மூன்று கவிதைகள்
ஆத்மார்த்தி


1
வாங்கும் பொழுதில்
ஒரே நிறத்தில்
இருந்தது
நாள்பட
மெல்ல
நிறம் வெளுத்துத்
தொட்டிக் குழாமில்
தனித்துத் தெரிகிற
அந்த
மீனுக்குச்
சூட்டி
ஆறேழுமுறை
அழைத்தும் விட்டேன்
யார்க்கும்
சொல்லாத
உன்
பெயரை

2
நெடு நேரமாய்க்
கேட்டழுத
பண்டம்
கைக்கு வந்த
கணத்தில்
வேறு வழியின்றி
அழுகையை
நிறுத்த நேரிட்ட
குழந்தை
தன்னையறியாமல்
ஓங்கிக்
கேவுவதைப்
போலவொரு
நிசப்தம்
உன்
ஞாபகம்

3
எல்லாம்
சரியாகித்
தீர்ந்து
கொண்டிருக்கும்
பொழுதிலெல்லாம்
கண்ணைத்
திறக்கச் சொல்லிக்
கவிதையாலடித்துப்
போகிறது
உன் திசையிற்
கிளம்பிவரும்
நெஞ்சறமில்லாக்
காற்று