குடி வாசனை பற்றிய 4 கவிதைகள்
1
ஒன்றுக்கு
மேற்பட வேண்டுமா
இதைக் குடி
ஒன்றுக்கு
மேற்பட வேண்டுமா
இதைக் குடி
2
அந்தப் பறவை
அந்தப் பறவை
இங்கே தான் இருக்கிறது.
அதே பறவை
அங்கேயும் இருக்கிறது.
இன்னும் சில இடங்களிலும்
இருப்பேன் என்றபடி
என்னைப் பார்த்துச் சிரிக்கிறது.
அதனருகாமையில்
ஒயின் வாசனை வருகிறது
3
“குடித்திருக்கிறாயா
ஊதிக் காண்பி”
என்று கேட்ட
அந்தச் சீருடைக்காரனிடம்
“வேண்டாம், முன்னரொருமுறை
வேறொன்றுக்காக நிர்ப்பந்திக்கப்பட்டு
ஊதிக்காண்பிக்கையில்
உண்டாகித்தொலைத்தது தான்
பாழுமிந்த உலகம்”
பாழுமிந்த உலகம்”
என சலித்துக் கொண்டார்
கடவுள்
4.
“இதை
முயற்சித்துப் பாருங்களேன்
வாசனையே வராது”
என்று சொன்ன
பார் சிப்பந்தியிடம்
“வாலாட்டத் தெரியாத
நாய்க்கெதற்கு ஜென்மம்?”
என்று சொன்னபடி
அதிகம் கமழும்
வேறொரு பானத்தைக்
கேட்டுவாங்கிப் போனார்
எசமான்