நடை உடை பாவனை
4 ட்ரைவரிங்க்
சினிமாவில் சர்வ காலமும் கார் காலம் தான்.படம் பெயரெல்லாம் குறிப்பிடப் போவதில்லை. பவர் ஸ்டீயரிங் கண்டுபிடிப்பதற்கு முந்தைய காலம். அதையே கண்டுபிடிக்கவில்லை என்றால் கேமிரா தொழில்நுட்பம் போன்றவற்றிலும் லிமிட்டேசன்கள் இருந்திருக்கும்தானே. இருந்தன. அதாகப்பட்டது, ஒரே இடத்தில் இருந்துகொண்டு பல மைல் தூரம் காரை ஓட்டுகிறாற் போல் பாவனை செய்ய வேண்டும். அது அன்பை போதிக்கும் பாடலென்றாலும் ஒரே குலுக்கல்தான், ஒரே ஆட்டம்தான். அதுவே சண்டைக்காட்சி என்றாலும் அதே ஆட்டம்தான், அதே குலுக்கல்தான். ரசிகர்கள் எழுந்து திரைக்குப் பின்னால் போய், “நாங்க நம்பிக்கறோம் ப்ளீஸ், ஆட்டத்தை நிறுத்துங்க” என்று கெஞ்சும் அளவுக்கு சீஸா பலகைய ஆட்டினாற் போலவே ஆட்டிக்கொண்டிருப்பார்கள். அதைக்கூட விடுங்கள் சார், இன்னொரு பெஸல் ஐட்டம் சொல்லுகிறேன். பதற்றத்தோடு பயணிப்பதைப் படமாக்குவதற்காக முகத்தை சீரியஸாகக் கொனஷ்டை செய்துகொண்டு, அந்த ஸ்டியரிங்கைப் பிடித்து ரெண்டு இடது, மூன்று வலது, நடுவில் கொஞ்சம் ஸ்ட்ரெயிட் என்று கடவுளே “அச்சச்சோ” என்று கண்களை மூடிக்கொள்ளும் அளவுக்கு, காரை ஓட்டுகிறாராம். இப்போது பார்க்கும்போதெல்லாம் கதை, சிச்சுவேஷன் அவற்றின் போக்கு ஆகியவற்றையெல்லாம் மறந்துவிட்டு, “பெரியவரே, என்ன பண்றிங்க?” என்று கேட்கும் அளவுக்கு நாடி நரம்பு புத்தி ரத்தம் சதை என எல்லாவற்றிலும் ட்ரைவிங் வெறி ஊறியவர்களாகத் துள்ளித் திரிந்தது ஒரு காலம்.
உயர்ந்த க்ளாஸ்மேட்டாக சிவாஜியும், உயர்ந்த ட்ரைவராக மேஜரும் மூச்சு இரைக்க, இரைக்க “அந்த நாள் ஞாபகம்” எனப் பாடும்போது பாட்டையும் ட்ரைவர் ஸ்தானத்திலிருந்தே பாடுவார் மேஜர். ராத்திரி நேரத்தில் அல்லக்கைகளுடன் அப்பாவுக்குத் தெரியாமல் சினிமாவுக்குக் கிளம்பிப் போகும் சிவாஜி, தன்னால் ஆனமட்டும் கூட இருந்து கெடுத்து வைக்கும் குமாராக சந்திரபாபு, நடுவழியில் ஒரு கடையில் வண்டியை நிறுத்தச் சொல்லி, இப்போது பத்தாயிரத்துக்குக் குறையாத மதிப்புள்ள அப்போதைய நூறு ரூபாயை நீட்டி, “இந்தாய்யா ட்ரைவர், போய் ஒரு டின் சிகரேட் வாங்கிட்டு வாய்யா” என்பார். “எத்தன சிகரெட்டு சார் வேணும்?” என்று திரும்பிப் பார்ப்பார் ட்ரைவருக்குப் பதில் சிவாஜியின் அப்பா. பக்கம் பக்கமாக வசனம் பேசும் நடிகர் திலகத்தைக் கூட அப்படியான காட்சியைப் பேசித் தீர்க்க முடியாது எனப் புரிந்து “ஆ” என்று கத்தி முடிப்பார்.
நாடகம் பார்க்கத் துடிக்கும் மாமிகள் என்பதை அறியாமல் யாருக்கோ என்னவோ என்று லாரிக்கு அடியிலெல்லாம் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு வந்து மைலாப்பூரில் தரையிறங்குவார் வடிவேலு. “நீ ஜீவநதி சீரியல் பாக்கறதில்லையா அம்பி?” என்றதும் மூக்கு மீட்டருக்கு மேல் கோபம் வந்தவராய் துரத்திக்கொண்டு ஓடுவார். அதே வடிவேலு ட்ராஃபிக் கான்ஸ்டபிளாக லாரி ஓட்டிக்கொண்டு வரும் சிங்கிடம் லஞ்சம் கேட்டு அந்த சிங்கு அவரை ஊர் எல்லையில் இறக்கிவிட்டு அதற்குப் பிறகு நெடுஞ்சாலையில் பல வண்டிகள் லிஃப்டு கேட்டுக் கிடைக்காமல் போய் கடைசியாக ஒரு வண்டியில் லிஃப்டு கிடைக்கும். அலைச்சல் களைப்பில் அயர்ந்து உறங்குவார் வடிவேலு. லீவு தினத்தில் பசங்கள் விளையாட்டில் குழந்தை போலீஸ் போல் விடிந்து கண் விழிக்கும் வடிவேலு அதுவரை தான் ட்ராவல் பண்ணி வந்த அடுத்த இருக்கை பயணி ஒரு பிரேதம் என்பதை அறியும்போது செமை பல்பு வாங்குவார். அதே வடிவேலுவை என்னத்தக் கன்னய்யா “எம்.ஜி.ஆர் மாதிரி மின்றீங்க” என்றெல்லாம் நெய் காய்ச்சுவது இன்னொரு படத்தில். போதாக்குறைக்கு பப்ளிசிட்டி கணேசனாக சரத்குமார் வேறு வடிவேலுவை வகுத்துப் பெருக்குவார். எல்லாவற்றுக்கும் கிரீடம் வைத்தாற்போல் தற்கொலை முடிவோடு பிரேக் வயரைக் கழற்றிவிட்டு சந்தான பாரதி ட்ராவல் ஆகிக்கொண்டிருக்கும் காரில் வடிவேலு லிஃப்டு கேட்டு ஏறுவதுதான் துன்பக் கரும்பைப் பிழிந்து இன்பச்சாறு எடுக்கும் ஏகதமாஷ்.
‘படிக்காதவன்’ ரஜினி, அவர் பேர் ராஜா. “ராஜாவுக்கு ராஜா நாண்டா, எனக்கு மந்திரிங்க யாருமில்ல” என்று அவரே சொல்வார். ஆனாலும் அவரோடு ஒரு லட்சுமி உண்டென்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அவருடைய கார்தான் லட்சுமி. காரில் ஏறுகிற சவாரிகளில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதைக் கண்டுபிடிப்பதில் லட்சுமி அரும்பணி ஆற்றும். எப்படி தெரியுமா? அந்தக் காரில் ஒரு செந்நிற பட்டன் இருக்கும். பின் சீட்டில் உட்காருகிறவரின் தன்மைக்கேற்ப ஒரு விளக்கு அணைந்து அணைந்து எரியும். அதற்கு இளையராசர் வினோதமாக ஒரு இசை வேறு இணைத்திருப்பார். லைட் எரிவதையும் இளையராசரின் பின்னணி ஓசையையும் கேட்டுவிட்டு ரஜினியார் ஒரு முடிவுக்கு வருவார். பின் சீட்டு சவாரிகளிடம் திரும்பி, “அண்ணே வணக்கம். உங்க பைல நீங்க எதோ சட்டவிரோதமா வெச்சிருக்கிங்க, அது என்ன?” என்று கேட்பார். கஞ்சா கடத்துகிறவர், வைரம் கடத்துகிறவர் என பல ப்ரொஃபைல்களிலிருந்து கிளம்பி வந்தவர்கள் “அது எப்படித் தெரியும்?” என்கிற வியப்பில் “மாட்டிக்கிட்டோமே” என்கிற பதட்டத்தில் “அடுத்து என்ன ஆகுமோ” என்கிற நடுக்கத்தில் நிற்க, “ஒங்கூட டூ, என் கார்லேருந்து எறங்கிக்க” என்று புக்கிங்கை கேன்ஸல் செய்யும் ஓலா ட்ரைவர் போலாகி “என் வழி தனி வழி” எனக் கிளம்பியும் போவார். அதே ரஜினி நூதன முறையில் சாராயம் கடத்தும் அம்பிகாவை அதே காரின் துணையோடு கண்டுபிடித்து திருத்தி நல்வழியும் படுத்துவார். அந்த வகையில், படிக்காதவன் படத்தில் இடம்பெற்ற அந்த கார் அகில இந்தியாவின் முதல் ஜோசிய துப்பறியும் ஆன்மீக மற்றும் தீமையை எதிர்க்கும் சக்திகொண்ட கார் என்பதை யாராலும் எந்தக் காராலும் மறுக்க முடியாது.
ஆளே இல்லாமல் கொலை செய்யும் பழிவாங்கும் கார் என்கிற படமும் எக்கச்சக்கமான ஃபெஸிலிட்டிகளோடு ஆல்டரேசன் செய்யப்பட்ட சூப்பர் காருடன் பாட்டி சொல்லைத் தட்டாதே படமும் மேற்சொன்ன காருக்கு அடுத்த ஸ்லாட்டுகளில் பார்க்கிங் செய்யப்பட்டன.
பலர் கைமாற்றிய பிறகு சேந்தம்பட்டி முத்தையன் அண்டு பார்ட்டியாரின் சிவப்புக் கலர் கார், அதை எப்படியாவது எடைக்குப் போட்டுவிட்டு பேரிச்சம்பழம் வாங்கித் தின்னத் துடிக்கும் செந்தில், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தனர்.
மலைப் பிரதேசத்தில் ஒரு பாட்டு. கொஞ்ச நாளில் இதே ரஜினி சூப்பர் ஸ்டார் ஆகப் போகிறார் என்பதோ, தான் அக்னி நட்சத்திரம் முதலான படங்களில் நடித்து, பணக்காரன் படத்தில் அதே ரஜினிக்கு டாடியாக நடிக்கப் போகிறோம் என்பதோ கொஞ்சமும் தெரியாமல் டைட் சஃபாரி ஆடை அணிந்துகொண்டு நின்றாலே கிழியும் நகர்ந்தாலே தெரியும் என்கிற அபாயத்தை அனாயாசமாக வெற்றி கண்டு, அந்தக் காரை ஓட்டுகிற ரஜினியை எதிர்வருகிற சகபயணிகளை, இரண்டு புறமும் தூரத்தில் தெரிகிற சமகாலத்தவர்களை என தன்னால் ஆனமட்டும் டார்ச்சர் செய்தபடி “வாழுமட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா” என்கிற பாடலில் நடித்தார் விஜயகுமார்.
அந்தப் பாட்ட மிஞ்சறேன் பார் என்று ஒரு டபுள் ஆக்ஷன் படம். ஒரே நடிகர் ரெண்டு வேஷத்தில் நடிப்பதுதானே டபுள் ஆக்ஷன். அவர்கள் ஒரே ஜீப்பில் பயணிக்கிறாற் போல் ஒரு பாட்டு. அது ரெண்டு பேர்தான் என்று நாம் நம்பவேண்டும் என்பதற்காக, ஒரு மனிதன் அமர்ந்தவாக்கில் என்னவெல்லாம் செய்ய முடியாதோ, அது எல்லாவற்றையும் தன் முகத்தின் துணைக்கொண்டு செய்திருப்பார் சிவாஜியார்.அண்ணன் பாவமா அல்லது தம்பி கோபமா எனத் தெரியாமல் பார்ப்பவர்கள் பாவகோவ பேலன்ஸ் ஆகி இருப்பார்கள். தன் மௌத் ஆர்கன் அபிநயங்களால் பர்கர், பீஸ்ஸா, சேண்ட்விச் போன்ற எண்ணிலடங்காத எதிர்காலப் பதார்த்தங்களை படைத்தார் சிவாஜி. இதில் அவரைக் குறை சொல்வதற்கு ஏதும் இல்லை திரிசூலம் கன்னட ரீமேக். அங்கே ராஜ்குமார் செய்ததை அப்படியே செய்யப் பணிக்கப் பட்டது தான் மேற்படி காட்சிகள் அடங்கிய “இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கேதான் எதிர்காலம்” என்ற பாடல்.
“பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்” பாடலில் கருப்பு வெள்ளை காலத்தில் உச்சபட்ச அழகனாக, ஸ்டைல் மன்னனாக அத்தனை நேர்த்தியாக செல்வந்தத்தின் கம்பீரத்தையும், வாலிபத்தின் கொண்டாட்டத்தையும் ‘என்னைப் போல் யாருமில்லை’ என்று சொல்லத்தக்க அளவில் கலக்கி எடுத்தார் சிம்மக்குரலோன் சிவாஜி.இளைய திலகம் பிரபு ராஜா கைய வச்சா படத்தில் அடுத்தடுத்து லிஃப்ட் கேட்டுத் தன் வாய்த்திமிரால் அத்தனை கார்களிலிருந்தும் இறக்கி விடப் படுவதாக அறிமுகக் காட்சி அமைந்திருக்கும். ரசனையான படமாயிற்று.
விதவிதமான கார்களில் ஏறிச் சென்று தீவிரவாதப் பயிற்சி மேற்கொள்வார் செந்தில்.ஒரு கட்டத்தில் கவுண்டமணியை பழிசுமர்த்தி தான் அப்ரூவர் ஆகிப் படுத்துவார் மகாபிரபு படத்தில். கில்லி படத்தில் த்ரிஷாவைக் காப்பாற்றி பல செக்போஸ்டுகளைத் தாண்டி சேஃபாக சென்னை சென்று சேரும் வரைக்கும் பார்ப்பவர்கள் எல்லோருமே எதாவதொரு காரில் பயணிக்கிறாற் போல் தோன்றச் செய்தது தரணியின் வெற்றி.ஊமை விழிகள் படக் கிளைமாக்ஸ் அத்தனை அம்பாசிடர் கார்கள் அணிவகுத்து வரும் அழகுக்காகவே தலைதெறிக்க ஓடியது எனலாம்.
குருதிப் புனல் படத்தில் சர்வ வல்லமை கொண்ட தீவிரவாதத் தலைவன் பத்ரி என்பது தெரியாமல் பிடிபடுகிற காட்சியில் எனக்கொண்ணும் தெரியாது நான் வெறும் ட்ரைவர் என்று கைதாவார் நாஸர். தன் கனவுக்காரான ஜாகுவார் காரை ஒரு முறை ஓட்டியதற்காக வேலையை இழப்பார் ரமேஷ் சூதுகவ்வும் படத்தில். அதே படத்தில் சோப்ளாங்கி கிட்நாப்பர்களாக விஜய்சேதுபதி அண்ட் டீம் செய்வதெல்லாம் சப்பையான கடத்தல் முயற்சிகள்
அபூர்வ சகோதரர்களில் மெக்கானிக் கமலைப் பணக்காரர் என்று நம்பும் கவுதமி Lபோர்ட் காரைக் கொண்டுவந்து இடித்து விட்டு சமாதான பேரம் பேசும் காட்சி உச்சபட்சம்.ஸார் மன்னிச்சுக்கோங்க ஸார் தெரியாம இடிச்சிட்டேன் ஸார் எவ்ளோ பணம் வேணும்னு கேளுங்க நான் குடுத்துர்றேன் என்பார் ஆயிரம் ரூபாய் குடு என்றதும் ஆயிரம் ரூபாவெல்லாம் ரொம்ப ஜாஸ்தி. 200 ரூபா தான் கரெக்ட். என்பார் அதென்ன ஃபிக்ஸட் ரேட்டா எனக் கேட்கும் கமலிடம் ஆமா சார் டெய்லி அப்பா 50 ரூபா பெட்ரோலுக்கு 200 ரூபா ஆக்சிடெண்டுக்கு தான் ஸார் குடுப்பாரு. ஒரு நாளைக்கு ஒரு ஆக்சிடெண்ட் தான் ஸார் அலோவ்டு..என்று சொல்லி விட்டு அடுத்து தன் முகத்தை இன்னும் பரிதாபமாக வைத்துக் கொண்டு வீட்ல ரொம்ப கஷ்டம் ஸார் என்பாரே பார்க்கலாம் இந்த பிரபஞ்சமே சிரிக்கும்.அதே கவுதமி பணக்காரன் படத்தில் ட்ரைவரை ஓடவிட்டுத் தன் காரால் பலரை இடித்து விளையாடுவதும் அவருடன் மோதி ரஜினிகாந்த் அவரைத் திருத்துவதும் காட்சிகளாயின.
விக்னேஷ்வர் படத்தில் விக்னேஷ்வர் கார்த்திக் ஒரு போலீசாபீசர். குஷ்பூவின் அப்பா விஜயகுமார் போலீசுயரதிகாரி. அவருக்கும் இவருக்கும் முரண்பாடாகும் போது கூடவே இருக்கும் குமார் ஒருவர் கார்த்திக்கின் ஜீப் ஏஸியில் மயக்க மருந்தை கலப்பார். கார்த்திக் காரில் ஏறியதும் ஏசி ஆன் செய்து உடனே மயங்க அவரை ஜீப்போடு கடத்திக் கொண்டு போய் விஜயகுமார் வீட்டு வாசலில் காத்திருப்பார். எப்படி என்றால் ட்ரைவிங்க் சீட்டில் அவர் உட்கார்ந்து கொண்டு தன் மேல் கார்த்திக்கை அமரவைத்துக் கொள்வார். வெளியே இருப்பவர்களுக்கு கார்த்திக் தான் ட்ரைவர் ஸீட்டில் இருப்பது போல் தெரிவதற்காக இப்படி ஒரு யோசனை. விஜயகுமார் வந்ததும் வில்லன் சுட விஜயகுமார் சாக குஷ்பூ பார்க்கும் போது அவரை சுட்டது வில்லன் இல்லை கார்த்திக் தான் என்று தோன்றும். ஆனால் கார்த்திக்கின் காதலியான குஷ்பூ அதை நம்பி பிறகு நம்பாமல் போய் உண்மை க்ளைமாக்ஸில் வில்லன் வாயாலேயே தெரியும். என்னுடன் படம் பார்த்த பரணி இதென்ன மாடல் ஜீப்புன்னு பார்த்து வச்சிக்கிட்டா பல கொலைகள் பண்லாம் போல இருக்கே என்று சொல்லி வைக்க தியேட்டரே சீரியஸ்னெஸ் இழந்து சப்தமாக சிரித்தது.
சதி லீலாவதி பட க்ளைமாக்ஸ் ஒரு ஜூகல்பந்தி. கணவர் கமலை தப்பர்த்தம் செய்து கொண்டு கோவத்தோடு காரில் கிளம்பிச் செல்வார் கோவை சரளா. காருக்கு அடியில் ப்ரேக்கை கழற்றி மெக்கானிக்கல் செய்து கொண்டிருப்பார் அவர்களது மகன் குட்டி ஆனந்த். ப்ரேக்கில்லாத காரில் செல்லும் மனைவியைத் துரத்திச் சென்று கமல் பளனீ(சரளாவின் பெயர்) ப்ரேக் பிடிக்கல என்றதும் ஆமா என்னையே பிடிக்கலியாம் இதுல ப்ரேக்கு பிடிச்சா என்ன பிடிக்காட்டி என்ன என்று அங்கலாய்ப்பார் அட்டகாசம்.
பெரிய இடத்து மாப்பிள்ளை படத்தில் ஜமீன் வாரிசான ஜெயராம் தற்போதைய சூழ்நிலை காரணமாக ட்ரைவாராக வேலைக்கு சேர்வார். அவரது அழிச்சாட்டியம் பொறுக்காமல் கவுண்டமணி அவரிடம் நீ ட்ரைவர் ட்ரைவர் ட்ரைவர் என்று சொல்வது அதகளம். உள்ளத்தை அள்ளித்தா படத்தில் தானொரு மில்லியனர் என்பதை மறைத்துக் கொண்டு ரம்பாவின் வீட்டில் ட்ரைவராக வேலைக்கு சேர்வார் கார்த்திக். அவரை அடுத்து மீட் செய்யும் கவுண்டமணி என்னய்யா ட்ரைவர் நீ இண்டியாவுல பெட்ரோல் திருடாத ட்ரைவர்னு ஒருத்தன் இருப்பானா என்று திரையைப் பார்த்துக் கேட்கும் போது நாடே சிரித்தது. அழகன் படத்தில் சந்தானம் என்ற பேரில் மம்முட்டியின் ட்ரைவராக வருபவராக்ட்டும் இசை மேதமையோடு ஜட்ஜின் ட்ரைவராக சிந்துபைரவி படத்தில் வரும் கவிதாலயா கிருஷ்ணனாகட்டும் மறக்க முடியாத ட்ரைவர்கள் என்றால் காதல் கோட்டை படத்தில் தலைவாசல் விஜய் அஜீத் என அச்சு அசல் மனித நேயர்களை ட்ரைவர் கதாபாத்திரத்தில் பூத்துக் குலுங்கச் செய்தார் அகத்தியன். பாட்ஷா சென்னையில் ஆட்டோ ட்ரைவர் மாணிக்கமாக ஒளிர்வார் என்பதும் சொல்ல வேண்டிய ஒன்று தான்.
தேடினேன் வந்தது படத்தில் ப்ரதாப் போத்தன் ட்ரைவிங் கலையின் சிகரத்தையே தன் மானரிசங்களால் தோற்றுவித்திருப்பார்.எல்லாம் போகட்டும். இந்த எபிஸோடின் சிகரம் எந்தக் காட்சி தெரியுமா பத்து எண்றதுக்குள்ள படத்தில் சமந்தா உட்பட சிலபலருக்கு கார் ஓட்ட விக்ரம் பயிற்சி கொடுக்கும் காட்சி. அதன் முடிவில் தெருவில் நின்று சண்டை போட்டுக் கொண்டிருக்கும் சமந்தா விக்ரம் இருவருக்கும் நடுவே புகுந்து சமாதானம் செய்தபடி கார் எங்கே எனக் கேட்பார் முனீஷ் காந்த். அப்போது உயரே காண்பித்தால் அருகமை மரத்தின் உச்சியில் கார் பார்க் ஆகியிருக்கும். START பண்ணி GEAR போடச்சொன்னாங்க. நான் GEAR போட்டு START பண்ணிட்டேன். என்று விளக்கம் தருவார். அல்டிமேட் அதிரிபுதிரி. கார் என்பது எல்லா மனிதனின் கனவு. இன்னும் ஆயிரக்கணக்கான காட்சிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
சினிமாவுக்கும் கார்களுக்குமான பந்தம் அலாதியானது.