யார் நீ

யார் நீ

குறுங்கதை


கணேசன் தனியாக இரயிலில் செல்வதை எப்போதும் வெறுப்பவர். இன்றைக்குக் கூடத் தனியாகச் செல்லவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது தர்மா தான்.வருகிறேன் என்று நேற்று ராத்திரி வரை நம்ப வைத்துவிட்டுக் கடைசியில் நள்ளிரவு உடல்நலமில்லை என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான். அதுவும் எப்படி..? குறுஞ்செய்தி அனுப்பி விட்டு செல்பேசியை அணைத்தாயிற்று. அதிகாலையில் வந்து வாசற்கதவைத் தட்டவா போகிறார் என்கிற இறுமாப்பு. அவரை எப்படிக் குறை சொல்ல முடியும்? இவருக்குத் தனியாகப் பயணிப்பதற்குப் பயம். இரவுப் பயணங்களை வெறுப்பவரும் கூட. தன்னுள் பற்பல குண விநோதங்களைக் கொண்டிருந்துவிட்டுப் பிறரை எப்படிக் குறை கூறுவதாம்,? யாரையும் சார்ந்தே இருக்கக் கூடாது என்று அலோசியஸ் அடிக்கடி சொல்வார். கணேசனின் தமிழ்வாத்தியார். பிற்பாடு தலைமை ஆசிரியராகவும் இருந்தவர். ஹூம்..மகா மனிதர் அவர்.

கண்களை மூடிக் கொண்டார், வண்டி கூடல் நகரைத் தாண்டிக் கொண்டிருந்தது. வைகை விரைவு வண்டி. நிமிஷத்தில் கொண்டு போய் சேர்த்து விடுவான்.தனக்குள் சமாதானம் செய்துகொண்டார். நேரம் எப்படிக் கழியப் போகிறது..? மூடிய கண்களைத் திறக்கும் போது சென்னப்பட்டினம் வந்திருந்தால் எத்தனை சிறக்கும்.? தன்னையே இகழ்ந்து கொண்டவர் கண்களைத் திறந்தார். சோழவந்தான் கிராமத்தினூடாகத் தடதடத்தது வண்டி. திண்டுக்கல்லில் காலை உணவை சாப்பிடச்சொல்லி இருந்தாள் பிரேமா. அவருடைய தங்கை. கணேசன் திருமணமாகாதவர். ஆரம்பத்தில் பிரம்மச்சரியம் இனிப்பாய் இனித்தது. ஐம்பது வயதுக்குப் பின்னால் ஒரே கசப்புத் தான். நடுவில் கொஞ்சமே துவர்த்தாலே பெரிய சந்தோஷம் என்ற அளவில் நகராமல் சண்டிமாடு போல் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்கிறது வாழ்வு. ஒவ்வொரு நாளும் இரண்டு வேளைகள் ப்ரேமா வீட்டில் சாப்பிடுவார். நினைத்த போதெல்லாம் வெளியே சாப்பிட்டுவிட்டு எனக்கொண்ணும் வேணாம் என்று இரவுகளில் அவளுக்குத் தொல்லை தரமாட்டார்.

யாரைக் கோபிப்பது என்பது புதிர். யாருடன் பேசாமல் இருப்பது என்பது தற்கோலம். யாரை நொந்துகொள்வது என்பது தனிமை. இரவுகளில் கனவுகளைத் துரத்துவதும் உறக்கமின்றித் தனிப்பதுமாய்த் தன் வாழ்க்கையை வண்ணமாக்க யார் வரப்போகிறார்கள்..? இனி என்ன மிச்சமிருக்கிறது இந்தக் கிழவனுக்கு என்று நினைத்த மாத்திரத்தில் கண்கள் லேசாய்த் துளிர்த்தன. திண்டுக்கல்லில் நின்றது வண்டி. ப்ரேமா கொடுத்தனுப்பிய ஹாட்பேக் இட்லிகள் நிசமாகவே சூடு பறந்தன. அவருக்கு எதிர் சீட்டில் ஒரு குடும்பம் வந்தமர்ந்தது. பெரிய ஃப்ரேமிட்ட கண்ணாடி அணிந்த மனிதர். அவரும் ஓய்வுபெற்றிருப்பார் எந்த வேலையாயினும் எனத் தோன்றியது. அவருடைய மனைவி மற்றும் பேரன் போல் ஒரு சிறுவன். அவர்களும் ஏறியதுமே சாப்பிட ஆரம்பித்தார்கள். கணேசனுக்கு ஆறுதலாய் இருந்தது. எதிர் சீட் மனிதர் கணேசனின் பக்கமே திரும்பவில்லை. இவரும் எதுவும் பேசாமல் ஒரே ரயிலின் ஒரே பெட்டிக்குள் அவர்கள் தனித்தனியே வாழ்வைத் தொடர்ந்தார்கள்.

கணேசன் தன் நெற்றியைச் சுருக்கி யோசித்தார். இந்த மனிதனை எங்கே பார்த்திருக்கிறேன்..? தன்னோடு பள்ளியில் படித்தவர்களை நினைவில் அலசினார். இல்லை. சிறுபிராயம் முதல் கல்லூரி வரை எங்குமே வகுப்பைப் பகிர்ந்தவரில்லை. வேலையிலும் இப்படி ஒருவரைக் கொண்டதில்லை அவரது பழைய காலம். ஒன்றாகக் குடியிருந்தோமோ.? இல்லையே எதேனும் கிளப் சங்கம் மன்றம் என்றேல்லாம்..முதலில் கணேசனே அப்படியானவர் இல்லை. ஆக அவையும் பொருந்தாது. உறவா..? அவருடைய உறவுகள் விரல்களின் எண்ணிக்கையைத் தாண்டாது. ப்ரேமா வழியில் எதாவது சம்மந்த சொந்தமா அதுவானாலும் இத்தனை வருடங்களில் பரிச்சயத் தொடர்ச்சி இருந்திருக்குமே..? வண்டி திருச்சியைத் தாண்டும் போது இனிமேல் அந்த மனிதரைப் பற்றி யோசிப்பதில்லை என்று கொள்ளிடக் கரை மீது சங்கல்பம் செய்து கொண்டார் கணேசன். சற்றுத் தூங்கலாம் என்று பார்த்தார். வரவில்லை. கண்களை அகலத் திறக்கும் போது எதிர் சீட்டில் மூவருமே நன்கு உறங்கிக் கொண்டிருந்தனர். அந்த மனிதர் உறங்குவது கூட இவருக்குள் தெரிந்த பழைய சித்திரமிச்சம் போல் நம்பத் தோன்றியது.

விழுப்புரம் தாண்டும் போது தலை வலித்தது. தான் சென்று வந்த அத்தனை இடங்கள் தன் வாழ்வின் அபூர்வக் குற்ற இருள் தனக்கு மட்டுமான ரகசியம் என்று எல்லாவற்றையும் யோசித்து விட்டுத் தன்னைக் குறித்த எந்தத் தகவலும் மிச்சமின்றித் தீர்ந்து போயிருந்தார் கணேசன். அவரிடமே கேட்கலாமா எனப் பார்த்தார். வண்டி மறைமலை நகரைத் தாண்டிக் கொண்டிருந்தது. இத்தனை நேரம் பேசாமலிருந்து விட்டு இப்போது பேசத் தொடங்கினால் எப்படி எனத் தயங்கினார். எழும்பூரில் வண்டி கிறீச்சிட்டது. அவர்கள் இறங்கி பெட்டிகளை சரிபார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னை அழைத்துப் போக முத்தரசனின் ட்ரைவர் வந்திருந்தான்.

அந்த எதிர்ஸீட் மனிதர் நல்ல உயரம். எங்கோ பார்த்திருக்கிறேன் இந்த மூக்கு இந்த நெற்றிமேடு யாரய்யா நீ?

அவர்கள் நாலு எட்டு நகர்ந்தார்கள். முத்தரசனின் ட்ரைவர் முன்னே கணேசனின் பெட்டியைத் தள்ளிக் கொண்டு நடக்க இரண்டு கைகளையும் வீசிக்கொண்டு ஜம்மென்று பின்னால் சென்ற கணேசன் அவர்களைக் கடக்கும் போது கம்பீரமாக முகத்தை வைத்துக் கொண்டு “எக்ஸ்யூஸ்மீ ஸார்..உங்களை எங்கயோ பார்த்திருக்கேன். பட் எங்கேன்னு ஞாபகம் வர்லை. ட்ராவல் முழுக்க யோசிச்சிட்டேன். பிடிபடலை. நான் ஒரு ஆடிட்டர். என் பேர் கணேசன்”. என்று அவஸ்தையாய் சிரித்தார்.

அவர் உடனே நெற்றியைச் சுருக்கினார். முகத்தைக் கடுகடுவென்று வைத்துக் கொண்டு “நான்ஸென்ஸ்” என்றார். வேகமாக நடக்க முயற்சித்தார். கணேசன் அந்தக் கணத்தின் அபார அவமானத்தை லட்சியம் செய்யாமல் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தார்.

சற்றுத் தள்ளி அசௌகரியத்தை மறைத்துக் கொண்டு லேசாய் புன்னகைத்த முத்தரசனின் ட்ரைவரைப் பார்த்துச் சொன்னார்.

“நான் மறந்தாப்லயே அவரும் மறந்திருக்கலாம். பட் நிச்சயமாச் சொல்றேன். எனக்கு நல்லாத் தெரிஞ்சவர் தான்” என்றார்.