இந்திரா ஸார்

 


இந்திரா ஸார்


பதினோரு மணி வாக்கில் தென்றல் அழைத்து டெல்லிகணேஷ் என்று தொடங்க தெரியும். ரொம்ப அப்ஸெட்டாயிட்டேன் என்று முடிப்பதற்குள் சப்தரிஷி பதிவைச் சொல்லி இந்திரா சௌந்தர்ராஜனின் மறைவைப் பற்றிச் சொன்னார் உடனே அந்தச் செய்தியை மனம் மறுத்தது. நான் சரிபார்த்துவிட்டுச் சொல்றேன் என்று அடுத்தடுத்து நண்பர்களை அழைக்கத் தொடங்க அந்தச் செய்தி உண்மை தான் என்று அறிந்து மனம் நொந்து போனது.

கண்ணாடிப் பேழைக்குள் கண்மூடித் துயில்கொண்டிருந்த இந்திரா சௌந்தர்ராஜன் ஸாரைப் பார்த்து மனம் உடைந்தேன். ஒரு பெரிய ஞானியை ஆதுரம் மிகுந்த மூத்த சகாவை இன்னும் பற்பல மதிப்புகளுக்குரிய மேதையை இத்தனை சீக்கிரத்தில் பறித்துக் கொள்வதெல்லாம் காலத்தின் ஒழுங்கீனம். பெருங்குற்றம்.

இந்திரா சௌந்தர்ராஜன் மூத்த எழுத்தாளர்- பிரபலஸ்தர்-திரையுலகத்திலும் மின்னுபவர் என்பதையெல்லாம் தாண்டிய வேறு பல விஷயங்கள் உண்டு. அவரது ஞானம். எந்த விஷயமானாலும் அதில் அவர் கொண்டிருக்கக் கூடிய தெளிவு. மனதார மற்றவர்களைப் பாராட்டுகிற அருங்குணம் கொண்டவர் இந்திரா சார். அவரோடு பழகியதில் நேரடி சந்திப்புகளைத் தாண்டி சமீப நாலைந்து வருடங்களில் அவருடன் செல்பேசியில் மணிக்கணக்கில் உரையாடியிருக்கிறேன். அந்த அழைப்புகளின் வழியாக எனக்குத் தெளிவித்த பலவும் என் வாழ்வின் ஒளித்தெறல்கள் என்றால் தகும். அவர் ஒரு அன்பும் கண்டிப்பும் கலந்த ஆசிரியர்.

எனது மிட்டாய் பசியை வாசித்து விட்டு நெடு நேரம் பேசினார். குமுதத்தில் கவிதை 2.0 குறுந்தொடரின் சில கவிதைளைப் பற்றி நெடிய சொற்களைத் தந்தார். சபாட்டினி என்ற சிறுகதையை வாசித்து விட்டு என்னிடம் பேசிய அந்த நெடிய அழைப்பில் பத்திரிகைகளுக்குக் கதை எழுதுவதைப் பற்றிய ஒரு சிறப்பு வகுப்பையே நிகழ்த்தினார். பல்கலைக் கழகங்களில் பாடப் படுத்த வேண்டிய தகுதி கொண்ட கருத்தாய்வு அது.

இந்திரா ஸார் குமுதத்தில் 102 வாரங்கள் ஒரு தொடர் எழுதினார். அதைக் குறித்து என் வழியாக அவருக்குத் தெரியவரும் வாசகர் கருத்துக்களை உன்னிப்பாகக் கேட்பார். எத்தனை எழுதிய பின்னரும் தன் எழுத்து குறித்த பொறுப்பேற்றலைக் கடைசி வரைக்கும் அவர் கைவிடவே இல்லை.

மனத்தில் பட்டதை நறுக்குத் தெறிக்கப் பேசி விடுவார். ஒளித்து மறைத்துப் பேசுவதெல்லாம் அவருக்கு ஆகாது. தெரியாது.

ஆன்மீக நாட்டமும் சொற்பொழிவாற்றும் திறனும் அவரிடம் மேலும் வியப்பை அதிகரித்துத் தந்தவை. பேச்சென்றால் பெருமழைப் பிரவாகம் தான். சேதுபதி பள்ளியில் ஒரு நிகழ்வில் அவர் ஆற்றிய தலைமை உரை அபாரமானது. நண்பர்களைப் பேணுவதில் அவரது நளினமும் நுட்பமும் அலாதியானது. திரைப் படங்களின் வழியாக இன்னும் பல சாகசங்களைச் செய்வதற்கான கனவுத்திறன் அவரிடம் ததும்பிக் கொண்டிருக்கும் போதே பாதி ஆட்டத்தில் கிளம்பிச் சென்று விட்டார். வாழ்வெல்லாம் எல்லாவற்றையும் முழுமையாகவும் பூர்த்தியாகவும் மட்டுமே செய்து வந்த ஒருவர் இப்படிப் பாதி ஆட்டத்தில் வாழ்க்கையை HALF SCOOT விட்டுவிட்டுக் கிளம்பியிருப்பது அராஜகம் . இது அநியாயம் ஸார்.

இறை நிழலில் ஓய்வெடுங்கள். அஞ்சலிகள்.