மஞ்சுமெல் பாய்ஸ்
சிக்கலான சூழல்களைக் கண்டு மலைப்பதும் என்ன செய்வதென்றறியாமல் திகைப்பதும் பிற்பாடு மனவுறுதியோடு அந்தச் சூழலை வென்றெடுக்கிற கதைகள் எப்போதுமே பெருவெற்றியை அளிப்பவை. ஒரே திசையில் சென்றுகொண்டிருக்கையில் இப்படியான படமொன்று இந்தப் பக்கம் போப்பா என்று திசை மாற்றி விடுவதும் நடக்கும். மஞ்சுமெல் பாய்ஸ் அப்படியான படம்.
கதையின் களம் கொடைக்கானல் என்பதால் தென்னிந்தியாவின் அனேக மக்களும் எளிதாகக் கதையோடு தங்களைப் பொருத்திக் கொண்டு விட முடிகிறது.
அறம் உள்ளிட்ட உயிர்மீட்கும் சவால் திரைப்படங்களை எப்போதுமே மக்கள் கொண்டாடத் தான் செய்கின்றனர். மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் எந்த வகையிலும் இயல்பை மீறாமல் பார்த்துக் கொண்டது பெரும் ஆறுதல். பாட்டு என்று பெரிதாகப் படுத்தவில்லை. கதாநாயகி பாத்திரம் ஒன்றை வலுக்கட்டாயமாக நுழைத்து இருந்தால் இம்சித்திருக்கும். அதெல்லாம் இல்லாமல் கதை தன் போக்கில் சென்றோடி நிறைவது சுகசௌக்கியம்.
படத்தின் லீட் பாத்திரர் மற்றும் ஒன் பை த்ரீ தயாரிப்பாளரான ஷௌபின் ஷாஹிர் இயல்பான நடிகர். வெரைட்டி வேடங்களில் கலக்கி வருபவர். இந்தப் படத்தின் உயிர் மீட்கும் கயிறு போன்றது அவரது வெல்டன் நடிப்பு.
படம் தொடங்கும் போது குணா படத்தின் ஆடியோ சீடி வாங்குவது தொடங்கி படம் முடியும் ஒரு ஊசி நுனித் தருணத்தில் குணா படத்தின் கண்மணி அன்போடு பாடலை ஒலிக்க வைத்தது வரை இயக்குனரின் சாதுர்யங்கள் பலனளிக்கத் தவறவில்லை.
மற்றபடி குணா படத்தின் திரைக்கதை சாப்ஜானுக்கு சொந்தமானது. குருதிப்புனல் படத்தில் முக்கியமானதொரு கேரக்டரில் வருவார். அவருக்கு சீயான் விக்ரம் குரல் தந்திருப்பார். சாப்ஜான் மஞ்சுமேல் பாய்ஸில் ஒருவரா என்பது தெரியாது பக்ஷே ஆயாள் மலையாளியானு.
கதை இல்லாமல் படம் எடுக்கும் தந்திரமந்திரேந்திர உபாயங்களை எல்லாம் விட்டொழித்து விட்டு, தமிழிலும் நல்ல கதை கொண்ட படங்களை எடுக்க முயலலாம். ஒரு மாறுதலுக்காகவேனும்.