சமீபத்துப்ரியக்காரி

17 பேசாமடந்தை


அவளுக்குக் கோபம். தாங்க முடியாத பழிநிறைக் கோபம் அது.
இப்போதெல்லாம் ஒவ்வொரு சொல்லாப் பேசுகிறாள்.
முன்பிருந்த ஆதுரம் முற்றிலுமாய் நீக்கம் செய்யப்பட்ட வேறோர் குரல்.

நாடறிந்த நடிகனொருவன் தொண்டைப் புண்ணால் பேசமுடியாமற் போகையில்
பண்டிகைக் காலத்துக்கு வந்தேயாக வேண்டிய புதுத் திரைப்படத்தின்
ஒரு பங்கு வசனங்களை மாத்திரம் குரல்போலி ஒருவனைக் கொண்டு
பேசச்செய்து வெளியிடுகிறாற் போல்
தனக்கே அன்னியமாய்த் தானொரு குரலினை நல்கிக் கொண்டிருந்தாள் அவள்.

பெருந்திரைத் தோன்றலில் சுயமும் அந்நியமும் ஒருங்கே நிகழ்கிற
வினோத கணங்களாய்ப் பல்குகின்றன தருணங்கள்.

உடனிருந்தவாறே வெகுதூரம் செல்லத் தெரிந்த
விசித்திரப் பறவையாக மாறியிருந்தாள் அவள்.

இப்போதெல்லாம் கேட்கிற வினாக்களுக்குச் சுருக்கமாய்ப் பதில்களை
உற்பத்தி செய்யத் தெரிந்திருக்கிறாள்.
விடையறிதலைத் தாண்டிய உணர்வறிதலைத் தடுத்து நிறுத்துவதில்
கெட்டிக்காரத் தனம் கூடிவிட்டிருக்கிறது.
வேண்டாத கேள்விகளைத் தனியே கையாளுவதிலும் கவனமாயிருக்கிறாள்.
தவிர்க்க வேண்டிய வினா என்று தீர்மானித்துக் கொள்ளுங்கணம்
மௌனத்தால் உதடுகளைப் பூட்டிக்கொண்டு
திசையற்ற திசையில் இருள்கூர்கிறாள்.

மனதாழத்தில் தோன்றுகிறது
‘இருந்து கொண்டே இல்லாமற் போகிற வித்தகத்தைச் செய்ய முனைகின்றனள்’
என்றொரு ஐயம்

மெலிகிறாள்.

வற்றிப் புன்னகைக்கிறாள்.

நோய்மையின் தாளமுடியாச் சுடர்நுனியைக்
கண்ணிரு அகல்கொண்டேந்தியபடி வளையவருகிறாள்

தருணம் அமிலவெள்ளமாய்ப் பெருக்கொண்டு
புரண்டு நெருங்குகிறது.

இருகால்களையும் காலம் குழந்தைப்பூனையெனப் பற்றிக்
கருவித் தீர்க்கிறது.

மந்தகாசம் தீர்ந்து போன பொழுதொன்றில்
பூர்வீகத்தின் மெல்லிடுக்கில்
மறுமலராய்ப் பூக்கத் தலைப்படுகிற 
அசரீரப் பாதிக் கனாவில்
முதுகிலறைந்து யாரோ எழுப்பிச் செல்கிறார்கள்.
மிச்சமிருக்கும் இரவாய்க் கசந்து வழிகிறது காதல் நீக்கம்.
அவளாய்ப் பேசினாலொழியப்
பழையபடி மாறவே மாறாது
முற்றிலும் புதிது நிரம்பியிருக்கும் வாழ்வனம்.
மாயாதீதம்,சாலச்சுகம்!