அவரவர் நியாயம்

அவரவர் நியாயம்


{மிட்டாய் பசி நாவல் குறித்து கவிதா செந்தில்குமார் எழுதிய வாசிப்பனுபவம்}

மிட்டாய் பசி, தலைப்பே என்னைக் கவர்ந்தது. புத்தகத்தை முடித்ததும் பொருத்தமான தலைப்பு, வெகு பொருத்தமான அட்டைப்படம் என்று ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

மிட்டாய் என்பது குழந்தைகளின் கனவு. எது வேண்டுமானாலும், எப்பனாலும் கிடைக்கும் என்ற நிலையில் உள்ளக் குழந்தைகளை விட, வாங்கிச் சாப்பிட முடியா நிலையில் உள்ளக் குழந்தை ஒன்று பெரிய கண்ணாடிக் குடுவையில் இருக்கும் மிட்டாய்களைப் பார்க்கையில் அதன் கண்களில் தெரிவது ஏக்கம்….பெரும்பசி. அப்படியானதொரு பசியில் குழந்தைமையில் இழந்ததைத் தேடிக் கொண்டிருக்கும் ஒருவனின் கதை.
இந்தக் கதையில் அவனது பிறப்பில் இருந்தே நாம் கூட இருப்போம். இனியாவது நல்லாயிருடா என்ற ஏக்கமும், கழிவிரக்கமும் பிரார்த்தனையும், கதை முடிகையில், நம் நினைவில் வந்துபோகும்.

வாழ்க்கையென்னும் காலம் நகர்த்திச் செல்லும் இயந்திரத்தில் நாம் எல்லோரும் ஏதோ ஒரு பாகங்கள். ஏதோ ஒன்றில் உணர்வில் ஏற்படும் சுமை வாழ்தலில் பிசிறு தட்ட வைத்து விடுகிறது. ஒரு தவறு…. தவறு என்று சொல்வது கூடப் பிழை தான். ஏன்னா, அவரவர்க்கென்று ஒரு நியாயம் இருக்கும் தானே? உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிய உறவுகளினால் தன்னை, தன் இருப்பிலிருந்து, தான் இருந்த இடத்திலிருந்து, இன்னும் சொல்லப் போனால் தன்னிலிருந்து தான் வெளியேறத் துடிக்கும் ஒருவனின் கதை.

பழிவாங்க நினைக்கையில் சொல்லுவதும் ஆயுதம் தான், அதை விட மௌனம் பெரும் ஆயுதம். அதைக் கையில் எடுத்தாள் செல்லம்மா. கத்தியை எடுக்கிறான் தயா. ஆனந்தின் பழிவாங்கலைக் கொஞ்சம் தள்ளிப் போடுகிறது காலம். எதுவும் தள்ளிப்போடப்படுகையில், வேகம் குறையும். வாழ்தலில் உண்மை, நிதர்சனம் புரியும். பிழைத்துப் போ என்று பிச்சையிடும். ஆனால் மன்னித்தல் போல் ஆகக் கொடுமாயுதம் வேறெதுவும் இருக்க முடியாது.

கதை வேறு வேறு காலத்திற்கு, நகரங்களுக்கு நகர்கிறது. சில இடங்களில் அடுத்து இப்படி ஆகுமென்று நினைப்பது போல நிகழ்ந்தாலும், தருணங்களின் முடிச்சு திசைத்திரும்பி சுவாரசியமாக்குகிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்கள் பற்றியும் பேசினால், அடுத்து வாசிப்பவர்களுக்கு, சுவாரசியம் குறைந்து போகும். ஆனாலும் இதில் வரும் பெண் பாத்திரங்கள் பற்றி, என்னைக் கவர்ந்த ஒன்றிரண்டு விஷயங்கள்.

செல்லம்மா என்ற பெண், ஆனந்தின் தாய் கதாப்பாத்திரம். அவளின் ஏமாற்றம், அவள் சந்தித்த துரோகம் அவளை இறுகச் செய்து விடுகிறது. அவளின் மௌனம் பெரும் ஆயுதமாய் ஆனந்தின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. கோபம் என்பது விஷ விதை. வெளியே கொட்டிவிட்டால் நீர்த்துப் போய்யிருக்கும். உள்ளுக்குள் வைத்து அடைகாக்கும் கோபம், பெரிய விருக்ஷமாய் வேரோடும். அந்த இடத்தில் தான் செல்லம்மா விருப்பும் வெறுப்புமற்ற இடைவெளி ஒன்றில் ஆனந்தை நிலைநிறுத்துகிறாள். அன்போ வெறுப்போ, ஏதோ ஒன்று தான் உறவைப் பிணைக்கும். ஏதுமில்லா ஒன்றின் வெறுமையில் அன்னையின் ஒரு வருடலுக்காக ஏங்கும் மகனின் விழிகளில் நிறைந்திருப்பது அன்பிற்கான மிட்டாய்ப்பசி.

திலகா எவ்வளவு தான், அன்பைக் காட்டினாலும் அது சாயல் மட்டுமே. ஏன்னா அது அவளின் பற்றுகோலுக்கான பிடிமானம். இவனும் இல்லையென்றால் வேறு யாருமில்லை என்ற இடத்தில் காட்டப்படுக் கூழைக்கும்பிடு பாசம். தாயன்பிற்கு ஏங்குபவனுக்கு அள்ளிக் கிடத்தித் தாலாட்டும் எந்த மடியும் சாயல் தான், நிஜமல்ல. அந்த அன்பு ஆனந்திற்கு இனிக்கவில்லை. அந்த மிட்டாய் அவன் ஏங்கியதல்ல.

அனுவின் வாழ்க்கை பெருங்காயத்தில் மரத்துப் போனதாக இருக்கிறது. எனக்கு யாரும் எதுவும் செய்யவில்லை, என்னை யாரும் காப்பாற்றவில்லை நான் ஏன் மற்றவர்களுக்காக இரக்கப்படணும்? யார் நாசமாய்ப் போனால் எனக்கென்ன? இங்கு என் வாழ்க்கை எனக்கான,இருப்பு மட்டுமே என் பிரதானம் என்கிறாள். அவளது நியாயம் அவளுக்கு, ஏனெனில் அவளுக்குள் இருப்பதும் வெறுமை மட்டுமே. அந்த வெறுமையில் வண்ணம் தீட்டிக் கொள்ள, அவளுக்கு வேண்டியது இடுப்பில் கட்டிக் கொள்ள, அவளையும் மறந்திடாத ஒரு உறவு.

லக்ஷ்மா ஆனந்திடம் காட்டுவது இரக்கத்தினாலும், சின்ன மயக்கத்தினால் மட்டுமே. அவளிடம் அன்பு கிடைத்தது, ஆனால் அது ஆனந்தை முழுமையாக்காது.

இவர்கள் ஒவ்வொருவர் பாதையில் கடந்து வந்தப் பாதையே, அவர்களின் உணர்வுகளைக் கூர்தீட்டியது. அவர்களையே ஆயுதமாக்கியது. இவர்கள் யாருக்கும் குற்ற உணர்வு வரப்போவதில்லை. இவர்கள் யாரும் ரகுவைப் போல் மன்னிக்கப்படவில்லை. செய்த பிழைக்காய் மன்னிப்பினால் ரகுவிற்குக் கிடைத்த தண்டனை பெரியது.
தொலைதூரத்தில் தாயைப் பார்த்த ஆனந்தின் மனம் தேடியதைப் பெற்றுக் கொண்டதா, இல்லை காலம் அவன் காயங்களை மயிலிறகு கொண்டு வருடியதா, எதுவோ ஒன்றுக் கரணைத்தட்டிப் போன அவன் மனம் இளகியிருக்கலாம், அதுவே ரகுவை மன்னிக்க வைத்திருக்கலாம். அவனை மன்னித்த அந்த நிமிடத்திலிருந்து ஆனந்த் அவனது கடந்த காலத்திலின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பான்.

இனி, எங்கேனும் முறைத்துக் கொண்டுத் திமிறிக் கொண்டு நிற்கும் சிறுவன் ஆனந்தின் சாயலாகவோ, தயாவின் சாயலாகவோத் தெரியக் கூடும். இவனுங்க முரடனுங்க என்று முகம் சுளிப்பதைக் காட்டிலும், ஏதோ ஒரு அன்பின் வருடலை அவர்களுக்குத் தரக் கூடும்.

வாசித்து முடித்ததும் கிடைத்த நீண்ட பெருமௌனம் கதையின் திருப்தியைச் சொல்லியது. விறுவிறுப்பாக நகர்ந்த கதை, ஒரு திரைப்படம் பார்த்த உணர்வைக் கொடுத்தது.
வாழ்த்துகள் ரவி


No photo description available.கவிதா செந்தில்குமார்

மதுரையில் பிறந்தவர்.
திண்டுக்கல்லில் வசிக்கிறார்.
ஒரு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்.
எழுத்திலும் வாசிப்பிலும் ஆர்வம் மிக்கவர்.
இதுவரை 8 நூல்கள் வெளியாகி உள்ளன.
உரையாற்றுவதும் பயணங்களும் இவரது விருப்பத்திற்குரியவை.