கனவின் இழை
குறுங்கதை
அவனுக்கு ரொம்ப நாட்களாக ஒரு கவலை மனத்தை அரித்துக் கொண்டிருந்தது. உண்மையில் அந்தக் கவலை தான் அவனைப் பாடாய்ப் படுத்துகிறது என்பதையே அவன் சமீபத்தில் தான் கண்டுபிடித்திருந்தான். முன்பெல்லாம் என்ன காரணம் என்றே தெரியாமல் அமிழ்ந்து அமிழ்ந்து போவான். எத்தனையோ சந்தோஷங்களுடைய நடுவாந்திரத்தில் சட்டுச்சட்டென்று மனசு விலக்கம் கொள்ளும். சின்னதொரு புள்ளியில் இருள் பெருகத் தொடங்கும். பிற்பாடு மீண்டும் பழைய உற்சாகத்துக்குத் திரும்ப முடியாமற் போகும். இந்தத் திகைப்பைக் கண்டு ஒருகட்டத்தில் அஞ்சத் தொடங்கினான். விருந்து பயணம் விழா என்று சந்தர்ப்பங்களிலெல்லாமும் இப்படித் தான் நிகழ்ந்தது. நட்பு பரிவு காதல் என எத்தனையோ அணுக்கமான சமயங்களிலெல்லாம் யாரோ குறுக்கே கருணையற்ற கத்திரியை விட்டுக் கத்தரித்துப் போனார்கள். அறுந்த இழைகளை வெறித்த வண்ணம் அப்படியே உறைந்து போவான்.
ஒரு நாள் அவன் உறக்கத்தின் நடுவே தன் கனவைக் குறித்த லேசான வியத்தலை உணர்ந்தான்.அட..இந்தக் கனவு இதன் சந்தோஷம் தொடர்ந்து கொண்டே செல்கிறதே, இதைத் தன் வாழ்வெங்கும் நிகழ்வது போன்ற ஊடாட்டம் வந்து பாதியில் நிறுத்தவில்லையே என்று நினைத்தான். அப்படி நினைத்த மாத்திரத்தில் கனவினின்றும் விழித்துக் கொண்டதை அறிந்தான். அதன் பிறகு அன்றைக்கு உறக்கமே வரவில்லை. பாதியில் கலைந்தாலும் தன்னால் தான் அந்தக் கனவு அறுபட்டது ஒருவேளை தான் மட்டும் பிரக்ஞைக்குத் திரும்பியிரா விட்டால் அந்தக் கனவு மேலும் தொடர்ந்து சென்றிருக்கும் என நம்பினான். இன்னொரு முறை அந்தக் கனவாவது அது போல் வேறொரு கனவாவது வரும் பட்சத்தில் தான் எதையும் எண்ணாமல் இருந்துவிட வேண்டும் என முடிவு செய்தான். ஆனால் அதன் பின் அவனுக்கு உறக்கமும் முன்போல் இருந்திடவே இல்லை.
படுத்த மாத்திரத்தில் உறக்கங்கொள்ளுகிறவன் அதன் பின் நெடு நேர பிரயத்தனத்துக்குப் பிறகே உறங்கலானான். கனவேதுமற்ற உறக்கம் இனி சாத்தியமில்லை என்று யாரோ அவனுக்கு மட்டும் கேட்கிறாற் போல் திரும்பத் திரும்பச் சொல்வதாகவே பட்டது. கனவு வந்தால் தானே அது நீள்கிறதா பாதியில் துண்டாகிறதா எனப் பார்கக் முடியும்..? ஒரு கட்டத்தில் அவனுக்கு வாழ்வைப் போலவே உறக்கமும் கசந்து வழியலாயிற்று. மலை பிரதேசம் ஒன்றினை நாடிப் போனவன் அதன் மகாவுயரம் ஒன்றில் தனித்து நின்றான். “எனக்கு ஏன் இவ்வாறு நடக்கிறது தனக்கு மட்டும் ஏன் இப்படி வாழ்க்கை கசக்கிறது?” எனக் கத்தினான். எதிரே மாபெரிய மௌனம் மட்டும் விரவிக் கிடந்தது. “நான் என்ன செய்யட்டும் நான் என்ன செய்யட்டும்?” என்று நாலைந்து முறை கதறினான்.
அன்றைக்கு இரவு உறங்கும் போது தான் அவனுக்கு முதன்முறையாக அப்படித் தோன்றியது. அவனுக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு கவலை மனத்தை அரித்துக் கொண்டிருப்பது தான் அவனது பிரச்சினைகள் யாவற்றுக்கும் காரணம் என்று உணர்ந்தான். அவன் நினைவுணர்ந்த காலத்திலிருந்தே விதவிதமான பொய்களை உருவாக்குகிறவனாக இருந்து வந்திருக்கிறான். அவனுடைய பொய்கள் பிடிபடுவதே இல்லை. யாராலும் அவன் சொன்னவை பொய்கள் எனக் கண்டறிய முடிந்ததில்லை. ஒரு கட்டத்தில் தன் பொய் சொல்லும் திறன் மீது அவனுக்கே சலிப்பு உண்டாகி விட்டது. எங்காவது யாராவது தன்னைக் கண்டுபிடிக்க மாட்டார்களா என ஏங்கத் தொடங்கினான். ஒருவரும் அவனுடைய பொய்களைக் கண்டுபிடித்ததே இல்லை.
அடுத்து அடுத்து எனப் பொய்களை உருவாக்கிப் பார்த்தவன் ஒரு கட்டத்தில் அதிலிருந்து மனம் முற்றிலுமாக விலகிப் பொய்களை நாடாமல் போய்விட்டான். பொய்களுக்கு எதிர்த் திசையில் செல்லத் தொடங்குகையில் தான் அவனுக்கு இப்படிப் பாதி இழையில் எல்லாமும் அறுந்து விழுவதான இக்கட்டுத் தொடங்கி இருக்கிறது. இதையெல்லாம் உணர்ந்து கொண்ட பிறகு அவனுக்கு முன் ஒரே ஒரு கேள்வி எஞ்சியது. மீண்டும் தன் பொய்களுக்குத் திரும்புவதா அல்லது இந்தப் பாதி இழை வாழ்க்கையைப் பரவாயில்லை என்று ஏற்றுக் கொள்வதா என்பதே அது.
அன்றைய இரவு நெடுநாட்களுக்கு அப்பால் அவனுக்கு சீக்கிரமே உறக்கம் வந்தது. திருப்தியான உறக்கம். அதன் நடுவே மெல்லப் புகை போல் ஒரு கனவு வந்தது. அந்தக் கனவின் முதன்மை சித்திரத்தில் ஏதோ ஒரு ஊரின் முக்கியச்சாலையில் ஒருவனைக் கட்டி வைத்து எல்லோரும் அடித்துக் கொண்டிருந்தார்கள்.
“இவன் பல நாட்பொய்யன், இவனை விடாதீர்கள் அடித்துக் கொல்லுங்கள்” எனப் பல குரல்கள் கேட்டன.
கோபத்தோடு அவன் கையிலும் ஒரு கல்லைத் திணித்தான் ஒருவன்.