இவை புதிய தலைமுறை இதழில் வெளியானவை.
இதை வாசித்துக் காதலில் ஆழ்ந்து இன்புறுங்கள்.
காதலின் துன்பமே இவ்வுலகின் ஆகச்சிறந்த இன்பம்.
இசையும் காதலும் நிஜமற்ற பொய்கள்.
வாழ்க காதல்.
வாழ்தல் இனிது
1
ஒரு காதல் கடிதத்தை
எப்படித் தொடங்குவது
என்பது போலத் தான்
ஒரு காதலை
எப்படித் தொடங்குவது
என்பதும்.
எவ்வளவோ
இருந்தும்
எதுவோ
தடுக்கும்.
2.
உனக்கு
என்னைப்
பிடித்திருக்கிறது
என்று
சொல்லுவது தான்
அந்தஸ்தான காதல்.
அழகான காதலும்
3.
ஒவ்வொரு அவன்
ஒவ்வொரு அவள்
ஒவ்வொரு அவர்கள்
காதலத்தனையும்
தெரியுமாக்கும்
என்றது கடற்கரை
மணலாய்
மாறுவேடத்திலிருக்கும்
காதல்
4
காதலின் அகராதியில்
கடலென்பது
சற்றே பெரிய நதி.
காதலென்பது
பொங்குமாங்கடல்.
5.
மழையில்
கண்ணீரை
மறைத்தழிப்பது
சூட்சுமம்
அடுத்தமழை
உப்பாய்க் கரிக்கும்
சத்தியம்.
6
காதலென்பது
அதைவிடப்
பகுக்க
முடியாத
சின்னஞ்சிறிய
பேரன்பு.
7.
மதம்
பிடிக்கச் சொல்லி
யானையைத்
துரத்தும்
போக்கிரிநிழல்
காதல்
8
காதல்
யாரிடமும்
இருப்பதில்லை
எல்லோரிடமும்
இருந்துமிருக்கும்.
9.
அழிவது
என்பது
ஆவது
காதல்
10.
காதலென்பது
வெறும் உறை.
உள்ளேயிருக்கிற
சாக்லேட் வாள்
காமம்.
11
மறப்பது
என்பது
நினைத்துத்
தீர்ப்பது.
12
அப்படிப்பார்த்தது
தான்
முதல் நூறு காரணங்கள்.
அன்று பெய்த மழை
நூற்றியோராவது
13
வெளிச்சம்
உரி
இருளைத்
திற
`12
தீர்வது
தீரும்வரை
தீராதிரு
13
காதல் சவுக்கு
காமம் வழக்கு
14
நீர்ப்பரப்பில்
கால் நனைக்கையில்
கையிலகப்படுகிற
மீனின்
இரண்டுகண்களில்
ஒன்றெனக்
காதல்
15
அத்தனை ஆதுரமாய்த்
தலைவருடி
மயிர்கலைத்துப்
போகிற
அந்தக் காற்றையும்
நம்பாதே
16
எது மெய்யோ
அது பொய்
17
அத்தனை ரணம்
அத்தனை இதம்
18
ஏற்கனவே
நிகழும்
இனிமேல்
நிகழ்ந்தது
19
முழுவதும்
மற
முதலிலிருந்து
நினை
‘
20
செய்வதற்கு
வேறொன்றுமின்றி
வெறித்துக்
கொண்டிருப்பதன்
பெயரா
வாழ்தல்
21
உடல்
முழுக்க
மனசு
22
தேங்கத்
தான்
ஓட்டம்
23
சிட்டுக்குருவிதான்
அதன்
கண்கள்
மாத்திரம்
பாம்பினுடையது
24
உன்னை
ஞாபகம்
செய்கிற
ஒரேயொரு சொல்லில்
எஞ்சியது
உன்பிசகு.
25
தேன்
கூட்டைக்
கலைத்தது
காற்று
26
அவ்வளவு
தான்
என்றானபின்
தான்
அவ்வளவும்
27
காதலென்ப
பொத்திய கரங்களுக்குள்
குறுகுறுக்கிற
விழிகளின்
புருவாந்தரச் சரிதல்