எனக்குள் எண்ணங்கள்.16.கிருஷ்ணன்

எனக்குள் எண்ணங்கள்
16 கிருஷ்ணன்


வீடு என்பது வெறும் கட்டிடமல்ல. அங்கே தான் ஒரு மனிதனின் சகலமும் உறைந்திருக்கிறது. பால்யத்தில் தொடங்கி முதுமை வரையிலுமான பயணங்கள் யாவிலும் வீடு என்பதற்கான முக்கியத்துவம் அளப்பரியது. இன்னும் சொல்வதானால் வீட்டைச் சுற்றியிருக்கும் நிலத்துக்குத் தானே ஊர் என்றும் நாடு என்றும் பெயர்..? வீடென்ப வாழ்வின் விழிகளன்றி வேறேது..?. நான் பிறந்த சம்மந்தமூர்த்தித் தெரு வீட்டினைக் குறித்த நினைவுகள் மிக மிகச் சொற்பமாகவே எனக்குள் தேங்குகின்றன. அடிக்கடி அந்தத் தெருவைத் தாண்டிச் செல்ல நேர்கையிலெல்லாமும் இது நான் பிறந்த தெரு என்று சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.
யாரும் உடன் வராமல் தனித்து பயணப்படுகையிலும் அந்தத் தெருவைத் தாண்டும் போது எழக் கூடிய மனவாசனை அலாதியானது. அந்த வீட்டுக்கு அடுத்தாற் போல் நாங்கள் குடிபெயர்ந்தது சிம்மக்கல் வீட்டுக்கு. கல்பனா என்ற பேரில் அப்போது ஒரு தியேட்டராக இருந்தது பிறகு அண்ணாமலை தியேட்டராகித் தற்போது இரண்டு திரைகளோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்தத் திரையரங்கத்தை ஒட்டினாற் போன்ற வீடொன்றில் தான் என் வாழ்வின் பல முதல் சம்பவங்கள் நிகழ்ந்தன.

பாட்டியின் செல்லப் பிள்ளை நான். அங்கே நாங்கள் இருந்த ஸ்டோர்ஸில் மாடி வீடு எங்களுடையது. சொற்ப வாடகை வித்யாசத்துக்காக மாடியானால் பரவாயில்லை என்று தேர்ந்தெடுத்ததாகப் பாட்டி சொல்லுவாள். ஒரு நாளைக்குப் பல முறைகள் அவள் தான் படிகளில் ஏறி ஏறி இறங்குபவள். குறுகிய உடலும் விசால மனமுமாய் அவளது மொத்த வாழ்வையுமே புன்னகையோடு எதிர்கொண்டாள். என்னை எப்போதும் தன் மனத்தில் சுமந்தவள் ராஜம்மா பாட்டி. ஆட்டுக் கல்லில் மாவரைப்பது அம்மியில் சட்னியரைப்பது தவிர எங்கள் வீட்டில் காப்பி கொட்டை மெஷின் ஒன்று இருந்தது. அன்றன்றைக்குத் தேவையான காப்பித் தூளைத் தயாரித்துக் கொள்வாள் பாட்டி. அதைத் தவிர எந்திரம் என்று ஒன்று உண்டு. அதில் தான் அரிசி மாவு தொடங்கிப் பலவித மாவு தயாரிப்பும் நடக்கும். அம்மா வேலைக்குச் சென்று வருவாளாகையால் மேற்கண்ட எந்தத் தயாரிப்பு பணிகளையும் மேற்கொள்ள மாட்டாள்.

பிற்காலத்தில் அம்மாவும் நன்றாக சமைத்தாள் என்றாலும் பாட்டி இருந்தவரையில் அவள் கையால் இட்டது தான் கஞ்சி. அத்தனை ருசிக்க ருசிக்க சமைத்தாள் அவள். சமையலைக் கலை என்றால் தகும் எனினும் அதையும் தாண்டிய சொல்லொன்றால் சொல்வதானால் அதை ஒரு படைத்தலாகவே மேற்கொண்டாள் பாட்டி. அன்றன்றைக்குக் கைவரப் பெற்ற பொருட்களை மட்டும் பயனுறுத்தி அத்தனை அசகாயங்களை சமைக்கிற வல்லமை போற்றத் தக்கது. பொருட் போதாமைகளை ஒரு பொருட்டாகவே கருதாமல் நளபாகத்தை மிஞ்சுமளவுக்குப் படைத்துக் காட்டியவள்.

ராஜம்மாவுக்கு சுந்தரம் என்றொரு மகனும் என் அம்மா மீனாட்சியுமாக இரண்டே குழந்தைகள். கட்டிய கணவன் சீக்கிரத்திலேயே கண்களை மூடிக் கொண்டார். பாட்டி தான் இருவரையும் வளர்த்தெடுத்தாள். உறவுக்காரப் பெண்மணியிடம் ஒரே மகனை தத்து என்று சொல்லித் தரா விட்டாலும் கையில் பிடித்துத் தந்தனுப்பியவள் தன் பெண்ணை மட்டும் தானே வளர்த்தாள். நாடு சுதந்திரமடையும் போது அம்மாவுக்கு ஏழு வயது. ஐம்பதுகளின் மத்தியில் தஞ்சையிலிருந்து சென்னைக்குப் பெயர்ந்து செல்வதெல்லாம் ஏட்டில் எழுதுகையில் வெறும் சொற்களைப் போல் தோன்றினாலும்  கனமிகுந்த கற்பாறைகளாய் வாழ்வில் நெருக்கியவை. “எதுவானாலும் நீ படி நான் இருக்கேன்” என்று அம்மாவை சென்னை அவ்வை ஹோமுக்கு படிக்க அனுப்பிவிட்டு மதுரையில் தெரிந்தவர்கள் வீட்டில் சமையல் வேலைக்கு வந்து சேர்ந்தாள் பாட்டி.

அவுட் ஹவுஸ் என்று ஆங்கிலத்தில் பெயரிட்டிருந்தாலும் அது ஓரறைக் குடியிருப்பு. அங்கே முடங்குவதற்குத் தான் இடம் தேறும். அந்த இடத்தில் ஏழு வருடங்கள் அம்மா படிப்பை நிறைத்துத் திரும்பும் வரை தன்னை இருத்திக் கொண்டவள் ராஜம்மா. காது சரிவரக் கேளாது என்பது கூடுதல் சுமை.”என்ன ஆனாலும் நீ படி” என்ற வார்த்தையைத் தன் மனத்தின் ஆழத்தில் பதித்துக் கொண்ட அம்மா ஒருவழியாய்ப் படிப்பை முடித்து விட்டுத் திரும்பியதும் மறுபடி தஞ்சைக்குச் செல்லவேண்டாம் மதுரையே இனி, நமக்கும் என்று அம்மாவிடம் உறுதி படச் சொன்னவள் ராஜம்மா.

தலையை மழுங்க மழித்துவிட்டு காவிக்கும் மரவண்ணத்துக்கும் இடையிலான ஒரு நிறத்தில் தலையோடு முக்காடிட்டு இருப்பாள். முதுமை காலங்களில் மிகவும் வற்புறுத்தி குளிர் மிரட்டும் போது ஸ்வெட்டர் அணிய பணித்தோம் மற்றபடி சாதாரணமாக போர்வை தரை விரிப்பு தலையணை  என எதையும் பயன்படுத்த மாட்டார் வெறும் தரையில் தலைக்கு வைத்துக் கொள்ள ஒரு சிறிய மரப்பலகை இருக்கும். பிள்ளையார் சதுர்த்தி,சரஸ்வதி பூஜை வரலட்சுமி விரதம் போன்ற பண்டிகை காலங்களில் எல்லாம் அந்தப் பலகைக்கு மாக்கோலம் இட்டு அதன் மீது கடவுளரை அமர்த்துவோம். அப்படியான காலகட்டத்தில் தன் கையை குறுக்கி அதையே தலையணை ஆக்கி படுத்துக் கொள்வாள். திருநகர் வீட்டுக்கு சென்ற பிறகுதான் அவளுக்கு முதன்முதலாக உறங்குவதற்கு ஒரு கட்டில் கிடைத்தது. அதிலும் கூட தன் ஒரு புடவையை விரித்து கொண்டாளே ஒழிய போர்வையை தொடவில்லை. ஒரு விதமான துறத்தலை எப்போதும் கடைப்பிடித்துக் கொண்டிருந்தாள். போகத்தில் அடங்கக்கூடிய எதையும் விரும்பாமல் தவிர்த்து கொண்டே வந்தவள். உணவு கூட ஒரு கையளவு மட்டுமே சாப்பிடுவாள். அதைத் தாண்டி எப்போதும் எதையுமே பிரியப்பட்டு நாங்கள் பார்த்ததில்லை. எதைச் செய்தாலும் அத்தனை ருசியாக செய்பவள் அடுத்தவர்களுக்கு கொடுத்து
அதில் மகிழ்ந்தாளே ஒழிய எதையும் அவள் விரும்பவில்லை.

மிகச்சிறிய ஈயத்தினால் ஆன ஒரு பெட்டியை வைத்திருந்தாள். அவளது கணக்கு வழக்குகள் காசு பணங்கள் எல்லாமும் அதில் தான் இருக்கும். அந்த ஈயப் பெட்டிக்குள் அரும்பாடு பட்டு அவள் சேர்த்து வைத்து மிகக் கவனமாக செலவு செய்து எங்கள் குடும்பத்தை கட்டினாள். அம்மா தன் சம்பளத்தில் ஐந்து ரூபாய் பணத்தை சற்று கூடுதலாக ஏதாவது செலவு செய்து விட்டாள் என்றால் ஒரு கடும் சொல்லை கூட பயன்படுத்தாமல் அதே நேரத்தில் மிக உறுதியாக தன் மொழியை பயன்படுத்தி இன்னொரு முறை இன்னொரு ஐந்து ரூபாயை அவளை கேளாமல் தொடவே கூடாது என்கிற வைராக்கியத்தை அம்மாவின் மனசுக்குள் ஏற்படுத்தும் அளவுக்கு கண்டிப்பானவள். இதெல்லாம் நடக்கும் பொழுது அம்மாவுக்கு 50 வயது என்பது தான் சுவாரஸ்யம் எத்தனை வயதானாலும் என்ன? ராஜி வளர்த்தெடுத்த பிள்ளை தான் என் அம்மா. இந்த இரண்டு பெண்கள் இல்லாமல் நானும் என் அக்காளும் இல்லவே இல்லை.

காளிங்க நர்த்தனம் ஆடும் ஒரு சின்ன சிறிய கிருஷ்ணன் சிலை அவளுடைய இஷ்ட தெய்வம். எங்கள் வீட்டுக்கு அனேகமாக என் அம்மா படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு சேர்ந்த 1960 ஆம் வருடம் அந்த கிருஷ்ணன் வந்திருப்பான் என நினைக்கிறேன். இன்றும் அவன் தான் எங்கள் வீட்டின் பாலகன். அந்த கிருஷ்ணனைத் தான் தன் மகனாகவே மனமெல்லாம் நிறைத்து வைத்திருந்தாள் ராஜம்மா பாட்டி. “பேசும் தெய்வம்” என்பாள் என்ன நடந்தாலும் அவனிடம் ஒப்பிப்பாள். சமயத்தில் அந்த கிருஷ்ணன் அவளோடு பேசிக் கொண்டிருப்பதாக கூட நாங்கள் கேலி செய்வோம்.

கிருஷ்ண வழிபாட்டை வாழ்வின் கடின காலம் எங்கும் மிக இறுக்கமாக பற்றி கொண்டவள் பாட்டி கணவனை இழந்து ஒரே மகன் எந்த பரிவும் காட்டாமல் வெகு தூரத்தில் நிலைத்து விட்ட பிற்பாடு தானும் தனது ஒரு பெண்ணும் ஆக வந்து சேர்ந்த மதுரை என்னும் ஊரில் சரிவர காது கேளாத ஒருத்தி ஒரு குடித்தனத்தை ஆரம்பித்து நிலை நிறுத்தி தன் பிள்ளைக்கு திருமணம் செய்து எங்கள் தாய் தந்தையருக்கு நானும் எனது அக்காளும் பிறந்த பிறகு மெல்ல மெல்ல கடினங்கள் மாறி இருந்ததில் ஒரு கட்டத்தில் எல்லா சிரமமும் தீரும் என்பதை ஆருடம் ஆக அல்ல ஒரு நம்பிக்கையாகவே எங்களுக்கு விதைத்து தந்தவள் ராஜி பாட்டி. அவளது இன்மை எங்களுக்கு மெல்ல பழக்கமான தருணம் ஒன்றில் அந்த கிருஷ்ணனோடு ராஜி பாட்டி இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறாள் என்று எங்களுக்கு தோன்றியது இந்த முறை அதை நாங்கள் கேலியாக உணரவில்லை. எல்லாவற்றையும் நிரூபித்துக் கொண்டிருக்க தேவையில்லை. உணர்தல் என்பது ஆயிரம் நிரூபணங்களுக்கு  அப்பாற்பட்டது.

கங்கைக் கரைத் தோட்டம் பாடலின் இறுதி வரிகள் எப்போதும் ஈர்த்தொலிப்பவை.

கண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ
காற்றில் மறைவேனோ
நாடி வரும் கண்ணன், கோல மணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன்.

தன் எழுபத்தி எட்டு வயது வரை எங்களுக்காகவே இருந்தவள் 1992 ஆமாண்டு நினைக்கவியலாத ஒரு தினத்தைத் தன் நினைவு தினமாக்கிய படி கண்ணன் மடியிலொரு குழந்தையாய்த் தவழத் தன் அடுத்த பிறப்பை நோக்கிச் சென்றுவிட்டாள் ராஜம்மா. அதைத் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் என்னை-எங்களை விட்டுப் பிரிய மனமற்றவள் என்பதால் அந்த ஒரே ஒரு காரண நியாயத்தைத் தான் எங்களுக்குச் சொல்லிக் கொண்டோம்.

பெற்ற மகனை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் அருகில் இருந்து பார்க்காததாலோ என்னவோ பேரப்பயல் என் மீது இந்த உலகின் ஆகச் சிறந்த பிரியம் ஒன்றை எப்போதும் வைத்திருந்தாள் ராஜம்மா. என்னை யாராவது ஏதேனும் சொல்லிவிட்டால் அவ்வளவுதான் ருத்ர தாண்டவம் ஆடி விடுவாள். நெடு நாட்களுக்கு பிறகு தான் என்னைப் பெற்ற அம்மா பெயர் மீனாட்சி என்பதே எனக்கு உரைத்தது. என்னை தன் உலகமாகவே நிறைத்துக் கொண்டு என் உலகமெல்லாம் நிறைந்திருந்தாள் ராஜம்மா.

சிம்மக்கல் வீட்டில் கதவை வெறுமனை சாத்திவிட்டு வாசலை தாண்டியதும் இருக்கும் ஒரு சிறு பங்க் கடை அங்கே சென்று ஓம வாட்டர் அதுவும் எனக்காக தான் வாங்கி விட்டு திரும்பிடலாம் என்கிற எண்ணத்தில் கிளம்பி சென்றாள். ஒன்றரை வயது இருக்கும் எனக்கு. ஓரிரு சொற்களை மட்டுமே பேசத் தெரியும் குழந்தையாம் நான். மிகவும் தாழக்கட்டிய தூளியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தை கண் விழிப்பதற்குள் வந்துவிடலாம் என்று தான் சென்றிருக்கிறாள். அவள் வருவதற்குள் உறக்கம் கலைந்த குழந்தை யார் கவனத்தை ஈர்ப்பது என தெரியாமல் தூளியிலிருந்து வெளிவந்து உருண்டு காற்றுக்கு லேசாய் திறந்த கதவு இடுக்கு வழியாக வெளியேறி 21 படிகளை உருண்டு புரண்டு தரையில் விழுந்து அழுது கொண்டிருக்கும் போது தான் திரும்புகிறாள்.

உடலில் ஒரு சிராய்ப்பு கூட இல்லை சின்னதொரு அடியும் படவில்லை உருண்ட காரணத்தினால் பயத்தில் வீறிட்டுக் கொண்டிருக்கும் குழந்தையை எடுத்து உடலெல்லாம் முத்தி கண் கசிந்து தன்னோடு அணைத்துக் கொண்டு அம்மா வரும் வரை குழந்தையை தரையில் கூட விடாமல் ஏந்தியபடி காத்திருந்தாள். நடந்ததைச் சொல்லி அம்மாவிடம் கண்கலங்கி மன்னிப்பு கோரி இருக்கிறாள். “ஒண்ணும் ஆகல அப்புறம் ஏன் அழுற சும்மா விடு” என்றெல்லாம் அம்மா அவளுக்கு ஆறுதல் சொன்ன பிற்பாடும் அழுது கொண்டே இருந்தவள் அதன் பிறகு எங்கே சென்றாலும் என்னையும் தூக்கிக் கொண்டு தான் செல்வாளாம். அத்தனை படிகளில் உருண்டு தரையில் விழுந்தாலும் சிறு அடி கூடப் படவில்லை என்பதை எல்லோரும் அதிசயித்த போது “அந்தக் கிருஷ்ணன் தான் குழந்தையைப் பூ மாதிரி தாங்கியிருப்பான்” என்று பதில் சொன்னாள் ராஜம்மா.

அது அவளது நம்பிக்கை.
அவன் அவளது கிருஷ்ணன்.
அப்படித் தான் தாங்குவான்.
இல்லாவிட்டால் அவள் சும்மாவிடுவாளா என்ன..?
அந்தப் பயம் அவனுக்கும் இருக்கும் தானே..?

*