எனக்குள் எண்ணங்கள் 4
கைவீசம்மா கைவீசு
பாலகுமாரனை எப்போது முதன்முதலில் படித்தேன்? என் ஞாபகசக்தி சரியாகச் சொல்கிறதென்றால் முதன் முதலில் படித்தது சின்னச்சின்ன வட்டங்கள் சிறுகதைத் தொகுப்பு. அடுத்தபடியாக மெர்க்குரிப் பூக்களை யாரோ தந்தார்கள். இதைப் படிச்சுப் பார் என்று. எனக்கென்னவோ மெர்க்குரிப் பூக்கள் நாவலுக்குள் எடுத்தவாக்கில் நுழைந்து வேகமெடுக்க முடியாமல் திணறினேன். இப்படி எப்போதாவது நேரும். தனியாக ஏன் அப்படி நடக்கிறது என்று காரணம் ஏதும் இராமல் நடப்பதே தன்னளவில் காரணமும் காரியமுமாக விரிந்து நிகழ்வது. அப்படித் தான் பழைய புத்தகக் கடைகளில் திடீரென உருவான பாலகுமாரன் வாசகனான என்னைப் பல நூல்களோடு எதிர்கொண்டார்கள். அதுவரை என் விருப்பத் தேர்வுகளில் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இத்யாதிகளும் சினிமா புஸ்தகங்களும் இருந்தன. பாக்கெட் நாவல்களில் அநியாயத்துக்கு மூழ்கிக் கொண்டிருந்த பதின்மன் திடீரென்று அடுத்த துறைக்குள் புகுந்த ஆய்வு மாணாக்கனைப் போல் வரவேற்கப் பட்டேன்.
இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மற்றும் தாயுமானவன். இதில் ஒரு நல்ல காரியம் என்னவென்றால் என் குடும்பமே அப்போது தான் பாலகுமாரனை அறியத் தொடங்கிற்று. ஒரே நேரத்தில் பாலா எங்கள் குடும்பத்தினர் எல்லோராலும் ரசிக்கப் படுகிற எழுத்தாளராக எடுத்த எடுப்பிலேயே மாறினார். அம்மாவுக்கு சிவசங்கரி முதல் சாய்ஸ். அப்பாவுக்கு பட்டுக்கோட்டை பிரபாகர் தான் உசிரை விட மேலதிகம். அக்காவுக்கு மென்மையான எழுத்தும் துப்பறியும் நாவல்களும் ஒருங்கே பிடிக்கும். எனக்கு சரித்திரம் அல்லது துப்பறியும் நாவல்கள் இவற்றோடு முந்தைய காலத்தின் எழுத்துகள் முக்கியமாக ரகமி ராண்டார்கை தேவன் பீவி.ஆர். மகரம் என கிடைத்ததை எல்லாம் வாசித்துக் கொண்டிருந்தேன். என் அப்பா ஜாலியாக சொல்வார். என்னடா என்னைய விடக் கிழடு தட்டிட்டிருக்கே என்று நான் படிக்கும் பல புத்தகங்கள் அவருக்கே ஒவ்வாது. சின்னப்பய்யன் மெரீனா, ஸ்ரீவேணுகோபாலன்,பீ.வீ.ஆர், கலாதர்,கோவி மணிசேகரன், மகரிஷி எனப் பலரையும் படிக்கிறானே என்று அவருக்கு வியப்பும் இருந்தது.
அப்படியான காலாதீத தருணமொன்றாய்த் தான் பாலா அறிமுகமானார். வீட்டார் எல்லோரும் சாப்பிடும் போது அக்கா ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டே சாப்பிடுவாள்.அனேகமாக சனிக்கிழமை இரவும் ஞாயிறு மதியமும் வாரவாரம் இரண்டு செஷன்ஸ் போகும். சின்னச்சின்ன க்ரைம் நாவல்களை ஒரு வேளை சாப்பாடு முடிவதற்குள் வாசித்து முடித்து விடுவாள். அந்த வரிசையில் திடீரென ஒரு நாள் தாயுமானவன் நாவல் கிடைத்து அப்பா தான் அதனி வாங்கி வந்தார். அக்காவும் என்ன கதை என்றே தெரியாமல் வாங்கி வாசிக்க ஆரம்பித்தாள். அதுவரையிலான வாசிப்பு என்பது வியத்தல் ரசித்தல் நகைத்தல் எனப் பலவகையான உணர்ச்சிகளைக் கொட்டவும் சப்தமாய்ச் சிரிக்கவும் என வேறு வண்ணத்தில் இருந்து கொண்டிருந்தது முற்றிலும் மாறியது அந்த நாவலை வாசிக்கும் போது தான்.
அப்பா வேலை நீக்கத்தில் இருந்த காலம் அது. அம்மாவும் அரசு வேலை என்பதால் நல்லவேளை பள்ளத்தில் வீழவில்லை. சரிவில் நில நீச்சல் அடித்துக் கொண்டிருந்தது குடும்பம்.
ஏண்டா வாசித்தோம் என்றாகும் வண்ணம் அந்தக் கதையின் உள்ளடக்கம் பல இடங்களில் கனத்த மௌனத்தை ஏற்படுத்திற்று. வழக்கமான உற்சாக மனிதனாக அதற்கு முன்பிருந்தாற் போல் அப்பாவால் அந்த நாவலின் நிகழ் காலத்தில் இருக்கவே முடியவில்லை. கேஸ் நடந்து கொண்டிருந்தது. அவர் அதன் முடிவுக்காகக் காத்திருந்தார். அதன் பிறகு அவருக்கு மீண்டும் வேலை கிடைத்தது. அதை வாசிக்கும் போது அந்தத் திருப்பம் எங்களுக்குத் தெரியாது. வேலை கிடைக்க வேண்டும் என்பது எங்கள் எல்லோரின் பிரார்த்தனையாக இருந்தது. தாயுமானவன் என்ற நாவல் என்னவோ எங்கள் வீட்டில் ஒருவராகவே பாலகுமாரன் என்ற மனிதனை மன அருகே வந்தமர்த்தியது. அக்காவுக்கு பாலகுமாரன் குருநாதராகவே தென்பட்டார். அப்பா அதன் பிறகு வேறெந்த நாவலையும் சத்தமாகப் படிக்க வேண்டாமா எனக் கேட்டதற்கு ஏன்…நிச்சயம் படிக்கணும் என்னமா எழுதறான் என்றார். அப்பா கண்கலங்கி அந்தக் கதையின் வாக்கியங்களுக்கு நடுவே சின்னஞ்சிறிய காற்புள்ளி போலவே தன்னை உணர்வதாகத் தெரிவித்திருக்கிறார். உண்மையில் அத்தனை நிஜசமீபத்தோடு அவர் வாழ்வைப் பிரதிபலித்த கதைக்கு அப்பால் அதை எழுதிய பாலகுமாரனை எளிதாக பாராமுகம் கொண்டு கடந்திருக்கலாம். அப்பா அதற்குப் பதிலாக பாலா மீது பைத்தியநேசம் ஒன்றினை வளர்த்துக் கொண்டார். அவர் காலமான 1997 நவம்பர் வரை பாலா எழுதிய எல்லா நூல்களையும் விடாமல் வாசித்தார்.
மிக அடுத்த சமீபத்திலேயே நானும் அக்காவும் சுஜாதா எனும் பெருஞ்சுழலுக்கு ஆட்பட்ட போதிலும் இன்று வரை என் அக்காவுக்கு சுஜாதா மட்டுமே தேவநேயம். இந்த உலகமே சுஜாதாவுக்கு அடுத்துத் தான். எனக்கும் அவளுக்கும் ஒரே நேரத்தில் தான் சுஜாதா எழுத்தும் அறிமுகமானது. என்றாலும் நான் என் வாழ்வின் நிழலாகவே பாலகுமாரனைப் கண்டுணர்ந்தேன். சுஜாதா என் மதிப்பிற்குரிய ஆசிரியர்களில் முதன்மையானவர். ஆனாலும் காதலுக்குரிய எழுத்துக்களின் பட்டியல் பாலா என்ற பேரோடு தொடங்குவது தான். இன்றும் அப்படித் தான். என்றும்!!
தாயுமானவனுக்குப் பிறகு பச்சை வயல் மனது அதன் பிறகு சிறுகதைத் தொகுதி ஒன்று நானே எனக்கு போதிமரம் என்று தலைப்பு. பச்சைக்கலரில் கோமாளி உருவை அட்டையில் கொண்டு வெளியானது. பல தினங்கள் என் கனவெல்லாம் அந்தப் பச்சைக்கோமாளியின் முகவாட்டம் வந்து வந்து போனது. இரும்புக்குதிரைகள் படித்த அன்றைக்கு நான் புதிதாய்ப் பிறந்தேன். அந்த நாவலையும் அதன் உள்ளுலகம் பற்றியும் இன்னோரிடத்தில் எழுதுவேன். இது வேறு நாவல் ஒன்றைப் பற்றியது.
அப்பா ஒரு நாள் என்னை அழைத்தார். பெரியார் பஸ் ஸ்டாண்டுப் பக்கம் போகப் போறேன். வர்றியா என்றார். நானும் சரி என உற்சாகமாகக் கிளம்பினேன். அதன் சுற்றுவட்டாரத்தில் தானே அய்யா புஸ்தகக் கடைகள் இருக்கின்றன. பழைய கடைகளில் பெரிதாய் எதுவும் தேறவில்லை. எனக்கோ புத்தகக் கடைக்குப் போய் விட்டு வெறுங்கையோடு வீட்டுக்கு வந்தால் உள்ளங்கை அரித்துக் கொன்று விடும். புதிய புத்தகமாவது எதாவது அகப்படுகிறதா எனப் பார்க்கலாமே ஓ யெஸ் என அப்பா சர்வோதய இலக்கியப் பண்ணைக்குள் அழைத்துப் போனார். பாலகுமாரனுக்கென்று தனி செக்சன். பக்கத்திலேயே சுஜாதாவுக்கு அவருடைய ராஜ்ஜியம் இருந்த போதிலும் அப்போது எனக்கு அவர் மீது நாட்டமில்லை. தட்ஸ் ஒய் நான் பாலாவை மட்டும் பார்த்தேன். அன்றைக்கு வாங்கியது ஒரே ஒரு நாவல். அப்போது தான் வந்திருந்தது. ம.செ அதாவது மணியம் செல்வனின் முகப்போவியம். பின் அட்டையில் அனேகமாக பாலா சூர்யாவையும் கௌரியையும் இரு கரங்களிலும் ஏந்திய படம் என நினைவு.
கைவீசம்மா கைவீசு.
என் மனன சக்தி மிகக் குறைவு. இன்றும் அப்படித் தான். மேலோட்ட நினைவுத்திறன் கலையின் ஒரு விழி. ஆழ் நினைவுத் திறன் இன்னுமோர் விழி. இந்த இரண்டுக்கும் இடையே நிலவக் கூடிய சமனின்மை கலை வெளிப்பாட்டில் காணக்கிடைக்கும் முரண் சுவைகளில் ஒன்று. சிலருக்கு இந்த இரண்டுமே வாய்க்கும். அவர்கள் சிறந்தவர்களில் மிகவும் சிறப்பது நிகழும். என் மேலோட்ட நினைவுத்திறனுக்குப் படர்க்கையில் என்னால் மறக்கவே முடியாத பல நினைவு நிரந்தரங்கள் என்னுள் உண்டு. அப்படியான உட்சிறப்பு மாளிகையின் முத்துரத்தினச்சூடல் தான் இந்த நாவல், இப்போதும் யாரிடமாவது இந்தக் கதையை விலாவாரியாக என்னால் விவரிக்க முடியும். அத்தனை பசைப்பதியம் என்னுள்.
காலம் இந்த நாவலின் மாபெரும் ஊடுபாவாய்த் திரள்கிறது. ராஜேஸ்வரி என்கிற நாவலின் முக்கியக் கதாபாத்திரத்துக்கு பதின்மத்திற்கு உள்ளேயும் வெளியேயுமாக காதலின் இருவேறு சாத்தியங்களினூடாகக் கிடைக்கிற அனுபவத்தின் சலனச்சித்திரங்களாக வாசகனின் மனத்துள் நிலைகொள்கிற கதை. ஒரே நேர்கோட்டில் இந்தக் கதை வாசிப்பு நிறைந்து விடுவதில்லை. பேராற்றின் சீற்றத்தினூடே வந்து கலக்கிற குறு நதிகளாய் இந்தக் கதையின் உப மாந்தர்களும் அவர் தம் கதையிழைகளும் வலுச்சேர்ப்பவை.
இந்த நாவலின் முக்கியக் கதாபாத்திரம் ராஜேஸ்வரியின் அப்பா. அவர் மிடுக்கோடு இருக்கும் போது இரண்டாம் தாரத்து மக்களாக ராஜேஸ்வரியும் அவள் அண்ணனும் தோற்றுவிக்கப்படுவதும் மெல்ல அந்தப் பெருங்கதா பிம்பத்தின் வீழ்ச்சி கதையின் நடு வரை பயணிப்பதும் ஒரு இழை. சென்னை மா நகரத்துக்குக் குடிபெயர்கிற எண்ணற்ற மத்யமக் கூட்டத்தின் மேலும் சான்றுகளாக ராஜியின் குடும்பம் அவள் அப்பாவுடன் சென்னைக்குப் பெயர்வது கதையின் அடுத்த இழை. முன்பிருந்த மிடுக்கெல்லாம் அற்றுப் போய் முழுவதுமான பிம்ப வீழ்தலுக்கப்பால் அதே அப்பா கதாபாத்திரம் சென்னையில் தன்னைப் பொருத்திக் கொள்ள குடும்பத்தினுள்ளேயும் ஊர் நடுவேயுமாக சிக்கலுறுவதெல்லாமும் போகிற போக்கில் காட்டப்படுவது செறிவு. கிட்டத் தட்ட இருவேறு பாகங்களாகவே இந்த நாவலைக் கருதிக் கொள்ள முடியும். ராஜேஸ்வரியின் பூர்வ காதல் முற்றிலுமாகத் தகர்த்தெறியப்பட்டு சென்னைக்குப் பெயர்வதும் அங்கே தேவேந்திரன் எனும் கதாபாத்திரத்தோடு ஏற்படும் காதலும் நகர்ந்து சென்ற விதமும் வேகமும் அனாயாசமாய்த் தோன்றும்.
முற்கதையில் பண்ணை ராஜசேகர் எனும் செல்வந்த இளைஞன் அவன் நண்பர்கள் குழாமோடு அறிமுகமாவதிலிருந்து அதன் உப-கிளைத்தலாக இரண்டு இடங்கள் மிக நுண்மையானவை என்பது என் எண்ணம். ஒன்று பண்ணை ராஜசேகர் ராஜேஸ்வரியின் அண்ணனை டூவீலரில் லிஃப்ட் தரட்டுமா என வலியப் போய்க் கேட்கும் இடம். அவன் மறுக்க இவன் சும்மா வாங்க பிரதர் என்று அழைக்கையில் சட்டென்று தினமும் வந்து என்னை காலேஜூக்கு கூட்டிப் போய் ட்ராப் செய்ய முடியுமா என்று பளீரெனக் கேட்க அதெப்படி பிரதர் என்று பின் வாங்கும் இடம். பாலாவுக்கே உரிய பார்வைக் கூர்மை.
இன்னொரு இடம் டீச்சர் வீட்டுக்குச் சென்று பேசிவிட்டுத் திரும்புகிற வழியில் தனியாத் தான் மட்டும் அத்தனை சப்பாத்தியையும் சுட்டுத் தின்னப் போறாளா…நமக்கு ஆளுக்கு ரெண்டு குடுத்தா என்ன குறைஞ்சா போய்டுவா என்று திட்டித் தீர்க்கும் இடம். மனத்தின் முகங்களாலும் சொற்களாலும் நிறைந்து வழிகிற கதைத்துவம் மிகுந்த கணம் அது.
அடுத்ததாக கண்ணாமணி என்ற கதாபாத்திரம். குடி பாபம். சிகரட் அனாச்சாரம். புகையிலையும் சீவலும் வெற்றிலையும் மட்டுமே உசிதம். நேற்றிலிருந்து நாளையை நோக்கிச் செல்பவனின் வழி-இடை-நிறுத்தம் போலவே கதையில் தன்னை விலக்கித் தோன்றுகிற பாத்திரம். தனித்துவம்-வன்மம்-திறமை-தோல்வி-இழிவு-சந்தர்ப்பம்-தியாகம்-புதிர் எனப் பல முன்-பின்-முரண்களை அடுக்கியும் கலைத்தும் ஆடிப்பார்க்கும் சூதாகக் கதையில் கண்ணாமணி பாத்திரத்தின் வருகையும் நீக்கமும் வரையிலான பகுதி தனியே மிளிர்கிறது. நான் எழுத வருவேன் எழுத்தாளனாவேன் என்றெல்லாம் தெரியாத சின்னஞ்சிறு பருவமொன்றில் எனக்கு அறிமுகமான உண்மை வருகை ஏதுமற்ற கதாபாத்திரம் கண்ணாமணி. இன்றளவும் என்னால் ஒரு தடவை இப்படி ஒருவனை அல்லது இதே இவனை எழுத முடியுமா என்று ஏங்குவதும் தயங்குவதுமான பாத்திரம் என்று இதனைச் சொல்வேன். அந்தக் குன்றலில் இருக்கக் கூடிய முழுமை அபாரமானது. இன்னொரு கதையில் நான் கண்டறியாதது. கண்ணாமணி புத்திசாலிதான். என்ன ஒன்று காலமும் சூழலும் அவனுக்குக் கைகொடுக்கவில்லை என்ற சொற்களினூடாக ஆசீர்வாதத்தையும் பிரம்பு விளாறலையும் ஒன்றாய்க் கலந்து தந்தபடி அவனைக் கதைக்குள் அனுப்பி வைப்பது பாலாவின் சாமர்த்தியம். என்னிலும் என்னைச் சேர்ந்த பலரிலும் ஏன் பாலகுமாரனிடத்திலும் கொஞ்சம் கண்ணாமணியைக் கண்டுணர வாய்த்தது என்பதே நிஜம். புனைவின் பெரும்பலம் அது நிஜமற்ற ஆக்ருதி ஒன்றினை அடைகையில் உருவாகிறது. கை வீசம்மா கை வீசு நாவல் ஒரு மாதிரி ஞாபக வண்ணத்தைத் தன் மேல் பூசிக் கொண்டு விட்ட கதை. அதைத் திறக்கையிலெல்லாம் அது காலத்தின் சாலையில் பின் நோக்கி ஓடுகிறது. பாலகுமாரன் ஆட்சிக் காலத்தின் மிக முக்கிய பருவமொன்றைத் திறந்து வைக்கிறது. பாலா எழுதிய நாவல்களில் எனக்கு மிகப் பிடித்தவற்றில் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இன்றும் உணரும் படைப்பு.
கதையின் தொடக்கத்தோடு மீண்டும் வந்து நிறையும் கைவீசம்மா கைவீசு நாவலில் அந்த இரண்டும் நிகழும் இடம் முக்கியமானது. பாலாவின் பல கதைகளில் கடலுக்கும் கரைக்கும் முக்கிய இடமுண்டு. இந்தக் கதையைப் பொருத்தமட்டிலும் சென்னைக்குப் புலம் பெயர்ந்து வந்தவர்களுக்கு அதன் கடற்கரை ஒருவிதமான அந்நியம் விலகாத புன்னகை ஒன்றினை எப்போதும் நல்கும். அங்கேயே பிறந்தவர்களுக்கானது அல்ல அந்த உணர்தல். அப்படியான புன்னகை ஒன்றினை அத்தனை இயல்பாக உணரத் தந்திருப்பார் பாலா.
எனக்கு மிகப் பிடித்த நாவல் தான். நான் பலதடவை வாசித்திருக்கிறேன். ஆனால் அப்பா இதை இரண்டாம் முறை வாசிக்கவே இல்லை