Post Views:
208
இ ன் றை ய க வி தை
கண்டராதித்தன் எழுதிய கவிதைத் தொகுப்பு “பாடி கூடாரம்”.
சால்ட் பதிப்பக வெளியீடு
101 பக்கங்கள்
விலை ரூ 130
உடைந்த வாழ்வு
மத்தியானத்தில்
நீர் தளும்பாதிருக்கிற
குளத்தின் எதிரில்
நின்றுகொண்டிருப்பவனுக்கு
குடத்தில் குளத்தை சேகரிக்கும்
பெண்ணின் மீது ஆவல்
பைய உருண்டு திரண்ட
அந்த ஆவல்
வண்ணத்திரட்சியான
நீர்க்குமிழின் மீது அமர்கிறது
ஒரு மீன் கொத்தி அந்த
தளும்பாத தண்ணீரை
தளும்பும் ஆவலை
ஒரே நேரத்தில்
கொத்திச் சென்றது
காணாத ஒன்றைக் காண விழைகிற அவஸ்தை சிறிதுமற்ற இயல்பான பார்வை ஒரு கொடுப்பினை. அது அது அதனதன் போக்கில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்கிற விலகலுடன் கூடிய வாழ்வு ஒருவகையில் மகா வசதி. பாம்பு தன் மேற்தோலை உரித்து உதிர்த்து மேலும் நகர்தலைத் தொடர்கிற அதே போக்கில் தன் கவிதைகளை எழுதிப் பார்ப்பது கண்டராதித்தனின் வழக்கம். பாடி கூடாரம் என்கிற இந்த தொகுப்பிலும் அப்படியான நசிதலுக்குப் பிறகான காட்சி மாற்றங்களை எழுதிப் பார்க்கிறார். இதே தொகுப்பில் இடம்பெற்று இருக்கக்கூடிய “பசி” என்கிற கவிதை தாண்டி வரவே முடியாத சித்திர அழுத்தம் ஒன்றை வாசக மனத்துக்குள் ஏற்படுத்துவது நுண்மையானது. மாபெரும் கதைக்கூறுகளுடன் பத்து வரிக்குள் ஒரு கவிதையை எழுதி விட முடியும் என்பதான இந்த நூற்றாண்டின் தற்கண நம்பிக்கையை ஏற்படுத்துகிற கவிஞர்களுள் கண்டராதித்தன் முக்கியமானவர்.