நடை உடை பாவனை
5 கடவுளும் மிருகமும்
டாக்டர் என்றாலே பயம் என்பது அவர் ஊசி போடுவார், வாழ்வு பின்னால் எவ்வளவு பெரிய துளைகளையெல்லாம் வைத்திருக்கிறது என்பது தெரியாமல் ஒரு சின்னூண்டு ரத்தமுத்து பார்ப்பதற்கு பயந்து, இல்லாத கொனஷ்டைகளை எல்லாம் செய்துகொண்டு, இருந்த இடத்திலேயே பல மனோமீட்டர்கள் ஓடுவது குழந்தைத்தனமான பால்யம். வெறுப்பு கலந்த மரியாதைக்குரியவர்கள் டாக்டர்கள். உள்ளும் புறமும் டாக்டர்களை மையப்படுத்தி வேறு எந்த ப்ரொஃபெஷனை விடவும் உலக அளவில் அதிகத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. சென்ற நூற்றாண்டின் நட்சத்திரோத்தமர்கள் டாக்டர்கள். கடவுளருக்கும் மனிதர்களுக்கும் நடுவில் நின்றுகொண்டிருப்பவர்கள். அந்தப் பக்கம் கைகுலுக்கிவிட்டு, இந்தப் பக்கம் சொஸ்தமாக்குபவர்கள். தேவை நிமித்தம் உருவாகியிருக்கும் போற்றுதலுக்குரிய பணிகளில் ஒன்று டாக்டர்.
சினிமா ஆரம்பித்த காலம் தொடங்கி டாக்டர்கள் பலவிதமாக உருவாகி வந்தார்கள். காதலித்தார்கள் வீரமாய் சண்டை போட்டார்கள். நடனம் ஆடினார்கள் அழுது சிரித்து உருகி என்னவெல்லாமோ செய்தாலும் எதோ ஒரு ஓரத்தில் டாக்டர்களாக எஞ்சிக் கொண்டே இருந்தார்கள்.கருப்பு வெள்ளை காலகட்டத்தில் டாக்டர் வருவதே கொள்ளை அழகாக இருக்கும். கையோடு மருந்துகள் அடங்கிய் ப்ரீஃப்கேஸ் சகிதம் தோன்றுவார். அந்தப் பெட்டியை அல்லது லெதர் பையை பங்களாவின் பணியாள் சுமந்தபடி வருவார். டாக்டர் திருமுகம் கண்டதுமே நோய்கள் பறக்கும். சில படங்களில் டாக்டர் வந்து செல்வதற்குள் திருப்புமுனைக் காட்சியாகவும் விரிந்து அடங்கும்.
என் புருஷன் குழந்தை மாதிரி படத்தில் டாக்டர் குயில்சாமி என்ற பாத்திரத்தில் வருவார் மயில்சாமி.காலையில ஆறுமணிக்கு ஆஸ்பிடல் தொறந்தது. இப்ப மணி ஒண்ணாச்சு இப்ப வரைக்கும் ஒரு பேசண்டைக் காணமே என்று அலுத்துக் கொள்வார். அவருடைய நர்ஸ் ஆதுரமாக நாந்தான் இருக்கேன்ல என்பார்.நீ மட்டுந்தான் இருக்க நான் வேஸ்ட் என்பார். நைட்டு சாராயம் குடித்து விட்டு வயிறு எரிகிறது என முதல் பேஷண்ட் வந்து சேர அவர் வாயில் தெர்மா மீட்டரை செருகி அந்தப் பக்கம் உட்கார் என்பார். அதற்குள் இரண்டாவது பேஷண்ட் வருவார் என்ன செய்யுது என்றதுமே டாக்டர் கைகாலெல்லாம் குடையுது என்பார். உடனே மயில் ரெண்டு மாத்திரையை எடுத்து பிரிஸ்கிரிப்ஷன் மேல் வைப்பார்.வயித்தை வலிக்கிது என்றதும் அதற்கு ரெண்டு மாத்திரையை எடுத்துக் கொண்டே வேற என்பார் மண்டை அப்பப்போ குத்துது என்றதும் அதற்கும் மூன்று மாத்திரைகளை எடுப்பவர் மூச்சுப் பிடிக்கிது என்றதும் அதற்காக சில மாத்திரைகளைக் கவர்ந்துகொண்டே வேற எதாவது இருக்கா என்பார்.இப்பத்திக்கி அவ்ளோ தான் டாக்டர் என்றதுமே எல்லா மாத்திரைகளையும் எடுத்து தன் வாயில் போட்டுக் கொண்டு தண்ணீர் குடிப்பார். டாக்டர் என்று அதிரும் பேஷண்ட் நம்பர் டூவிடம் உனக்கிருக்கிற எல்லா வியாதியுமே எனக்கும் இருக்கு நானும் டாக்டரா இருந்து பாக்குறேன் எதும் ஒர்க் அவுட் ஆகலை நீ என்ன பண்றே டவுன்ல போயி நல்ல டாக்டரா பாரு என்று அவருக்கு பணம் தந்து அனுப்புவார். அதற்குள் பேஷண்ட் நம்பர் ஒன் தர்மாமீட்டரை முழுங்கி விட்டு அடுத்த முறை சின்ன மாத்திரையா குடுங்க டாக்டர் என்றதும் அடப்பாவி தர்மாமீட்டர்டா அது இந்தா பேதி மாத்திரை இதையும் முழுங்கு என்று ஒருவழியாக செட்டில் செய்தபடியே ஆக மொத்தம் இது ஆஸ்பத்திரி அல்ல என்று கடையை மூடுவார்.
இது ஒரு சாம்பிள் தான். இந்த மாதிரி எண்ணற்ற படங்கள் டாக்டர் நர்ஸ் கம்பவுண்டர் பேஷண்ட் என அதீதமாக புனையப்பட்ட நம்பமுடியாத கதையாடல்களைத் திரைப்படுத்தின. அவற்றுக்கு நடுவே அத்தி பூத்தாற் போல இயல்பான தரிசனத்தை சாத்தியம் செய்யவும் சில படங்கள் வந்தன. நெஞ்சில் ஓர் ஆலயம் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான கருப்பு வெள்ளைக் காவியம் . காதலியின் ஞாபகத்தில் கலியாணமே செய்து கொள்ளாத டாக்டர் முரளியாக வருவார் கல்யாண குமார். கொடிய நோயாளி வேணு என்கிற முரளியின் நண்பனாக வருவார் முத்துராமன். முரளியைக் காதலித்த சீதா எனும் பாத்திரத்தில் தேவிகா. சந்தர்ப்ப சூழ்நிலையால் காதலனைக் கைப்பிடிக்க முடியாமல் வேணுவின் மனைவியாகித் தன் காதலை தியாகம் செய்திருப்பார். டாக்டர் முரளியாக சொல்லவும் மெல்லவும் முடியாத உணர்ச்சிமிகுந்த பாத்திரத்தில் ஒளிர்ந்தார் கல்யாண குமார்.
தன் நர்ஸ் வேலையால் பெரிய குடும்பத்தை கரையேற்றும் நந்தினி என்ற பாத்திரத்தில் சுகாசினி. நர்ஸ் என்ற பாத்திரத்தின் கண்களால் உலகத்தைப் பார்க்கச் செய்தார் பாலச்சந்தர். சுவாரசியமான எளிதில் எங்கும் காணவாய்க்காத டாக்டர் அர்த்தநாரியாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் மின்னினார். இல்லாத இல்யூஷன் மனையாளை இருப்பதாகவே எல்லோர் மனதிலும் தோற்றுவித்து படம் நெடுக தன்னோடு பயணிக்கச் செய்யும் அர்த்தநாரி பாத்திரம் பின்னால் பல படங்களுக்கு இன்ஸ்ப்ரேஷன். எந்த அளவுக்கு சினிமா வசீகரமான துறை என்பதற்கு இதையே உதாரணமாக்கலாம்.
மண்ணுக்குள் வைரம் படத்தில் சலவைத் தொழிலாளி வேலப்பனின் மகள் சிட்டுவாக படிப்பில் சூட்டிகையான கதாபாத்திரத்தில் தோன்றினார் ரஞ்சனி. எந்த ஊரிலிருந்து இரவோடு இரவாக அநீதி இழைக்கப்பட்டு தன் தகப்பனின் பிணத்தைத் தானும் தன் தாயுமாக மட்டும் சுமந்து வெளியேறினார்களோ அதே ஊருக்கு சிட்டு தன் தாயோடு அரசாங்க மருத்துவராக ஜீப்பில் வந்து இறங்குவார். மனோஜ்குமார் இயக்கிய இந்தப் படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் மிளிர்ந்தார் ரஞ்சனி.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் முதலில் ஹிந்தியில் முன்னாபாய் எம்பிபிஎஸ் ஆகப் பெருவெற்றி பெற்றது. பிறகு, சரணும் கமலுமாகத் தமிழுக்குப் பெயர்ந்தது. மேலோட்டமாக ஒரு காமெடித் திரைப்படம் போல் தோற்றமளித்தாலும் உள்ளார்ந்து அன்பு என்ன மாதிரியெல்லாம் தேவைப்படுகிறது என்பதை பாமர மொழியும், பக்குவ விழியுமாகப் பார்க்க முற்பட்டது. ஒரு முதிய தந்தை மீது கிரேஸி மோகன் கொண்டிருக்கக்கூடிய அன் கண்டிஷனல் பாசமும், அதே போன்ற தன் தந்தை நாகேஷ் மீது கமல் வைத்திருக்கிற குற்ற உணர்வு கலந்த பிரியமும் டாக்டராகி, தன் சபதத்தை நிறைவேற்றியே தீருவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் கமல், அந்தச் சபத எக்ஸிக்யூஷனின் வழியெல்லாம் மலர்த்த விழைகிற மனிதநேய மலர்கள் அன்பின் அதிகாரங்கள். எடுத்த எடுப்பிலேயே முதல் பேஷண்டே பேதி பேபி என்பதும், ஜப்பான்காரனுக்கு மூக்கு இல்லையே என்கிற பிரபுவிடம் எனக்கு மூக்கு இருக்கே என்பதும், போனதும் மறக்காமக் கையைக் கழுவிடுங்க என்று க்ளவுஸ் அணிந்தை பைல்ஸ் ஆபரேஷக் கையை நீட்டி அன்பு காட்டும் க்ரேஸி மோகன் நகர்ந்து சென்றதும், சாரிடா நான் உங்களையெல்லாம் தப்பா நெனைச்சிட்டேன் என்பார் கமல். அந்த உங்களையெல்லாம் எனும் வார்த்தையை விஞ்ச வேண்டுமென்றால் இன்னொரு முறை இன்னொரு கமலஹாசன் பிறந்து வர வேண்டும்.
தெனாலி படத்தில் தன் கடை படுத்துவிட்டதே என்கிற கோபத்தில் டாக்டர் டெல்லி கணேஷப் பஞ்சபூதம், தன் எதிரியான டாக்டர் ஜெயராமக் கைலாஷைப் பழிவாங்குவதற்காக எய்து அனுப்பக்கூடிய சிங்கிள் சிம்மாஸ்திரமே கமலஹாசத் தெனாலி சோமன். அந்தப் படம் முடிவதற்குள் கெட்ட எண்ணம் கொண்டவரான டெல்லி கணேஷ் பைத்தியத்தின் பரிபூரண நிலையை அடைவார். எப்படியாவது தெனாலியைத் தவிர்த்துவிட வேண்டுமென நினைக்கிற ஜெயராம் பைத்தியத்தின் பன்னிரண்டாம் நிலை வரை செல்வார். ஒன்றும் தெரியாத முகமும் மொழியுமாய், தன் மீது பித்தாக இருக்கும் ரசிகர்களை வசீகரிப்பதே தன் வேலையென்று சமர்த்துக் காட்டுவார் கமல்.
சுயம்வரம் படத்தில் எல்லா நடிகர்களும் நடித்திருந்தாலும் தான் வருகிற காட்சியிலெல்லாம் மானசீகமாய்த் துணியைக் கிழித்துக்கொள்ளும் அளவுக்குச் சிரிக்க வைத்திருப்பார் கார்த்திக். அதில் அவர் ஒரு டாக்டர். அடிக்கடி மறதிக்கு ஆட்படுவார். அவ்வப்போது ஞாபகத்துக்குத் திரும்புவார். கையெழுத்து ரன்னிங் லெட்டர் என்பார்கள். டாக்டர்களின் கையெழுத்து மெடிக்கல் ஷாப்காரர்களைத் தவிர யாருக்கும் புரியாது என்பார்கள். சுயம்வரம் கார்த்திக் டாக்டர்களின் அப்படியான ப்ரிஸ்க்ரிப்ஷன் கையெழுத்தைத் தன் நடிப்பின் மூலமாக உணர்த்தியிருப்பார்.
தில்லாலங்கடி படத்தில் தன்னை மலேஷியாவுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருக்கும் சந்தானம் அந்த ஊரில் பைத்தியமாகியிருப்பார். அவரை நீ ஒரு டாக்டர் என்று நம்பவைத்திருப்பார் ஜெயம் ரவி. ஸ்கேனை உயர்த்தி வெளிச்சத்தில் பார்த்துவிட்டு, வஞ்சர மீன யாரு வட்ட வட்டமா வெட்டி வெச்சது எனக் கேட்பார், டாலர் நோட்டைக் கீழே போட்டு குனிபவர் முதுகில் ஊசி குத்துவார், எனக்கு நெறைய மாத்திரை கெடச்சிருக்குது, ஒனக்குப் பாதி தரேன் என்பார். அப்ப நான் டாக்டர் இல்லன்னா நான் யாரு என்று முழிப்பார். சந்தானத்துக்குள்ளிருந்து ஒரு சர்வதேசக் கோமாளி எட்டிப் பார்த்த படம் அது.
ஆனஸ்ட் ராஜ் கௌதமியும், இணைந்த கைகள் ஸ்ரீவித்யாவும், மனசுக்குள் மத்தாப்பு சரண்யாவும் கண்ணியமும் கருணையுமான டாக்டர்கள்.
பம்மல்.கே.சம்மந்தம் படத்தில் படாதபாடு பட்டிருப்பார் டாக்டர் சிம்ரன். அவரைவிட அதில் நர்ஸாக வரும் கல்பனா கொஞ்சம் சமர்த்து அதிகம் எனச் சொல்லத்தக்க அளவில் இருப்பார். மறக்க முடியாத ஒரு சீன் சிம்ரன் நினைத்துப் பார்க்க, கோர்ட்டில் வசனமேதும் பேசாமல் அவரைப் பார்த்து நம்பியார்த்தனமாகக் கையைப் பிசைவார் கமல். தண்டனை விதிக்கப்பட்டு நெற்றியில் பேண்டிட் க்வீன் ஸ்ட்ராப்பெல்லாம் கட்டிக்கொண்டு, கைகாலிலெல்லாம் சங்கிலியெல்லாம் வேறு பிணைத்திருப்பார்கள்.அதே சிம்ரன் நட்பும் காதலும் கலந்த தோழிவில்லியாக பார்த்தேன் ரசித்தேன் படத்தில் மின்னினார்.
சற்று வில்லங்கமான ஆணழகன் படத்தில் சர்க்கஸ் குணாம்சக் கூட்டாளிகளான சின்னி ஜெயந்த், சார்லி, வடிவேலு இவர்கள் மூவருடன் பெண் வேடத்தில் தோன்றினார் பிரஷாந்த். அதில் ஒரு பொய்யை அடுத்து வரும் பொய்களைக் கொண்டே மெழுகிக்கொண்டு போய் கர்ப்பவதியா என்று அவரை ஸ்கேன் செய்ய டாக்டரை அழைப்பார்கள். வருவார் பீடியாட்ரிஷியனான வைஷ்ணவி. இந்தக் கும்பலே வீட்டின் உரிமையாளரான கே.ஆர்.விஜயாவை ஏமாற்றுவதற்குத்தான் இத்தனையும் செய்திருக்கும். திக்பிரமையுடன் சோதனையை முடித்து வெளியே வந்து “ஆம்பள” என்று ஒரே ஒரு சொல்லை உதிர்த்துவிட்டு இடத்தைக் காலி செய்வார் வைஷ்ணவி. அவரது முகபாவனை உலகப்படத் தரத்தில் இருக்கும்.
வேட்டையாடு விளையாடு படத்தில் சீரியல் கில்லர்களான அமுதனும் இளமாறனும் சர்வதேசப் போலீசுக்குத் தண்ணி காண்பிக்கும் மனம் பிசகிய டாக்டர்கள். மேதமையின் குரூரமாக அந்தப் பாத்திரங்களை வடிவமைத்திருந்தார் கௌதம் மேனன்.
புத்திக்கூர்மை வாழ்வு சதுரங்க ஆட்டமாக மாறும்போது மனம் மூளை இரண்டும் ஒரு நேர்க்கோட்டில் சந்திக்க வேண்டியதாகிறது. தமிழ் சினிமாவில் இரண்டு டாக்டர்களின் குடும்பங்களுக்கிடையே இருக்கக்கூடிய நட்பின் செறிவை அழுத்தமும் திருத்தமுமாகப் பேசிய படம் யுத்தம் செய். வாழ்க்கை ஒரு பேயாக மாறித் தன்னை அறைந்ததில் விதிர்விதிர்த்து நிற்கும் டாக்டர் புருஷோத்தமனாக ஒய்.ஜி.மகேந்திராவும், அவருக்காக, அவர் குடும்பத்துக்காகத் தன் வேலையை அதன் சூழலை, தன் மருத்துவ அறிவை எல்லாவற்றின் சாதகங்களையும் உபகரணங்களாக்கி, யுத்தம் செய்து மடியும் டாக்டர் ஜுதாஸாக ஜெயப்பிரகாஷும் கண்கள் கலங்கச் செய்தார்கள்.
தமிழ்ப்படம் படத்தில் “டாக்டர் டாக்டர் ரமணா பொழைப்பானா?” என்று டூப் மம்முட்டி தேவா கேட்க, அதற்கு சீரியஸாக டாக்டர் “சொல்ல முடியாதுங்க” என்பார். உடனே அவரை லேசாக hug செய்ய்ம் டூப்முட்டி “சும்மா சொல்லுங்க டாக்டர் நமக்குள்ள என்ன?” என்பார். விவரமெல்லாம் கேட்டுவிட்டுக் கிளம்பும் அதே முட்டி, தன்னை மறிக்கும் டாக்டரிடம் “என்ன?” என்று வினவ, அவர் “பில்லு” என்றதும் இவர் “வேண்டாம்” எனப் படபடத்து நகர்வார்.
இந்தியன் படத்தில் சிலிண்டர் வெடித்து உயிருக்குப் போராடும் சேனாதிபதியின் மகள் கஸ்தூரியை மட்டும் நேரத்துக்கு அட்டண்ட் செய்து டாக்டர் நிழல்கள் ரவி காப்பாற்றியிருந்தால் அதே சேனாதிபதி கையால் பிற்காலத்தில் பல பொதுநலக் கொலைகளுக்கு நடுவே ஒரே ஒரு சுயநலக் கொலையாகக் கொல்லப்பட நேர்ந்திருக்காது, அதுவும் டிவியில் லைவாக.
தேன்மழை என்கிற படத்தை மறக்கவே முடியாது. ஒரு ஓரமாய் இருக்கும் மனோரமாவை ஏமாற்றுவதற்காக, போலி பேஷண்டாக நாகேஷும், போலி டாக்டராக சோவும், படத்தின் முக்கியப் பகுதி முழுக்க அதகளம் செய்தார்கள். எப்படியும் பொறுமை காட்டிப் பணத்தை வென்றுவிடுவது என்று நாகேஷும், எதிரியைக் கொன்றாவது தின்றாவது வென்றாவது என்று சோவும் எதிர்காலத்தில் இரண்டு காமெடி நடிகர்களின் உலகமகா யுத்தத்துக்கு இதனை உதாரணமாய்ச் சொல்லலாம்.
கலைஞன் படத்தில் சகலகலா கமலஹாசனை எதிர்த்து, பனங்கிழங்கு பர்பி போல் மொழுமொழுவென்று ஒரு வில்லன் தோன்றினார் அவரொரு கன்னட நடிகர்.பேர் கூட குருதத் என நினைவு. சமீபத்தில் வைரலாக வீடியோவில் ஒரு குழந்தை சங்கத்துக்குக் காசு கொண்டா என்றால் “எனக்குப் பசிக்கும்ல” என்று அழுதபடி கேட்கும். கிட்டத்தட்ட அதற்கு அண்ணா போல் இருப்பார். உண்மையிலேயே அந்தப் படத்தை நல்ல தூக்கக் கலக்கத்தில் கமல் கமிட் செய்துகொண்டதாக இன்றுவரை எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு.
கண்ணில் ஒத்திக்கொள்ளுகிறாற் போல் ஒரு டாக்டர். எக்கோலம் பூண்டாலும் ஏற்கும் திருமேனி என்று போற்றத்தக்க வண்ணம் டாக்டராகவே நின்று நடந்து உயிர்த்து வாழ்ந்து இறந்து அந்தப் படத்தைத் தன் பெயருக்குப் பட்டா போட்டுக்கொண்டார். டாக்டர் ரகுவரன், படம் லவ் டுடே.சமுராய் திரைப்படம் குறிப்பிடத்தக்க மற்றொன்று. பெண்ணின் மனதைத் தொட்டு படத்தில் காலேஜுக்குள் நுழையும்போதே மருந்துச்சீட்டு எழுதிக் கொடுக்கும் மறக்க முடியாத விவேக்.யூகிக்க முடியாத விக்ரம் கே.குமாரின் வாவ் திரைக்கதையும் அதில் யாராலும் கைப்பற்றிவிடவே இயலாத நிகர் செய்ய முடியாத நளினமும், மனசாட்சியற்ற குரூரமும் ஒருங்கே பரிணமித்த டாக்டராக, வில்லனாக சச்சின் கெடேகர் மாதவரை மட்டுமல்ல, யாவரும் பயம் என்று கூறத்தக்க அளவில் அசரடித்தார்.
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் சமீபத்தில் வெளிவந்து மனம் கவர்ந்தது. முற்றிலும் வித்யாசமான கதைக்களனில் சிவா டாக்டராக வந்தார். படத்தின் மைய இழைதலுக்கு அவர் டாக்டர் என்பது வலு சேர்த்தது. வாய்விட்டுச் சிரிக்க வைத்தார் டாக்டர் சிவா.
செல்வராகவன் இயக்கத்தில் டாக்டர்ஸ் என்றொரு படம் வரப் போவதாக செய்தித் தாட்களில் விளம்பரம் வந்தது.
அந்தப் படம் எடுக்கப் படவே இல்லை. டாக்டர்களின் உலகம் இன்றைக்கும் சுவாரசியமும் ரகசியமும் குன்றாத கதைவனம்.
என்றைக்கும்.