கதைகளின் கதை 5
தொடர்ந்தோடிய மொழியாறு
அசோகமித்திரன் தமிழ் சிறுகதைகளின் உலகத்தில் ஓங்கி ஒலிக்கும் எழுத்துக்காரரின் பெயர்.அறுபது ஆண்டுகளாக இருநூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளை எழுதி இருக்கும் அசோகமித்திரனின் கதை உலகம் வினோதமானது.தமிழ்ச்சிறுகதைகளுக்
தனது அப்பாவின் சினேகிதர் தொகுப்புக்காக 1996 ஆம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருதைப் பெற்ற அசோகமித்திரன் 1939 ஆமாண்டு சிகந்திராபாதில் பிறந்தவர்.இயற்பெயர் தியாகராஜன்.18ஆவது அட்சக்கோடு ஒற்றன் மற்றும் கரைந்த நிழல்கள் ஆகியன இவரது குறிப்பிடத் தகுந்த நாவல்கள்.பல விருதுகளைப் பெற்றிருக்கும் அசோகமித்திரன் கணையாழி பத்திரிக்கையின் ஆசிரியராகப் பலகாலம் பணியேற்றவர்.
அசோகமித்திரனின் வினோதம் அவரது மொழியில் துவங்குவதாகக் கொள்ளலாம்.பாசாங்கற்ற தனித்த மொழியைத் தொடர்ந்து தன் கதைகளில் படைத்துப் பார்த்த ஒருவர் அசோகமித்திரன்.அவரது மனிதர்கள் என்று யாரையும் தனித்துச் சுட்ட இயலாதபடிக்கு எங்கும் நிறைந்து ததும்புகிற எல்லாரையும் எல்லாரையும் தன் கதைகளுக்குத் தேவைப்படுகையில் அழைத்துக் கொள்வதும் அவர்களைக் கொண்டு தன் கதைகளைச் சொல்லிச் செல்வதுமாக ஒரு மாபெரிய படைப்பாளி அசோகமித்திரன்.அவரது பெண்கள் தனித்தவர்கள்.கோபமும் இயலாமையும் நிராசையும் ததும்புகிற கண்ணீருமாக அத்தனை அசலானவர்கள்.அவரது சிறார்கள் அத்தனை நிசமான குழந்தமையைச் சொல்லிச் செல்பவர்கள்.தானொரு கதைசொல்லி என்பதைத் தாண்டித் தன் பாத்திரங்கள் அத்தனையிலும் நிரம்பிக் கலைந்து அருகியும் வெளியேறியும் தன் கதைகளின் நீர்மமாகத் தானே ஆகித் தொடர்ந்தோடிய மொழியாறு என்று அவரைச் சொல்ல விழைகிறேன்.அது புகழ்ச்சியல்ல.நிதர்சனம்.
மிக நேரடியாகக் கதைகளுக்குள் புகுந்து கொள்வதை அசோகமித்திரனின் சிறப்புக்களில் ஒன்றெனச் சுட்ட முடியும்.அவரது பல கதைகளும் எந்த ஒரு ஜோடனையும் இல்லாமல் நேராக நெற்றியிலறைந்து உள்ளே இழுத்துச் செல்லும் இயல்பினைக் கொண்டு துவங்குகின்றன.எழுதுகிறவன் கொஞ்சமும் வெளிப்படாமல் ஒரு மகாவாக்கியத்தை ஊசியின் நுனி போலக் கூர்வாளின் திறப்பைப் போல செருகிச் செல்வதன் மூலம் கண்டிப்பான ஆசிரியப் பிரம்பின் தீண்டலைப் போலவே அவரது பெரும்பாலான கதைகள் துவங்குகின்றன.
நெடியதோர் ஒருவழிப்பாதையில் எந்த ஒரு விரைதலின் நிமித்தமும் இல்லாமல் மெல்ல அசைந்தாடும் வண்டிப் பயணத்தின் அசைதலைப் போலவே அவரது பல கதைகள் காலத்தோடு இயைந்தபடி நிகழ்ந்தேறுகின்றன.அபத்தங்களின் வருகைகளுக்கு எங்கனமும் தடையிடமுடியாத நிகழ்வாழ்வின் அசூசையைப் படர்க்கைச் சித்திரமாக்கித் தருவது இவரது பெரும்பலம்.அப்படியான கதைகளில் ஒன்றெனக் கண்ணும் காதும் எனும் கதையைச் சொல்ல முடியும்.ஊனமுற்றவர்களால் நடத்தப்பெறும் பொதுத் தொலைபேசி ஒன்றை இக்கதையின் களனாக்கி இருப்பார்.வாசிக்கிற அனைவருக்கும் தொண்ணூறுகளின் இறுதி வரைக்குமான காலகட்டத்தின் அத்தனையும் கதையினூடே உப பிரமாணங்களாகத் தொடர்ந்து வருவதை உணர இயலும்.பெரும் பரிதாபத்துக்கு மாற்றாக அந்த டெலிபோன் பூத்தின் அன்றாடங்களின் ஒரு விள்ளலை சொல்லிக் கொண்டே வரும் அசோகமித்திரன் அந்தக் கதையை இப்படித் துவக்கி இருப்பார்.சூடாமணிக்குக் குமட்டிக் கொண்டு வந்தது என்று.கதையின் இறுதியில் சூடாமணி தான் கர்ப்பமாக இருப்பதைக் கணவன் மனோகரனிடம் சொல்வாள்.அவன் மறுமொழி இப்படி இருக்கும்.”பொறக்கப் போறதுக்காவது கண் ஒழுங்கா இருக்கணும்”இந்தக் கதை நமக்குள் பெயர்த்துத் தரும் அதிர்ச்சி பெயரற்றதெனினும் மிகக் காத்திரமானது.
சின்னஞ்சிறு கதையான ரிக்சா என்னும் கதை சுவாரஸ்யமானது.குழந்தை ரிக்சாவை ரிஸ்கா என்கிறது.திரும்பத் திரும்ப ரிக்சா என்று சொல்லிக் கொடுக்கிறார் தந்தை.வீடு திரும்பும் தாயிடம் ஏன் நடந்து வரே ரிக்சாவில் வரலாம்ல என்று கேட்ட போது அவள் பதிலுக்கு ஏங்க நீங்க ரிக்சான்னா சொன்னீங்க என் காதுல ரிஸ்கா என்று விழுந்தது என்கிறாள்.மேலோட்டமாகப் பார்த்தால் இக்கதை ஒரு சொல்லைத் திருத்துவதும் பிறழ்ந்தொலிப்பதும் குறித்தது போலத் தொனித்தாலும் இதன் உள்ளர்த்தங்கள் வியப்பைத் தருபவை.இதன் இடையிலொரு வரி வருகிறது.”உலகம் ஷண நேரம் அமைதியாக இருந்தது”
அடுத்த கூற்றாக இதனைச் சொல்லலாம்.வெகு இயல்பான ஓரிடத்தில் கதையை முடிப்பது அசோகமித்திரனின் பாணி.அல்லாது போனால் பாத்திரங்கள் கோடு தாண்டுவதும் அதனொரு கூடுதலாக கதை முற்றுவதும் அவரது இயல்பு.சாமான்யர்களின் உலகத்தில் பிரகாசமான ஏற்பாடுகளின் கதாசாத்தியங்களில் மற்றபிறர் கவனம் செலுத்திய ஒரு கட்டத்தில் அதே உலகின் உட்புறத்தில் ஆழ்ந்து மங்கலான பிரதிபிம்பங்களின் மனோஅவஸ்தைகளை முனகல்களை அவர்தம் பலவீனங்களின் வினோதங்களை கதையாக்கியது அசோகமித்திரனின் சிறப்புகளில் இன்னுமொன்று.
பிச்சுக்கட்டி என்று ஒரு கதை.1994இல் எழுதியது..தரையில் பதிக்கப்பெறும் நவகாலத்தின் மின்சாரக் கேபிள்கள் பழுதாவதும் அதை மின்வாரியக் காரர்கள் வந்து சரிபார்ப்பதும் இக்கதையின் ஊடுபாவுகளாகின்றன.இந்தக் கதையில் ஒரு சின்ன காட்சிப்படுத்தலை நோக்கலாம்.மின் வாரிய ஊழியர்கள் வந்து தங்கள் சட்டைகளை மரத்தின் இடுக்கு வீடுகளின் வெளிச்சுவர் மோட்டார் சைக்கிளின் கண்ணாடி என வெவ்வேறு இடங்களில் தொங்கவிட்டும் மடித்து வைத்தும் தங்கள் வேலையைக் கவனிக்கிறார்கள்.நம்மில் பலருக்கும் காணவாய்க்கிற மிக இயல்பான காட்சி தானே இது..?
இங்கே அசோகமித்திரன் கூடுதலாக ஒரே ஒரு வரியை எழுதுகிறார்.
“அவர்கள் சட்டைகள் கிடக்கும் இடங்கள் உலக வாழ்க்கையின் அபத்தச் சேர்க்கைக்கு ஓர் எடுத்துக் காட்டாக இருந்தது”
எளிதில் கடந்துவிட முடியுமா இந்த ஒரு வரியை..?
அசோகமித்திரனின் கதை உலகம் தனித்தது.அணுகிப் பார்க்கும் யாரையும் வசீகரித்துத் தனக்குள் செருகிக் கொள்ள வல்லது.என்றாலும் கூட அந்த உலகம் அப்படியே நிஜப் புற உலகம் அல்ல.இடை வித்யாசங்களை தன் கதாவுலகத்தின் பின்னணி இசைக்கோர்வைகளைப் போலச் சித்தரிக்கிற லாவகம் அசோகமித்திரனுடையது.வேறெங்கேயு
இன்னொருவன் என்னும் கதையை இங்கே பார்க்கலாம்.இந்தக் கதை எழுதப்பட்டது 1964இல்.
இந்தக் கதை கதைசொல்லியின் விவரணையில் துவங்குகிறது.
அது ஒரு ரிக்ரியேஷன் கிளப் உடன் சேர்ந்த உணவகம்,உள்ளே நான் சென்று அமர்கிறேன்.எதையோ ஆர்டர் செய்கிறேன்.எனக்கு எதிரே இருவர் வந்தமர்கின்றனர்.ஏற்கனவே அவர்கள் உரையாடலை அங்கேயும் தொடர்கின்றனர்.அவர்களில் ஒருவன் அங்கலாய்க்கிறான்.இன்னொருவனையு
அவர்கள் எதையோ ஆர்டர் செய்துவிட்டுத் தங்கள் சம்பாஷணையைத் தொடர்கிறார்கள்.
ஒரு பிணத்தை நேற்று மாலை தந்ததாகவும் பெற்ற அம்மாவுக்கே அடையாளம் தெரியாத அளவு முகமெலாம் சிதைந்திருந்ததாகவும் சொல்பவன் டாக்டர் நாயர் மிகவும் கண்டிப்பானவர் என்றும் போலீஸ்காரர்கள் அடித்ததால் தான் அந்தப் பையன் இறந்தான் என்று எழுதிவிட்டார் என்றும் எந்த சமரசத்துக்கும் அவர் இணங்குபவரில்லை என்றும் கூறுகிறான்.
அதற்கு ஒரு கண்ணில் சதை வளர்ந்தவன் “டாக்டரே தான் கம்ப்ளெயிண்டை எழுதினாரா?” எனக் கேட்க “அவரே கைப்பட எழுதி ஒரு புகாரை ஐஜிக்கும் இன்னொன்றை மந்திரிக்கும் அனுப்பியதாக” சொல்கிறான் இன்னொருவன்.போலீஸ்காரர்களை இரண்டு பேருமாய் நிறையப் பழிக்கிறார்கள்.அவர்கள் இரக்கமற்றவர்கள் என்றும் அவர்கள் அறுத்த கைக்கு சுண்ணாம்பு தரக் கூடாதென்று சபிக்கிறான் ஒருவன்.
மறுபடி இரட்டைக் கண்ணன் கேட்கிறான் “இரண்டு பேரை போலீஸ் இழுத்துச் சென்றதா…நீ பார்த்தாயா..?” என்று.அதற்கு “நிச்சயமாய்த் தெரியும் என்ற இரண்டாமவன் இரண்டு பேரை கட்டி இழுத்துச் சென்றதை லாண்டரிக்காரர் பார்த்ததாகச் சொல்பவன் டாக்டர் உடனே இரண்டு போலீஸ்காரர்களை சஸ்பெண்ட் செய்ய வைத்து விட்டார் என்று பாராட்டுகிறான்.
இத்தனையும் ஒரு வெள்ளிக் கிண்ணம் காணாமல் போனதற்காகத் தான் நிகழ்ந்தன என்று சொல்லும் முதலாமவன் இன்னொரு பிணத்தை ஏன் கொடுக்கலை என்று வினவ அதற்கு இரட்டைக் கண்ணன் ஒருத்தனை காணம் ஓடிட்டான் என்று பொய்யாய்ப் புரட்டுவதாக போலீசை குற்றம் சொல்கிறான்.
சம்மந்தப் பட்ட போலீஸ்காரர்களை தூக்கிலிட வேண்டுமென்று ஒருவனும் அப்படி ஆகாது ஜெயிலுக்குப் போய்த் திரும்பி விடுவார்கள் என்று அடுத்தவனும் சொல்கிறான்.
இப்போது இருட்டாகி விட எனக்கு உடம்பெல்லாம் வலி பிழிந்தெடுக்கிறது. எழுந்து பில்லைக் கட்டி விட்டு தட்டுத் தடுமாறி வருகிறேன்.எங்கெங்கோ சுற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகே செல்கிறேன்.நான் நினைத்தமாதிரியே அந்த ஸ்டேஷனைச் சுற்றிப் பெருங்கூட்டத்தின் ஆவேசம் காணக்கிடைக்கிறது.கைக்கு அகப்பட்டதை எல்லாம் பூட்டப் பட்ட ஸ்டேஷன் கதவின் மீது எறிந்து கொண்டே கொல்லப் பட்ட இன்னொருவனின் பிணத்தைக் கேட்டுக் கத்திக் கொண்டிருக்கிற கூட்டம் நேரம் செல்லச் செல்ல ஆவேசமடைகிறது.உள்ளே சில போலீசாரும் சொற்ப ஆயுதங்களுமே இருப்பதை உணரமுடிகிறது.பதற்றம் கூடுகிறது.எப்படியாவது கதவைப் பிளந்து ஸ்டேஷனை அடித்து நொறுக்கும்படி தங்களைத் தாங்களே கட்டளையிட்டுக் கொள்கிறது அந்தக் கூட்டம்.நான் மெல்ல அந்தக் கூட்டத்தின் நடுவே சென்று கதவை சமீபிக்கிறேன்.நிறுத்து நிறுத்து என்கிறேன்.இன்னொருவன் கொல்லப்பட்டிருக்கிறான் என்று மீண்டும் மீண்டும் கத்துகிற கூட்டத்திற்கு மத்தியில் பலவீனமான குரலில் இல்லை இன்னொருவனை அவர்கள் கொல்லவில்லை.சம்மந்தப்பட்ட போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டார்கள் என்று கத்துகிறேன்.என் குரல் எடுபடவில்லை.இப்போது ஸ்டேஷனைத் தகர்க்கும் முகமாக பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தச் சொல்கிறது கூட்டம்.நீங்கள் இப்படிக் கலகம் செய்தால் அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம் என்று கேட்கிறேன்.சீக்கிரம் பெட்ரோல் என்று கேட்குமொருவன் இது யாருய்யா நடுவில உளறிக்கிட்டு என்று என்னை நோக்குகிறது.நான் இப்போது சொல்கிறேன் உங்களுக்கு யார் அந்த இரண்டு பேர் என்றே தெரியாது என்று.
இனி இன்னொருவன் கதையின் ஈற்று வரிகள் அசோகமித்திரனின் மொழியில்
எட்டிப்போய்யா டாக்டரே சொல்லிருக்காரு.ஒரு பொணத்தைத் தரலை.உள்ளே இருக்குதுஒளிச்சி வெச்சிருக்காங்க.சன்னலை உடை.கொளுத்து”
இல்லை..இல்லை இலாகாவிலயே அவர்களைத் தண்டிக்க போறாங்க.உள்ளே ஒரு பிணமும் இல்லை”
என் உடலெல்லாம் வலிக்கிறது.என்னால் முடிந்த வரை குரலெழுப்பி நிறுத்துங்க நிறுத்துங்க நான் சொல்றதைக் கேளுங்க என்று கத்துகிறேன்.
சிறிது நேரத்தில் அவர்கள் நிறுத்துகிறார்கள்.
உள்ளே பொணம் ஒண்ணும் கிடையாது என்று கத்துகிறேன்
கூட்டம் அலறுகிறது.
இரண்டு பேரைப் பிடிச்சிட்டுப் போனாங்க.ஒரு பொணத்தைத் தானே கொடுத்தாங்க.
நான் சொல்கிறேன்.இரண்டு பேரையும் அவங்க கொன்னிருக்க மாட்டாங்க.அதுதான் உண்மை
உனக்கெப்படித் தெரியும் உனக்கெப்படித் தெரியும் என்று கூட்டம் அலறுகிறது.
நான் தான் அந்த இன்னொருத்தன் என்று கூறி விட்டுக் கீழே சாய்கிறேன்.
அசோகமித்திரனின் இன்னொருவன் கதை முந்தைய அத்தியாயத்தில் ஆ.மாதவனின் சினிமா கதையில் அலசிய MOB என்னும் பெயரற்ற கூட்டம் பற்றி இந்திய மொழிகளில் எழுதப்பட்ட மற்றுமொரு ஆகச்சிறந்த கதை என்பேன்.கூட்டத்தின் வன்முறை வெளிப்பாடென்பது மனிதனின் அகமன ஆழத்தில் கெட்டித்துப் போயிருக்கும் மிருகத்தன்மையின் க்ரூரத்தின் தண்டனையற்ற தருணமொன்றை ருசித்துப் பார்க்க விழையும் குற்ற இச்சையின் தொடர்விளைவே.இதனை இத்தனை நெருக்கமாக கதைப்படுத்துவதென்பது மிகச்சிரமமான காரியம்.அசோகமித்திரனின் மொழி வன்மையும் கச்சிதமும் வாசகனுக்குத் திறந்தும் புரிந்தும் ஆன ஒரு முடிவை நோக்கி அழைத்து வருவதைப் போல் தோற்றமளித்தாலும் இன்னொருவன் கதையில் அந்த இன்னொருவன் மனிதனின் தனிமை அவனுக்கு முன்வைக்கிற பலவீனத்தின் இருண்மையை சொற்களாக்கித் தருவதையும் கூட்டத்தின் மொழிகள் அவன் மீது அதிகாரம் மற்றும் கூட்டம் ஆகிய இரண்டுமாகக் கலைந்து பெருகுவதையும் துல்லியமாகக் கதையாக்கி இருப்பதை உணரமுடியும்.தமிழ் மொழியின் ஆகச்சிறந்த கதைகளில் இன்னொருவன் முக்கியமான ஒன்று.