபகத்தில் மங்கி நீர்த்துக் காணாமற் போகிறது.இக்கதையின் பூர்த்தியில் அ.பூங்குழலி என்னும் சாலையில் சந்திக்கும் இன்னொருவளும் அதே போல சாலையில் இறந்து கிடப்பதைப் பார்க்கிறான்.அங்கே அவளைப் போன்ற மற்றொருவளாக அ.தேன்மொழியைப் பார்க்கிறான்.பூங்குழலி என்றெண்ணி அவள் மீதான காதலை தேன்மொழியினிடத்தில் சொல்லுகையில் அவள் அழுகிறாள்.அதே விஷயத்தை பூங்குழலியிடம் நினைவுறுத்துகையில் அவள் வெடித்து விரட்டுகிறாள்.வாசகனின் ஊசலாட்டத்தை இறுதி வரைக்கும் நீட்டித்திருப்பது சுவை.

பாத்திரமுரணைக் கொண்டு எழுதப்பட்ட ஆகச்சிறந்த கதைகளில் ஒன்று எஸ்.செந்தில்குமாரின் அ.பூங்குழலி.