சமீபத்துப் ப்ரியக்காரி

15 பெரிய பூ


அந்த வீதி எனக்கு மிகவும் பரிச்சயம். என் தோற்றுப்போன முதல் சில காதல்களில் ஒன்று கூட அங்கே நிகழ்ந்ததாக ஞாபகம். விஷயம் அதுவல்ல. அந்த வீதி சடாரென்று நடுவில் வளையும். வாழ்வின் எதிர்பாராமையைத் தனதே கொண்டாற் போல் அதன் அமைப்பு எப்போதும் வசீகரிக்கும். சட்டென்று வீதி முடிந்தாற் போல் சிறியதொரு திடுக்கிடலுக்கு அப்பால் சற்றே வளைந்து வேறொன்றாகிக் கடக்கையில் எல்லாம் வெற்றுமுதுகில் யாரோ மயிலிறகை நீரில் நனைத்து உதறினாற் போல் செல்லமாய் சிலிர்க்கும்.மழை பெய்து ஓய்கையில் விடுமுறை தினத்தில் தலைக்குக் குளித்து விட்டு சாவகாசமாய்க் கூந்தலை உலர்த்துகிறாற் போல் தன்னிலிருந்து மெல்லத் தான் ஈரத்தின் கரங்களை விடுவித்துக் கொள்ளும். அந்தத் தெரு இரவுகளில் வேறு முகம் கொள்ளும். சற்றே சப்தம் அதிகமாய்த் தவளைகள் ஓங்கரிப்போடு வினோதமான குரல்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் பூச்சிகளின் பிடியில் அந்தத் தெருவை நடந்து கடக்கையில் சற்றே உடல் உள்ளே குளிரும். சைக்கிள் டயரில் முள் ஏறிக் காற்றை இழந்த ஒரு முன்னிரவில் வண்டியை உருட்டிக் கொண்டு அந்தத் தெருவுள் நுழைகிறேன். சொல்லி வைத்தாற் போல் மின்சாரம் வெட்டுண்டு இருளை முழுவதுமாய் தரிசிக்கத் தொடங்குகிறது சூழல். முண்டிக் கொண்டு வரும் சிறுநீரைக் கழிப்பதற்கு இன்னும் தூரம் செல்ல வேண்டும் என்பதான நிசத்தை செரிக்க முடியாமல் ஒவ்வாமையில் நடுக்கமுறுகிறது உடம்பு. தன் கண்களை மட்டும் ஒளிர்ந்தபடி எங்கிருந்தோ பாய்ந்து என்னைக் குதறப் போவதான நாயொன்றின் மீதான அச்சம் மேலும் என்னைப் பாதியாக்குகிறது. கார்த்திகை தீபத்தன்று மாத்திரம் கோலத்தின் நடுவே பெரிய விளக்கை நிறுத்துகையில் சற்றுப் பக்கவாட்டில் இன்னொரு பிரமாதமாய்ச் சற்றே சிறு தாழம்பூ அகலொன்றும் சேர்ந்து ஒளிகூட்டும். அப்படியானதொரு அகலைத் தன் வலக்கரத்தில் தாங்கி இடக்கரத்தைக் குவித்து அதன் நுனி அமர்ந்துவிடாமல் பற்றிக் கொண்டபடி என்னை நோக்கி வருகிறாள் அவள். அன்றைக்குக் காலையில் விடுமுறையென்பதன் ஆசுவாசத்தால் சாவகாசமாய் உலர்த்திப் பின்னிய உதிரிழைக் கற்றையாய்க் கூந்தலில் ஒரு பெரிய பூவைச் செருகியிருக்கிறாள். அவளைப் பின் தொடர்ந்து போகிறேன். அந்த வீதியின் முகாந்திரம் வரை என்னோடு வந்தவள் ஒரு புள்ளியில் நின்றுகொள்கிறாள். நால்வழிச் சந்திப்பைக் கடந்து செல்கையில் நான் ஏன் திரும்பி ஒரு தடவை அவள் முகத்தைப் பாராமல் போனேன் என்று அதன் பின் பல முறை யோசித்திருக்கிறேன். விடையேதுமில்லை. மிகச்சமீபத்தில் ஒரு முறை அந்த வீதியை நான்கு சக்கர வாகனத்தில் பாடலுக்கு நடுவே கடந்து போகையில் திரும்பிப் பார்க்கலாமா என்று தோன்றியது.ரியர்வ்யூ மிரரில் மெல்லப் புன்னகைத்தவாறே “திரும்பிப் பார்க்க வேண்டாம்னு எத்தனை தடவை சொல்றது?” என்கிறாள் அகல்விழி. நந்தினி. நன்னிலா. ப்ரயாகி.பௌர்ணமி.

ஆயிரம் பூக்குமாம் அந்தாதிவிருட்சம்.