மான் தின்ற சிங்கம்

மான் தின்ற சிங்கம்


சரியான குளிர். இந்த வருடத்துக்கான  பனியின் பொழிவு வழக்கத்தை விடவும் சில தினங்கள் முன்பாகவே தொடங்கி விட்டிருக்க வேண்டும். நகரம் முழுவதுமாகத் தண்மையின் பிடியில் ஆழ்ந்திருந்தது. மலைவாசஸ்தலம் என்றாலே என்னவோ சுற்றுலா வந்து திரும்பினால் போதும் என்பதான மனோநிலை தான்  பலருக்கும் உள்ளது . நுழைந்து கிறங்குவதெல்லாம் முதல் இரண்டு தினங்களுக்குத் தான். நாலே நாட்களில் அலுத்துக் கொட்டும். எப்படா கீழே இறங்குவோம் என்று தலை தெரிக்க வளைவுகளில் நீந்துவார்கள். பலரும் இப்படியான இரட்டை மனோபாவத்தை நிரந்தரம் செய்து கொண்டவர்கள் தான். எருமை மாடு சகதியுட் புகுகிறாற் போல் ஒரு இடத்தை ஆக்கிரமித்து விட்டு அதே இடத்தைக் காலடிகளால் கந்தலாக்கிய பிற்பாடு ஒன்றுமே நடவாத பாவனையில் திரும்பிச் செல்பவர்கள். மனோகருக்கு இப்படியான மனிதர்களைப் பார்க்கும் போது வினோதமாய்க் கோபம் உருக்கொள்ளும். bull-shit! சற்றே உரக்கத் தான் சொல்வான்.

அவன் அந்த ஊரின் மைந்தன். அங்கேயே பிறந்தவன். படிப்பு கொஞ்சம் தான் ஏறியது. ஆனாலும் ஆங்கில மொழி அவனிடம் ஒரு அடிமை போல் சேவகம் செய்கிறது. போதாதா.? பெரிய பெரிய டாக்டர் இஞ்சினியர் இத்யாதி வேலைகளில் கொடி நாட்டியவர்கள் பலரும் அவன் மொழிப் பிரவாகத்தைக் கண்டு ஒரு கணம் மிரளுவார்கள். அதெப்படி ஒரு மலை வாசஸ்தலத்தில் கைடு வேலை பார்ப்பவன் இத்தனை சமர்த்தான ஆங்கிலத்தைப் பேச முடியும் என்பது அவர்களது வியப்பு. அதற்குக் காரணம் அவர்கள் மொழிவளத்தைப் படித்த படிப்போடு தொடர்புறுத்தியே தத்தம் பொதுப்புத்தியை வளர்த்திருப்பவர்கள். ஒரு விஞ்ஞானியோ அல்லது பேராசிரியரோ அங்ஙனம் ஆங்கிலம் பேசினால் அது சாதாரணமான செய்தி. ஒரு கைடு அப்படிப் பேசுவதாவது?எளியவன் கையில் வாளைப் பார்க்கும் போது அச்சம் வருவதற்கு முன்பாக ஆச்சரியம் வருவது தான் வசீகரம். மனோகரன் ஆங்கிலம் என்னும் தன் வாளால் அனேகர் கழுத்துக்களைக் கீறி ரத்தம் பார்ப்பான். அவனுக்கு அதில் அத்தனை இஷ்டம். அவனது தோற்றமும் அவன் பார்க்கிற வேலையும் அவனுக்கு ஈட்டிக் கொடுக்கக் கூடிய பொருளை விடவும்  ஆங்கிலமும் அவனதைக் கையாள்கிற விதமும் கூடுதல் வண்ணமாக   வாழ்வெனும் கேன்வாஸில் பல உப சித்திரங்களை நிரப்பிக் கொண்டிருந்தது.

ஏற்ற இறக்கமான அந்தச் சாலைகள் அவனுக்குக் கனவிலும் மாறுபடாத மனனத்தின் ரேகைகளைப் போன்றவை. அந்த ஊர் அவனுக்கு அத்தனை அத்துப்படி. மண் சரிந்து மெயின் சாலை மூடப் பட்டால் நகரமே ஸ்தம்பித்துப் போனாற் போல் ஒரு தோற்றத்தை உடனே அணிந்து கொள்ளும். மனிதர்கள் பயந்தோளிகள். எங்கேயாவது போகவேண்டும் என்று வெறி. ‘ஊருக்குத் தானே போகிறாய். ஒரு குடும்பத்துக்கு எதற்கு இத்தனை சாமான் எதற்கு இவ்வளவு எடையை வாகனத்தில் நிறைத்துக் கொண்டு மலையேற முனைகிறாய்..?’ ‘இதை யார் கேட்பது..? டோல் கேட்டில் சுங்கம் வசூலிக்கிற போது மலை மீது தேவையற்ற பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என்று பரிசோதிக்கவேண்டும். அவன் ஆட்சி அமைக்கும் போது அதில் கறாராக இருப்பான். நாலு பேருக்கு நாலு நாட்களுக்குத் தேவையான அதி அவசியங்கள் மட்டும் கொண்டு போனால் பற்றாதா,..? எதற்கடா இத்தனை சுமை எதற்கடா இத்தனை சாமான்கள்..? லேய்ஸ் பாக்கெட்டும் பிரிட்டானியா பிஸ்கத்தும் மலைக்கு மேலே கிடைக்காதா..? எதற்கு இத்தனை தின்பண்டங்கள்? ஏன் இத்தனை மது வகைகளைக் கீழே இருந்து மேலே சுமக்கிறாய்..? எல்லா செலவையும் வேறோர் பள்ளத்தில் செய்து விட்டு மலையின் உயரத்தை அதன் குளிரை அதன் ஏகாந்தத்தை அதன் ஒப்பிட முடியாத யௌவனத்தை எல்லாம் முடிந்த மட்டிலும் இலவசமாகவோ குன்றிய செலவிலோ உறிஞ்சிக் கொண்டு விட்டுத் திரும்பவும் அனல் பிசுக்கும் சொந்த வாழ்வுக்குள் திரும்பிப் போய்விட வேண்டும். மலையை ஏமாற்றுவதில் உயர்ந்ததோர் கூடுதல் இன்பம்.. உலுத்தனே… கை நிறையக் காசு கொண்டுவந்து மலை முழுவதும் இறைத்து விட்டுப் போயேன். குறைந்தா விடுவாய்..?

ஒரு முறை மனோகர் கைடாக அமர்த்தியவர்கள் ஆறு பேர் நாலு வேளைக்கான சப்பாத்திகளையும் தயிர் சாதத்தையும் பொட்டலம் கட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். ஆறேழு வயதுச் சிறுவன் தனக்கு சப்பாத்தி வேண்டாம் புரோட்டா தான் வேண்டும் என்று அரை மணி நேரம் அழுது மயங்கும் அளவுக்குப் போன போது பெரிய மனது பண்ணி அவனுக்கு மட்டும் மூணு புரோட்டாக்கள் வாங்கித் தந்தார்கள். மனோகரை ‘சப்பாத்தி சாப்பிடுங்க. தயிர் சாதம் டிவைனா இருக்கும்’ என்றெல்லாம் சொன்ன போதும் மறுத்து விட்டான். “எனக்கு தினமும் கவுச்சி வேணுங்க” என்றான். அதை அவன் நக்கலான சப்தத்தோடு சொன்னது அந்த அம்மாளின் முகம் இருண்டு போனது. திரும்பப் போகும் வரை அவனிடம் ‘எதையும் சாப்பிடுகிறாயா’ என்று அவர்கள் கேட்கவே இல்லை. அவர்களை வழியனுப்பி விட்டுத் திரும்பி வந்து சோனுவிடம் சொன்னான். ‘இவங்களுக்கு சப்பாத்தி வரி போடணும் நம்ம ஆட்சியில’ என்று சோனு சிரித்தாள்.

சோனு அவன் காதலி. வாழ்காலத் தோழி. இரண்டு பேரும் திருமணம் என்று சம்பிரதாயமாக எந்தச் சடங்கும் மேற்கொள்ளவில்லை. அந்த ஊருக்குப் பயணியாக வந்தவள் சோனு.சோனுவை ஒருவன் காதலித்து ஏமாற்றி விட்டான். அவளுடைய அத்தனை வழிகளையும் அவன் பபுள்கம் போல் மென்று துப்பிவிட்டான். தற்கொலை மட்டும் தான் ஒரே முடிவு என்று மலையேறி வந்தவள் இரண்டு தினங்கள் ஊர் முழுக்கச் சுற்றுவதற்கு மனோகரனை கைடாக அமர்த்திக் கொண்டாள். அரை மணி நேரத்தில் அவளுடைய மனம் அசமனாக இருப்பதை அவன் கண்டுபிடித்து விட்டான். மதிய உணவின் போது அவள் கண்களை நேராகப் பார்த்தபடி கேட்டான். அவள் தன் மனத்தின் அத்தனை இருளையும் அவனிடம் கொட்டினாள். தன் மனத்தால் அவளது பூர்வகதையை ஏந்திக் கொண்டான். அதன் பின் அவர்கள் சற்று நெருக்கமாக உணரத் தொடங்கினார்கள்.

 திருமணம் ஆன கையோடு மலை ஏறி வந்து உலாவுகிற புது மணத் தம்பதியர்கள் பலருக்கும் நடுவே புதிய காதலை அறிவித்துக் கொள்ளத் தயங்கித் தயங்கி முயற்சியெடுக்கிற வினோத ஜோடி ஒன்றைப் போல்   உணவருந்தும் கணமொன்றில் விடுதியில் இருந்த மாபெரும் கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தைப் பார்க்கையில் சோனு உணர்ந்தாள். அன்றைய மாலை அவளுடைய திட்டப்படி அந்த மலைப்பிரதேச சுற்றுலாவை நிறைவு செய்துகொண்டு அவள் கீழே இறங்கப் போகிறாள். அவளுக்குப் போவதற்கு விருப்பமே இல்லை. ‘இங்கேயே இருந்துவிடலாம் போலத் தோன்றுகிறது’ என்றாள் அவள். “எல்லோரும் சொல்வது தான்” என்று சோகையாய் சிரித்தபடியே மனோ சொன்னதை அவள் வெறுப்பு உமிழும் கண்களால் பெற்றுக் கொண்டாள். “நான் அப்படிச் சொல்லவில்லை நான் இங்கே வந்தது தற்கொலை செய்துகொள்வதற்காக” என்றாள். அவன் இதற்கு யூகித்தேன் என்று ஒரு சொல்லால் பதில் சொன்னான். பில்லுக்கு உண்டான பணத்தை சற்று அதிகமான டிப்ஸ் தொகையுடன் வைத்து விட்டு அவள் எழுந்து கொண்டாள்.

அந்த விடுதியின் வடக்கு மூலையில் மாபெரும் மீன் தொட்டி ஒன்று இருந்தது. அதில் அளவில் மிகப்பெரிய மீன் ஒன்றே ஒன்று சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது. அதனருகே சென்று அந்த மீனின் மேனியில் சதா சர்வகாலமும் மாறிக் கொண்டே இருக்கும் நிறக்கேடுகளை உற்றுப் பார்த்தபடி நின்றாள். அப்படியே பத்து நிமிடங்களுக்கு மேல் நின்றுகொண்டிருப்பதை உணர்ந்து அவளாகவே ஸாரி என்றதை அவன் பொருட்படுத்தவில்லை. மீண்டும் அவர்கள் சரிவுப்பாதையில் இறங்கி பிரதான அருவியை நோக்கிச் செல்லும் அகன்ற சாலையில் நடக்கலாயினர். அப்போது காற்றோடு நீர்த்துளிகள் எதிராடியதில் முகமெல்லாம் தண்மை வருட ‘ஸ்ஸ்’ என்றபடியே கூசினாள் சோனு.
“நான் இங்கேயே இருந்துவிடட்டுமா?” என்றாள். அவள் அப்படிச் சொல்வாள் என்றும் சொல்லக் கூடாது என்றும் கடந்த இரண்டு நாட்களாகவே மனோகரன் தனக்குள் எண்ணிக்கொண்டே இருந்தது தான். சட்டென்று திரி முற்றி வெடித்துச் சிதறும் அணுகுண்டுச் சப்தத்தோடு கமழும் பட்டாசு மணத்தின் வருகையைப் போல் அந்த வாக்கியத்தைத் தனக்குள் அமிழ்த்திக் கொண்டவன் எதுவுமே பேசவில்லை. ஆண் என்பவன் அப்படித் தான். பார்க்கக் கரடு முரடாகத் தெரிந்தாலும் அவனுக்குப் பயங்கள் அதிகம் அல்லவா..? சிந்தனைக்கான எரிபொருள் பயம் தான். பயம் வாழவும் வீழவும் விடாத ஈனம்.

“நீ எதுவுமே சொல்லவில்லை?” என்றாள்.

நீங்கள் நீயாவது காதலின் முக்கியத் திறப்பு. அவன் அதை ரசித்தான். ஆனால் முகத்தில் எதுவும் தோன்றிடாமல் மறைத்துக் கொண்டவன், “உன்னால் தற்கொலை செய்துகொள்ள முடியாது. உன் கண்களில் வாழ்வாசை பெருகுவதைப் பார்த்தேன்” என்றான். இந்தப் பதில் அவளுக்குள் எதையோ உடைத்துக் காயமுறுத்தியது ஆனாலும் அவன் சொன்னதன் பின்னாலிருக்கும் மெய்மை அவளை மௌனமாய் நிறுத்தியது. “நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்டாள். ‘வாழ்வின் முக்கியக் கேள்வியை மலையூர் ஒன்றில் சுற்றுலா வழிகாட்டி ஒருவனிடம் கேட்பது வினோதமாக இருக்கிறதில்லையா?’ என்றான் இதை அவன் எந்தக் கேலியும் இல்லாத குரலில் தான் கேட்டான் என்றாலும் அதனுள்ளே இருந்த பகடியை அவள் உணராமல் இல்லை. ”எனக்கு யாருமே இல்லை என்பதை நினைவுபடுத்துகிறேன். கோயில் பூசாரியிடமோ குதிரை வண்டிக்காரனிடமோ ஏன் ஊர் வாயிலில் அமர்ந்த இடத்திலிருந்தபடி யாசகம் கேட்பவன் ஒருவனிடமோ கூட இதே கேள்வியைக் கேட்டாலும் சரி தான். யாருமற்று இருப்பதை விட சாவதை விட யாராவது ஒருவரிடம் சரணடைவது உசிதம் இல்லையா?” என்றாள்.

எங்கோ தூரத்தில் மணிகள் ஒருங்கே அதிரத் தொடங்கின.அவன் எதுவுமே பேசவில்லை. அவள் கண்களை நேர்கொண்டு பார்த்தான். அதில் கடலின் ஆர்ப்பரிப்போடு இரண்டு துளிகள் தளும்பிக் கொண்டிருந்தன. அவளருகே சென்று தோள்பட்டையை ஆதுரமாய்ப் பற்றினான்.”நானிருக்கிறேன். நாமிருப்போம்” என்றான். அது தான் அவர்கள் காதலை அறிவித்துக் கொண்ட கதை. சோனுவும் அவனும் சேர்ந்து வாழத் தொடங்கி ஆறு ஆண்டுகள் ஆகின்றன.
மலையின் ராஜா என்று தான் மனோகரனை எண்ணிக் கொள்வாள் சோனு. ராஜா என்பது ஆள்வதில் இருக்கிறது. ஆஸ்தியில் இல்லை அந்த வகையில் மனோகரனை விட்டால் அவ்வளவு பெரிய மலையை ஆள்கிற தகுதி வேறு யாரிடம் இருக்கிறதாம்..?

மனோகரனுடன் நடந்து வருகிற அந்த மனிதனைப் பார்த்ததும் முகம் மாறினாள் சோனு. குணசீலன் ஏட்டைய்யா. இவர் எங்கே இவ்வளவு தூரம் என்று தான் கேட்க நினைத்தாள். ஹாலில் இருந்த சோபாவில் குணசீலன் அமர்ந்துகொண்டார். இல்லாத வியர்வையைத் துடைத்துக் கொண்டார்.

‘நல்லாருக்கியா சொர்ணா?’ என்றார். அந்தக் கேட்பு ஆயிரமாயிரம் அனல் பொறிகளை அள்ளித் தலைமீது வார்தாற் போலக் காந்தியது சோனுவுக்கு. தன் சொந்தப் பேரிலிருந்து இத்தனை காலம் விலகி வந்ததெல்லாமும் ஒரே ஒரு விளிப்பில் அற்றுப் போவதை அவள் வெறுத்தாள். தன் அடையாளங்களாகத் தன்மீது சுமர்த்தப்பட்ட எல்லாவற்றிலிருந்தும் கிளம்பி வெகுதொலைவு வந்துவிட்டிருந்தவள் இன்றைக்கு ஒரே ஒரு சொடக்கிட்டுப் பழைய ஜென்ம இருளில் மீண்டும் தன்னைச் சரித்துவிட்டாற் போல் வெதும்பினாள். “குடிக்க எதுனா சூடாக் குடு” என்ற மனோவின் குரல் அவளை மீட்டெடுத்தது. மறுபடி தற்கணத்தின் உலகத்துக்குத் திரும்பியவள் என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறியபடியே வரேன் என்றவாறே சமையல் ரூமை நோக்கி நடந்தவள் அய்யோ ஏட்டய்யா விசாரித்ததற்குப் பதில் ஏதும் சொல்லாமல் போகின்றோமே என்று தனக்குள் பிறழ்ந்து சரியான தொனியில் ” நல்லா இருக்கீங்களா..? எல்லாரும் சவுக்கியம் தானே என்றாள். குணசீலனின் பதிலை எதிர்பார்த்து அவற்றைக் கேட்கவில்லை என்பதையும் தொடர்ந்து அடுமனைக்குள் அவள் நுழைந்துவிட்ட அவளது செய்கையே உணர்த்தியது.

அந்த ஊரின் குளிர். சொந்த ஊரின் வெப்பம் மாறிக் கொண்டிருக்கும் அரசியல் நிலவரங்கள் போலீஸ் வேலையின் கடினம் என்றெல்லாம் இருவரும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டபடியே சூடான தேநீரைத் தயாரித்து மூன்று தம்ப்ளர்களில் நிரப்பி மேலே சிறு தட்டால் மூடி ட்ரேயைத் தன் கையில் எடுத்துக் கொண்டு ஹாலுக்குத் திரும்பினாள். “கொஞ்சம் கூட மாறவேயில்லை சொர்ணா அப்டியே இருக்குறே” என்றார் குணசீலன். இதைத் தான் விரும்பவில்லை என்பதை ஒரு நொடி உணர்த்துகிறாற் போல் பார்வையைக் கடுமையாக்கி விட்டு மறுபடி சமாதானத்துக்குத் திரும்பியவள் போலியான சிரிப்பொன்றை உதடுகளில் அணிந்துகொண்டாள்.

மனோவின் கைகளைப் பற்றிக் கொண்ட குணாளன், “நீங்க என்னை விட வயசுல சின்னவரு. நாயமா நா உங்க கால்ல விழுந்து கேட்குறாப்ல தான் நெனச்சிக்கிங்க. இந்த உபகாரத்தை மட்டும் நீங்க செய்யலைன்னா எனக்கு போக்கிடம் ஏதுமில்ல. நா இந்த மலையில இருந்து விளுந்து சல்லி சல்லியா நொறுங்க வேண்டியது தான்” என்றார். அந்தச் சொற்களில் ஒரு இம்மியளவும் உண்மை இல்லை என்று எல்லோர்க்குமே தெரியும் என்றாலும் கூண்டுக்குள் வேறாரும் பார்க்காத தருணமொன்றில் கால்களைப் பற்றுகிறவனின் பம்மாத்துத் தனம் தான் அவரது குரலில் தொனித்தது. சோனுவுக்கு குணாளன் எங்கே வருகிறார் என்பது தெரிந்தது. ச்சீ…காரியம் ஆகவேண்டும் என்பதற்காகக் காலைப் பற்றுகிற ஓநாய் இது மனதுக்குள் எரிந்தாள்.

அவளுக்கு குணசீலன் ஏட்டய்யா மீது எந்தப் பழிபகையும் இல்லை. காக்கிச்சட்டை என்றில்லை. எந்த சீருடையையும் அவளுக்குப் பிடிக்காது. என்னவோ இனம் புரியாத பயம் அவள் மனதில் மண்டிக்கிடந்தது. முக்கியமாகப் போலீஸ் காரர்களைப் பார்த்தாலே அவளுக்கு அச்சமிகும். அதுவே வெறுப்பாய்க் கனியும். அச்சமும் வெறுப்பும் ஒரு முகத்தின் இரு கண்களைப் போலத் தான் பல இடங்களில் நிலவக் கிடைக்கின்றன. குணசீலன் ஏட்டய்யா மலையடியில் அவள் பெருங்காலம் வாழ்ந்த ஊரின் போலீஸ் ஸ்டேஷனில் பத்து வருடங்களுக்கு முன்பாக வேலை பார்த்தவர். அப்போது அவர் உடல் விறைப்பும் முகத்தில் முறைப்புமாகக் கறாராகத் திரிவார். அவரைப் பார்த்தாலே நடுவீதிக்காரர்கள் பலரும் இருக்கும் இடத்திலேயே பம்முவார்கள். குற்றமனம் கொண்டவர்கள் காணாமற் போய்விடுவர். அடி யார் வாங்குவது.? கை நீட்டி யாரிடமும் காசு வாங்காதவர் என்பதால் ஏற்பட்ட புகழ் அது.குணா ஏட்டு என்றாலே பயம் தான் முறுக்கு மீசை துடிக்கும் நாசி சிவப்பேறிய கண்கள் கையில் இருக்கும் கழியை உயர்த்தினால் அது உடல் தின்னாமல் விடாது. அதெல்லாம் ஒரு காலம். அவர் சரிவதற்கென்று ஒரு பள்ளம் காத்திருந்தது. அதில் சரியாக அவர் மாட்டிச் சீரழிந்தார்.

இன்று இப்படி சொர்ணத்தின் அதாவது சோனுவின் கணவனிடம் கெஞ்சிக் கொண்டிருக்க அந்தப் பள்ளம் அதன் இருள் தான் காரணம். அவரால் அதைத் தாண்டிவரவே முடியவில்லை. அவர் என்றைக்கோ சப்-இன்ஸ்பெக்டர் ஆகியிருக்க வேண்டியவர். என்ன செய்தாலும் அழியாத மையாலெழுதிய சித்திரமாய் அவரது வரலாற்றின் மீது அந்தக் கறை படிந்திருப்பதைத் துடைக்கவே முடியவில்லை. அவரும் தலைகீழாய்த் தவமிருந்து பார்த்து விட்டார். எல்லாம் ஒரு திருட்டுப் பயலால் வந்தது. அவன் மட்டும் அப்படிச் செய்திரா விட்டால் இன்றைக்கு குணா ஏட்டய்யாவின் லெவல் வேறெங்கோ ஒளிர்ந்திருக்கும்.

“இங்க வா சொர்ணம். எனக்கு நீதான் சாமி. இங்கன வந்து உட்காரு” என்றார் குணா. அத்தனையும் வேஷச்சொற்கள் என்பதை அவள் அறியாமலில்லை. அவருடைய நிலமை அவரைக் கெஞ்ச வைக்கிறது. இதே குணா இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்தால் தன் பூட்ஸ் காலால் சொர்ணத்தின் முகத்தில் அழுத்தித் தேய்க்காமல் இருக்கமாட்டார். இது மனித சுபாவம் தான். இவர் மட்டும் விலக்கமா என்ன

“மணி பதினொண்ணு ஆச்சுல்ல்” என்று சிரித்துக் கொண்டார். அவள் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

மனோகரின் முகத்தையே பார்த்தார் “குணா நாஞ்சொல்றதை சொல்லிட்டேன். இது அரசாங்கத்துக்கான சகாயம். என் ஒருத்தனுக்கான அனுசரணை மாத்திரம் இல்லை. கை நிறையப் பணம் கிடைக்கும். அதையும் தாண்டி அதிகாரிக சகவாசம் அவங்க நட்பெல்லாம் கிட்டும். நீங்க ஒத்துழைச்சா போதும். தயவு செய்து இதை ஒரு பிச்சையா எனக்கு செய்து தரணும்”. நிசமாகவே கலங்கினார். சோனு அப்படியே அமர்ந்திருந்தாள். “உனக்கென்ன இரக்கமில்லியா உன் வாய்திறந்து பேசேன் சொர்ணா” என்றார் ஏட்டு.அசிங்கமாக ஒழுக்கிய தன் மூக்கைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார்.

 “என்பேரு சொர்ணா இல்ல. நான் சோனு” என்றாள். சினேகிதமற்ற குரலில் அவள் சொன்னதும் முகம் ஒருகணம் இறுகிய ஏட்டு “சரிம்மா சரி தாயி உன்னைய சோனின்னே கூப்டுறேன். எனக்கு சம்மதம் சொல்லேன்” என்றார். “உன்னை வற்புறுத்தக் கூடாதுன்னு அதிகாரியே சொல்லி அனுப்பிருக்காரு. அந்தா ஸ்ப்ரிங்க் ரோட்ல வண்டி நிக்கிது.அதுல அதிகாரி காத்திட்டிருக்காரு. அவரு கிட்ட வந்து உனக்கு சம்மதம்னு சொல்லிரு போதும்” என்றார்.

“சம்மதம் சம்மதம்னா எதுக்கு?” என்றாள். இதைச் சற்று உயர்த்திய குரலில் தான் கேட்டாள் சோனு.

மனோகர் சோனுவின் முகத்தைப் பார்த்தவன் “உங்க அம்மத்தா செத்தப்புறம் ஊர்ப்பக்கமும் வர்றதில்லையாம் உன் மாமன் கார்மேகம். நீ ஊருக்குத் திரும்பி வந்திருக்குறேன்னு தெரிஞ்சா போதும் நிச்சயமா உன்னையப் பார்க்க ஒருதடவையாவது வருவான்னு நம்புறாங்க. அவனைப் பிடிக்கிறதுக்கு நீ தான் உதவணுமாம்.” என்றான்.

அவன் முகத்தை வெறுப்புமண்டிய பார்வையால் எரிக்க முனைந்தாள் சோனு. “என்ன நீங்களும் இவரோட சேர்ந்திட்டு இப்பிடி சொல்றீங்க..எங்கம்மா கூடப் பொறந்தவுங்க மொத்தம் ஆறு பேரு. அதுல இன்னம் மிச்சமிருக்கிற ஒரே ஒருத்தரு கார்மேகம் மாமா தான். அதெப்படி என்னையக் கேக்குற தைரியம் வந்திச்சி? நா எப்பிடி வருவேன்னு நினைக்கிறீங்க..?” என்று கத்தினாள். “உன் கால்ல வேணா வுழுவுறேன். இதை விட்டா அவனைக் கெளப்பி வெளிய அழைச்சிட்டு வர்றதுக்கு வழியே இல்லை. ஒரே ஒரு முறை உதவேன் என்றார் மனோகரன் முகம் தேவையற்ற இருளில் நனைந்திருப்பது தெரிந்தது.

“நான் சொல்லி கூட்டிட்டு வாரேன் ஏட்டய்யா நீங்க போங்க” என்று அவரை எழுப்பி அனுப்பி வைத்தான். இதைச் சற்றும் எதிர்பாராத சோனு அதிர்ந்தாள். அப்படியானால் ஏற்கனவே பேசி வைத்திருக்கிறதைத் தான் நிகழ்த்துகிறீர்களா..இதில் நீயும் கூட்டாளா என்று மனோவின் முகத்தில் தன் தரப்புக்கான எதாவது அனுசரணை தென்படாதா எனத் தேடித் தோற்றாள்.

திருப்தியாக எழுந்து செல்கையில் “நான் வெளில தான் நிக்குறேன்” என்று மனோகரைப் பார்த்துச் சொல்லி விட்டுப் போனார் ஏட்டய்யா.

அடுத்து வந்த பதினைந்து நிமிடங்கள் குமுறித் தீர்த்தாள் சோனு. முடிவாக நீ வந்தே ஆகவேண்டும் என்று சொல்லி விட்டான் மனோகரன். அவன் சொல்லச்சொல்லத் தான் கடந்த ஆறு மாதங்களாகவே போலீஸ்காரர்கள் அவனை மெல்ல மெல்லக் கரைத்திருக்கிறார்கள் என்பதே தெரியவந்தது சோனுவுக்கு,. அன்பாகச் சொல்லும் போதே ஒப்புக்கொள்ளா விட்டால் தங்களுக்கு சொல்லொணாத் துயரங்களை அளிக்காமல் போகமாட்டார்கள் என்பதைத் தெளிவாகப் புரியவைத்தான். “நமக்கு வேற வழியில்லை பொன்னே” என்றான். அவள் கன்னங்களில் நீர்த்தாரை வழிந்துகொண்டே இருந்தது. “சரியா பத்து நாளுக்குள்ள திரும்பிடலாம்” என்றான் அவள் மௌனமாக அமர்ந்திருந்தாள். “போலீசை நம்பிக் கெட்டவங்க கதைங்க தான் அதிகம்” என்று முணுமுணுத்தாள் சோனு.

அவர்கள் இருவரும் கிளம்புவதற்கு அடுத்த பத்து நிமிடங்களே போதுமானதாயிருந்தன.

“நீ மதுரையில தங்குற. உனக்கு லாட்ஜூல ரூம் தயாராயிருக்கு. வேளைக்கி சாப்பாடு ரவைக்கி சரக்கு எல்லாம் நாம்பாத்துக்கிடுதேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தார் ஏட்டு. “சரிங்க சரிங்க” என்று கேட்டுக் கொண்டிருந்தான் மனோகர். “நீயா இந்த மலைக்கி ராஜா. அவன் வேற. நீ ஏட்டய்யா முன்னாடி கைகட்டி நிக்கிற சாதாரண மனுசன்” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள் சோனு. தன் மனத்தில் எஞ்சியிருக்கும் அத்தனை காதலையும் வழித்து அவளிடம் கொட்ட வேண்டுமென்று தோன்றியது மனோகருக்கு. அவன் கண்கள் ஏனோ லேசாய்க் கலங்கலாய்த் தெரிந்தன.

ஒரே ஒரு பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் சோனு. ” எதுக்காகவும் இந்த மலையிலிருந்து எறங்கத் தேவையிருக்காதுன்னு நினைச்சித் தான் ஏறி வந்தேன்” என்றாள். இது நீ கொடுத்த உயிரல்லவா போனால் உனக்காகப் போகட்டும் உன் கையால் என்னைக் கொல்லக் கூடச் செய்யேன். இதென்ன அதிகார வக்கிரம் என்னைக் காக்க யாருமே இல்லையா என்று மனசுக்குள் கதறினாள் சோனு. அவள் உதடுகள் இறுக்கமாய்க் கெட்டித்தாற் போல் தோன்றின. அதன் பிறகு அவள் யாரிடமும் பேசவில்லை.

“இந்தாருங்க ஏட்டய்யா. நான் ஒரு நாளைக்கி அஞ்சு தடவையாச்சும் என் பொண்டாட்டிட்ட பேசியாகணும். எதுனா கோக்குமாக்கு செய்தீங்கன்னு தெரிஞ்சா அப்பறம் ஊரு உலகத்தை எல்லாம் கூட்டிருவேன்” என்றான் கலங்கலான குரலில் வீரமாய்க் காட்டிக் கொண்டாலும் அது தழுதழுப்புத் தான்.

ஏட்டய்யாவுக்கு வண்டி கிளம்ப போகிறது என்றதே சந்தோசமாயிருந்தது. வேக வேகமாய் முன்னே நடந்து வந்து காரில் ஏசி முழங்க உறக்கத்திலிருந்த இன்ஸ்பெக்டர் பாரீஸ்வரனை உசுப்பினார். அய்யா அவங்க வந்திட்டாங்கய்யா என்றார்,. மற்ற நேரமென்றால் கெட்ட வார்த்தையால் ஏசியிருப்பார். இது காரியம் பழுக்கிற தருணம் என்பதால் தேனொழுக “நீங்க யாரு ஏட்டய்யா..அடுத்த மாசம் சப் இன்ஸ்பெக்டராத் தான் சம்பளம் வாங்கப் போரீங்க” என்றார். எத்தனை நாள் கனவு..? அனேகமாக பாரீஸ்வரனுக்கு ஒரு வருடம் தான் ஜூனியராக இருப்பார் குணா. எல்லாம் போச்சு. எல்லாம் அந்தக் கார்மேகம் என்கிற மிருகத்தால் வந்த வினை. கஸ்டடியில் இருந்து தப்பி ஓடி இன்றோடு ஐந்து வருடங்களாகிறது. எங்கே தேடியும் காணவில்லை. வழக்கென்றாலும் சாதாரண வழக்கில்லை. இருனூற்றைம்பது சவரன் நகை ஏகத்துக்குப் பணம் எல்லாவற்றுக்கும் மேலாக கோவிந்தபுரம் மிராசு நல்லப்பாண்டியின்  முகத்தில் பூச்சி விட்டுவிட்டுப் போனவன் கார்மேகம். நல்லப்பாண்டி  அதன் பிறகு தெருவில் இறங்கவே இல்லை. என்னிக்கு அந்தக் கார்மேகம் சாவுறானோ அப்பறம் தான் ஊருக்குள்ள ஒருத்தன் மூஞ்சிலயும் முழிப்பேன் என்று சூளுரைத்திருந்தார். அவருடைய குடும்பம் பெரிய செல்வாக்குப் பெற்றது. அத்தனை சொத்தையும் விற்றாவது கார்மேகத்தை அழிப்பேன் என்று உறங்காவிரதம் இருந்தார். அவர் தந்த பிரஷரால் தான் குணசீலன் ஏட்டய்யா சஸ்பெண்ட் ஆனார். பிறகு ப்ரமோஷன் ரத்தாகி பணியில் சேர்த்துக் கொள்ளப் பட்டவர் கார்மேகத்தைப் பிடிப்பதற்கான ஸ்பெஷல் டீமில் சேர்க்கப் பட்டார். மற்றவர்களுக்கெல்லாமும் அவர் தான் தொக்கம். ஞாயிறில்லை திங்களுமில்லை. ராப்பகல் ஏதுமில்லை. கிடைக்கட்டும் அவனை மென்னியில் முறித்தால் தான் நிம்மதி என்று மடக்கிய கரத்தை வலுப்போட்டுக் கொண்டு வருசக் கணக்காகக் காத்திருந்தார். இனிமேல் தான் அந்த முகூர்த்தம்.

அவர்கள் மலையிலிருந்து இறங்கியது ஒரு வெள்ளிக்கிழமை. மதுரையில் மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் புதிதாய்க் கட்டப்பட்டிருந்த ஓட்டலில் வசதியான லாட்ஜ் ரூமில் தங்க்வைக்கப் பட்டான் மனோகரன்.   கலர்டீவி-டாட்டாஸ்கை-ஏசி என மூன்று ரிமோட்டுக்கள் தவிர நாலாவது எதற்கு எனக் கேட்டான் சப்ளையர் அது அந்த ஸ்க்ரீனுக்கு என்றான் அதன் பட்டனை அழுத்தியதும் எதிர்ப்புற சுவரின் திரை மளமளவென்று விலகி எதிரே நகரம் விஸ்தாரமாய் ஒரு கோடி விளக்குகளோடு மின்னி மினுங்கிற்று. ‘ஹை இதை சோனுக்குட்டி எவ்ளோ ரசிப்பா’ என்று எண்ணியமட்டில் அவளது எண்ணுக்கு முயற்சித்தான். “அடிக்கொருக்கா கூப்டாத மனோ. நானே கூப்டுறேன்” என்றாள்

அன்றைக்கிரவு மிகவும் நெடியதாக இருந்தது மனோகரனுக்கு. கார்மேகம் பற்றி அவனிடம் நல்ல விதமாகத் தான் சொல்லியிருந்தாள் சோனு. முதலில் கார்மேகத்தின் அக்காள் மகள் சொர்ணம் தான் சோனு என்பதே அவனுக்குத் தெரியாது. மலையேறி வந்து தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்று அவள் முடிவு செய்ததற்கு அவளை ஒருவன் காதலித்து பிற்பாடு கைவிட்டது தான் காரணம் என்று சோனு சொல்லியிருந்தாள். அவளைச் சுற்றிப் பின்புலத்தில் கார்மேகம் என்றொரு தாய்மாமன் இருப்பதோ அவன் மீது டஜன் கணக்கில் வழக்குகள் உண்டென்பதோ அவனுக்குத் தெரிந்தது மிகச்சமீபத்தில் தான். மூத்த மாமா பட்டாளத்துல போரிடும் போது செத்துட்டாரு என்பாள். கார்மேகத்துக்கு இளையவர்கள் மூன்று பேர் வெவ்வேறு காரணங்களால் மரித்துப் போனதை வறண்ட உணர்வற்ற குரலில் அவள் சொல்லும் போது சரி வேற எதுனா பேசு என்று தான் சொல்லிக் கதையை மாற்றுவான் மனோகர். மலைவாசஸ்தலத்தில் வாழ்வது அவள் திட்டமிடாத செட்டில்மெண்ட் என்றாலும் சமதளத்தில் இருக்கிற பல தொந்தரவுகள் மலை மீது இராது என்றும் அவள் நம்பியது உண்மை தான். இப்படி நறுக்கென்று தேடி வந்து தூக்குவார்கள் என்று அவளல்ல யாருமே நினைத்திருக்க மாட்டார்கள் தானே

என்னமோ துர்சொப்பனம் கண்டு எழுந்து கொண்டான். ரிமோட்டை அழுத்தி திரையை நீக்கினான். சல்லென்று குளிர்காற்று மொத்தமாய் உள்ளே ஏறிற்று. கொசுவும் ஈயுமாய் நுழைந்தால் நுழைந்துவிட்டுப் போகிறது என்று எதோ ஒரு வீம்பில் அப்படியே இருளில் அமர்ந்துகொண்டு நகரத்தைப் பர்ர்த்தான். மீண்டும் ரிமோட்டை அழுத்தப் பார்த்தவன் எதோ உந்தித் தள்ள எழுந்து சுவர் விளிம்பிலிருந்து எட்டிப் பார்த்தான். சிக்னல் கிடைக்காமல் கீழ்த் தளத்தில் கிசுகிசுப்பான குரலில் யாரோ பேசிக்கொண்டிருந்தது துல்லியமாய்க் கேட்டது.

“கடத்தல்காரன் கார்மேகத்துக்குத் தான் ஸ்கெட்ச்சு. பல நாளா டிமிக்கி அடிச்சவன் தான். இந்தத் தடவை நிச்சயமா தப்ப முடியாது”  . இன்னும் தாழ்ந்த குரலில் “ப்ளானே வேற..அவன் அக்கா மகளையும் அவ புருஷனையும் செக்யூர் பண்ணிட்டம். அவளைப் பொறியாக்கி அவனைப் பிடிக்கிறது தான் திட்டம்”. எதிர்முனை எதோ பேச “ஆங்க் ஆங்க்” என்று கேட்டு விட்டு “அப்டித் தான்…மோர்ல மருந்து வச்சி அந்தப் பிள்ளை கையால தந்திர்றது. அப்பறம் பின்னாடி போயி அடிச்சி விட்டுற மாட்டம்..? இன்னம் அரை மணி நேரத்துல டீம் கெளம்புது. நாளை விடியிறப்ப க்ளீனா முடிஞ்சிருக்கும் எல்லாம்” என மொத்தத்தையும் கேட்டுக் கொண்டிருந்த மனோகரனுக்கு உள்ளெலாம் குளிர்ந்தது. “அய்யோ என் செல்லக்குட்டி தானே அந்த மோரைக் குடிச்சிட்டான்னா?. தாய்மாமனுக்குத் தன் கையால விஷம் தர்றதுக்குப் பதிலாத் தன்னோட உசுரை மாச்சுக்கத் தயங்க மாட்டாளே” அவனுக்கு உடனே ஓடிப்போய் சோனுவைக் கட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது. ரிமோட்டை அமுக்கி மீண்டும் திரையிட்டவன் இருளில் தடவியபடி தட்டுத் தடுமாறி பாத் ரூமுக்குள் சென்று கதவைச் சார்த்திக் கொண்டான். அழுதான். “என் செல்லக்குட்டி செல்லக்குட்டி” என்று அழுதவன் முகத்தைக் கழுவித் துடைத்துக் கொண்டான். படுக்கையில் சரிந்தபடி செல்போனை எடுத்து ஓரிரு முறை சோனுவின் எண்ணை முயற்சித்தான். மொளுக்கென்று கட்டானது. அந்த அறையிலேயே நெட்வொர்க் சரியாக இல்லை.

நெடு நேரம் விழித்துக்கொண்டே படுக்கையில் புரண்டிருந்தவன் எப்போதென்று அறியாமல் உறங்கினான். கனவில் சோனு வாயில் விஷம் வழிய அவனிடம் வருகிறாள். “இப்பிடிப் பண்ணிட்டியே. நா கெளம்புறேன்” என்று தலை ஒரு பக்கமாய்ச் சரிகிறது. சோனு சோனு என் சொர்ணமே என்று அவன் கதறல் குரலின்றி ஒலித்தது. மூடிய கண்களிலிருந்து நீர்வழிய எழுந்துகொண்டான். விடிந்திருந்தது.

பக்கத்தில் போர்வை மூடிப் படுத்திருப்பது யார்? விலக்கிப் பார்த்தான். சோனு.அவனுக்கு குப்பென்று வியர்த்து வழிந்து ஓருகணம் மூச்சே நின்று திரும்பியது. அவன் நின்றுகொண்டிருந்தது அடுத்த பிறப்பில் தான் என்று நம்பினான். அவளை உசுப்பலாம் என்று நினைத்தவன் எழுந்து மெல்ல பூனைப் பாதங்களால் வாசலை அடைந்து கதவைத் திறந்தான். வெளிச்சம் மொத்த அறையின் சித்திர இருளை ரத்து செய்ததில் சோனு கண் விழித்தாள் “குட்மார்னிங்” என்றாள்.

மீண்டும் கதவை மூடியவன் “எப்பல வந்த” என்றான். “நாலரை மணிக்கி” என்றவள் டீவி ரிமோட்டை எடுத்து ஆன் செய்தாள். பெருஞ்சப்தத்துடன் ந்யூஸ் சேனலில் தலைப்புச் செய்தியாக கடத்தல்காரன் கார்மேகத்தை சுற்றி வளைத்த போலீசாரைத் துப்பாக்கியால் சுட முயன்றான். போலீசார் திருப்பிச் சுட்டதில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தான். இரண்டு போலீஸார் காயங்களுடன் சிகிச்சை பெறுகின்றனர்” என்று வாசித்துக் கொண்டிருந்த ந்யூஸ் ரீடரின் குரலைத் தாண்டி இப்போது கண்கள் மூடியிருந்த கார்மேகத்தின் முகம் சற்றே நெருக்கமாய்க் காட்டப் பட்டது. டீவியையே வெறித்தவள் “என்னய மன்னிச்சிடு மாமா எனக்கு வேற வழி தெரியலை மாமா. எம்புருஷனைப் பிணையாக்கி வச்சிட்டிருந்தாங்க மாமா. அந்த மோர்ல என்ன கலந்திருந்திச்சின்னு எனக்குத் தெரியாது மாமா. உன்னைய ஆஸ்பத்திரிக்குத் தான் கூட்டிட்டுப் போறாங்க. உசுருக்கெல்லாம் ஒண்ணும் ஆகாதுன்னு அந்த ஏட்டய்யா என்னைய ஏமாத்திட்டாரு மாமா. என்னைய மன்னிச்சிரு மாமா” என்றபடியே கதறி அழுதாள். மனோகரன் எதுவும் சொல்லாமல் ரிமோட்டை எடுத்து வேறு சேனலுக்கு மாற்றினான்.சத்தத்தை அதிகரித்தான்.