இருவிழாக்கள்
காலாபாணி நாவல் இந்த வருடத்திற்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றது. மதுரை மேலூரில் மூவேந்தர் பண்பாட்டுக்கழக மண்டபத்தில் விஜயா வேலாயுதம் அவர்களது ஏற்பாட்டில் விருது பெற்ற முனைவர். மு.ராஜேந்திரனுக்குப் பாராட்டு விழா கடந்த 5 ஆம் தேதி நடந்தேறியது. கூட்டத்தில் பேசுவதாக இருந்த கவிஞர் ரவிசுப்ரமணியனால் அதில் கலந்து கொண்டு பேசவியலாமற் போகவே என்னைப் பேசு எனப் பணித்தார்கள் எழுத்தாளர் அ.வெண்ணிலாவும் கவிஞர் மு.முருகேஷூம்.
கூட்டத்தின் நிகழ்விடத்தை நெருங்கும் போதே மேளதாளத்துடன் விருதாளரை வரவேற்கப் பெருந்திரள் காத்திருந்தது. பெரிய மண்டபத்தில் நிறைந்த கூட்டம் நிகழ்வின் முடிவு வரைக்கும் கலையாமல் இருந்தனர். வரிசையில் நின்று எழுத்தாளரிடம் காலாபாணி உள்ளிட்ட நூல்களில் கையொப்பம் பெற்றுச் சென்றது பாங்கு. நிகழ்வில் எனக்கு முன்பாக தொடக்க உரையை விஜயா வேலாயுதம் அண்ணாச்சி நிகழ்த்தினார். தொடர்ந்து தலைமையேற்றுச் சிறப்புரையை ஊரக வளர்ச்சித் துறையின் செயலர் திருமிகு கருணாகரன் இ.ஆ.ப அவர்கள் நெடியதோர் உரையை நல்கினார். மொத்த அரங்கும் அசையாமல் உன்னித்துக் கேட்டது.
கவிஞர் தங்கம் மூர்த்தி பட்டாசாய்ப் பிளந்து சரவெடியாய்ப் பொரிந்தார். தொடர்ந்து நான் உரையாற்றினேன். எனக்கப்பால் விழாவின் நாயகர் முனைவர். மு.ராஜேந்திரன் இ.ஆ.ப (ஓய்வு) அவர்களது ஏற்புரை மகிழ்வும் நெகிழ்வுமாய் எல்லோரையும் கட்டிப் போட்டது. விழாவில் மதுரையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிவகங்கை உள்ளிட்ட அருகமைப் பெருந்தலங்களிலிருந்தும் ஆர்வலர்கள் பலரும் வந்து கலந்ததைக் காண முடிந்தது.
விஜயா வேலாயுதம் அண்ணாச்சியின் புத்தகக் காதலும் எழுத்துப்ரியமும் மட்டுமே இப்படியானதோர் விழாவை சாத்தியம் செய்தது எனப் பலரும் சொல்லக் கேட்க முடிந்தது. அது தான் நமக்கும் ஒரே கருத்து.
அடுத்த தினம் மாலை மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் சங்கத்தின் தமிழ் மன்றக் கூட்டம். சிறப்பு விருந்தினராக முனைவர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப.(ஓய்வு) நிகழ்வின் தலைமை ஏற்றவர் நீதியரசர் திருமிகு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள்.
சங்கத்தின் நிர்வாகிகள் கவிஞர் ஸ்ரீநிரா என்கிற ஸ்ரீனிவாசராகவன் மற்றும் முகைதீன் மற்றும் கவிஞர் நிரல்யா ஆகியோர் வரவேற்பளித்து உபசரித்தனர்.இரண்டு நிகழ்வுகளின் அழகிய தருணங்களைத் தன் கேமிராக்களின் வழியே அழியாத கோலங்களாய் சிறைபிடித்தார் அருமை நண்பர் செல்வம் ராமசாமி. இந்த நிகழ்வில் எழுத்தாளர் அ.வெண்ணிலா சிறப்புரை ஆற்றினார்.
நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் ஆற்றிய உரை அபாரமாக இருந்தது. வாசிப்பை விடாமல் பற்றிக் கொள்வதற்கான உளத்தீவிரத்தை உறுதிப் படுத்திக் கொள்ள உதவிய ஆழமான நல்லுரை அது.
எழுத்தாளர் முனைவர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப(ஓய்வு) தனது ஏற்புரையில் வரலாற்றுப் புனைவான காலாபாணி மற்றும் 1801 ஆகியவற்றுக்கும் தனக்குமான பந்தத்தைச் சொற்கள் வழியே விரிவாக எடுத்துரைத்தார். முந்தைய தினத்தைப் போலவே இந்த நிகழ்வும் அரங்கு நிறைந்த நிகழ்வாகவே நடந்தேறியது. கூட்ட நிறைவில் அ.வெண்ணிலாவுக்கு வழங்கப்பட்ட நிகழ்வுப் பரிசாக எனது மிட்டாய்பசி மற்றும் பீஹாரி ஆகிய இரு நூல்கள் இடம்பெற்றது எதிர்பாராத இன்பாச்சர்யம்.
இந்த இரு நிகழ்வுகளின் வாயிலாகவும் தமிழ் இலக்கியத்தில் வரலாற்றுப் புனைவெழுத்தில் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான பங்களிப்பாளராக மு.ராஜேந்திரன் முன்வந்திருப்பதன் பின்னால் உறைந்திருக்கக் கூடிய நுட்பமான காரணங்கள் பலவற்றை உணர முடிந்தது. இன்னமும் தேடல் குறையாத தாகப் பறவையாகவே பல சிகரதூரம் ஏகத் தயாரான மனோ நிலையுடன் தன்னை மேலெழுதிக் கொள்கிற பிரயாணியாகவே நேர்பேச்சுக்களிலும் அவரை அறிந்து கொண்டேன்.
செறிவான நிகழ்வுகள்