K.P.A.C லலிதா

K.P.A.C லலிதா


 

1948 ஆம் வருடம் பிறந்த KPAC லலிதா Kerala People’s Arts Club எனும் கேரளத்தின் பிரபல கலைக்குழுவின் போற்றத் தகுந்த விழுதுகளில் ஒருவர். 1990 ஆம் வருடம் அமரம் படத்துக்காகவும் 2000 ஆம் வருடம் சாந்தம் படத்துக்காக சிறந்த குணச்சித்திர நடிகராக இருமுறை தேசிய விருதுகளை பெற்றவர். பரத் முரளி, பஹதூர், பிரேம்ஜி, தோப்பில் பாசி, கருணாகரன், தேவராஜன் மாஸ்டர் என பல ஆளுமைகளின் பெயரால் வழங்கப்படும் நினைவு விருதுகள் தொட்டு பல்வேறு சிறப்புகளுக்கு உரியவர். கேரளத்தின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரும் தமிழில் சாவித்திரி ஊஞ்சலாடும் உறவுகள் ஆவாரம்பூ தேவர் மகன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பரதனின் மனைவியான லலிதா நடிகரும் இயக்குனருமான சித்தார்த் பரதனின் தாயாரும் ஆவார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தை இவர் ஏற்று இருக்கிறார் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை அஜித் நடித்த கிரீடம் மற்றும் பரமசிவன், உள்ளம் கேட்குமே, அலைபாயுதே, சினேகிதியே போன்ற தமிழ் படங்களில் பல்வேறு பாத்திரங்களில் நடித்திருக்கிறார் லலிதா. காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் ஷாலினிக்கு அம்மாவாக லலிதா எல்லோர் ஞாபகத்தில் உள்ளேயும் உறுதிபடப் பதிந்தார்.KPAC Lalitha | Facebook

மலையாளத்தில் பலவிதமான பாத்திரங்களை ஏற்று இருக்கும் லலிதா முதன் முதலில் தமிழ் படத்தில் தோன்றியது கமல்ஹாசனின் நூறாவது படமான ராஜபார்வை திரைப்படத்தில் அவருடைய சிற்றன்னை தோன்றினார் கே எஸ் சேதுமாதவன் இயக்கத்தில் 1970 ஆம் வருடம் உருவான ‘வாழ்வே மாயம்’ எனும் மலையாளப் படத்தில் முக்கிய பாத்திரத்தை ஏற்று அதன் மூலமாக பரவலாக அறியப்பட்டவர் லலிதா பிரேம்நசீர் சகோதரியாக தோப்பில் பாசி இயக்கிய “நிங்ங்ள் என்னெ கம்யூனிஸ்டாக்கி” என்ற படம் நல்ல பெயரை வாங்கியது. மலையாளத்தில் எத்தகைய சவாலான கதாபாத்திரத்தையும் நடிக்க கூடியவராக விளங்கியவர். நீலப்பொன்மான் உள்ளிட்ட படங்களில் மிக முக்கியமான பாத்திரங்களில் மின்னியவர். ஹரிஹரன் இயக்கிய தெம்மாடி வேலப்பன் (கிட்டத் தட்ட நம்மூர் தம்பிக்கு எந்த ஊரு கதைபோலவே கொண்ட படம்)போன்ற சூப்பர் ஹிட் படங்களிலும் லலிதாவின் பிரகாசமான பங்கேற்பு இருந்தது.

சமீபகாலம் வரை பல படங்களில் முதிர்ந்த நடிப்பை நல்கியவர் லலிதா. மோகன்லால் நடித்த இட்டமானி மேட் இன் சைனா மற்றும் துல்கர் நடிப்பில் சார்லி போன்றவை அப்படியான வேடங்களில் சில.

சிறந்த நடிப்பை நல்குகிற கலைஞர்கள் மரிக்கையில் அதற்கடுத்த காலத்தின் கலாபூர்வ வெற்றிடமொன்றை உருவாக்கிவிட்டுப் போய்விடுகிறார்கள்.காலத்தின் மானுட உழவில் ஒன்றை வேறொன்று வந்து மீட்டெடுப்பது இயற்கையின் நியதி என்ற போதிலும் சில வெற்றிடங்கள் அப்படியே மௌன நிரந்தர ஞாபகங்களாகவே மாறித் தொடர்ந்து விடுகின்றன. லலிதா ஒரு நடிகையாக ஏற்படுத்தி இருக்கிற வெற்றிடம் அத்தகையது.

அஞ்சலிகள்