நுரை குமிழிகளுக்குள் மலையளவு உப்பு
கவிஞர் ரத்னா வெங்கட்டின் மெல்லச்சிதறு எனும் கவிதை நூலுக்கான அணிந்துரை
கவிதைக்கான முகாந்திரம் என்ன..? ஆன்மாவின் அடியிலிருந்து எழும் குரல் தான் கவிதை எழுதியே தீர் என்று கட்டளையிடுகிறதா..? எப்படி எழுதப்பட்டதென்று தனக்கே தெரியவில்லை என்று வரைந்த ஓவியத்தை விலகி நின்று வேடிக்கை பார்த்து வியக்கும் ஓவியனின் விஸ்தாரத் தீற்றல் போன்றதா கவிதை..? குழந்தமை காலப் புகைப்படங்களை அடுக்கி வைத்துக் கொண்டு இது நானா, இதுவும் நானா, இது கூட நான் தானா என்று அயர்ந்தயர்ந்து சரிகிற ஒரு கணத்தில் உள்ளே எதோவொரு இருளடியில் சடசடவென்று மூங்கில்கள் சரிந்து முறிவுற்றாற் போலொரு சப்தம் தோன்றுகிறதே…? காலதாமதமாய் முறிபட்டது மேலதிக வில்லேதுமாக இருக்கக் கூடுமோ?
என்னளவில் கவிதை என்பது குறளி. விக்ரமாதித்யனைத் தன் தோளில் தொங்கச் செய்தபடி இலகுவாகப் பறந்து திரிகிற மாற்று வேதாளம். கடவுளின் அறியாமை. எதொவொரு வருங்காலத்தின் பாவ-முற்பிறவியாகக் கூடக் கவிதை எழுதுகிற கவிதையை சதா சர்வ காலமும் நாடுகிற மனங்களுக்கு விதிக்கப் பட்டிருக்கலாம். ஒன்று மட்டும் நிச்சயம். கவிதை என்பது பிசகு. எந்த நேர் விஷயங்களின் பேரேட்டிலும் கவிதைக்கு இடமே இல்லை. கவிதையை நம்புவோர்க்கும் தான்.
கவிதை என்பது ஒருவிதமான பிரார்த்தனை முறை எனச் சொல்லத் தோன்றுகிறது. தெய்வத்தின் முன் நின்றுகொண்டு கண்மூடிப் பிரார்த்திக்கிற வினோதம். தெய்வமும் இறங்கி வந்து தன் கண்களை மூடி வரிசைக் கடைசியில் நின்று கொள்ள ஏங்குகிற ரசவசீகரம். கவிதை காலகாலத்துக்கும் இருந்து கொண்டே இருக்கப் போவதான தூய விஷம். சுயத்தை அறுத்துப் பிறருக்குப் பகிர்பாகம் தருவதான தானமனம். மேற்சொன்ன யாவற்றையும் ஏற்றும் மறுதலித்தும் விளையாடியபடி வனமூடாடுகிற பித்து மிருகம். புரிந்தவரைக்கும் நல்லூழ்.
ரத்னா வெங்கட்டின் கவிதைகள் பூச்சற்றுக் கிளம்பித் திரும்புகிற விடுமுறை காலக் குழந்தை முகமாய்ப் பளீரிடுகின்றன. தனித்த மொழியைத் தேடி அலைகிற முனைப்போ வசியக் கலயத்தின் பலவர்ண மைகுழைத்துப் பூசி அடுக்குகிற சொற்தேட்டமோ கொஞ்சமும் இல்லாத இயல்பின் சொற்கள் கவிதைப்படுகின்றன. முகத்துக்கு நேராய் நோக்கியபடி கண்களில் லயித்துப் பேச விழைகிற யதார்த்தம் மொழியினூடாகப் பெருக்கெடுக்கின்றன. பொருட்படுத்தத் தகுந்த கவிதைகள் பலவற்றை ரத்னா தரவிழைகிறார்.
சூழல் எனும் ஒரு கவிதை இப்படி விரிகிறது
சிறு தழல் தான்
கடவுளின் வீட்டுக்குள்
சுடர்கிறது
மேய்ப்பனை விட்டு விலக
அடர் பொறியாய்
கூரை எரிகிறது
பொந்துக்குள் பூட்டி வைக்க
வனத்தை மேடாக்குகிறது
கடவுளின் வீட்டுக்குள் சுடர்கிற தழலைத் தேடிக் கொண்டு அலைவது சுகமான செயல்பாடு தான் இல்லையா..?
அநாயாசம் என்று ஒரு கவிதை இந்தத் தொகுதியில் எனக்கு மிகவும் பிடித்தமான கவிதையாக இதையே சொல்வேன்.
பெரு நிலங்கள்
விழுங்கி செமிக்காது
உமிழும்
நுரை குமிழிகளுக்குள்
மலையளவு உப்பை
இட்டு வைத்திருக்கிறது கடல்
ஆழியினடி குடைந்து மலைகளை பெயர்த்து
நுணுக்கி
சொட்டு திவலைக்குள்
உருள விடுகிறது விழிகள்
ரத்னாவின் மொழி சிக்கலில்லாத ஒருமையோடு விரிந்து செல்கிறது. நுரை குமிழிகளுக்குள் மலையளவு உப்புத் தேடிக் காற்று விட்டுக் காற்று அலைந்து திரிவது தான் சிலாக்கியம். வாசிப்பவனுக்குள் உப்புக்காற்று ஓங்கியடிக்கிறது.
வலியத் திணிக்கையில் இசை கேடாகும். தானாய் மலர்கிற பேரற்ற காட்டுப் பூவைப் போலவே இசைத் தன்மை கலந்து வருவது கவிதையின் பலம். ரத்னாவின் பல கவிதைகளில் இந்தச் சந்த விளையாடலைக் கண்டுகொள்ள முடிகிறது. சட்டுச் சட்டென்று காட்சிகளைப் புதுப்பித்துக் கொண்டே விரைந்தோடுகிற மொழி ரயில்களாய்ப் பல கவிதைகள் ரசிக்க வைக்கின்றன. மொழியைச் சரணடைகிற யாவர்க்குமான கலயம் தான் கவிதை. அட்சயம் நிச்சயமா என்பதைக் காட்டிலும் அன்னம் கிட்டுவது சத்தியம் என்பது தான் கண்டடைய வேண்டிய கூற்று.
எது நடுவில்
ஊர்கிறதென
தெளிவாகிற வரையில்
தாண்டவும்
எடுத்து எறிவதுமான
குழப்பம்
ஆயுள் பரியந்தம்
இந்தக் கவிதையின் ஈற்றுச் சொல்லான பரியந்தம் எனும் சொல்லை எடுத்து விட்டு வேறேதாவது சரியாக இருக்குமா என்று தேடிப் பார்த்தேன். ஆயிரம் சொற்களை சலித்து மறுதலித்தபடி தான் மட்டுமே சரியாக்கும் என்று மீண்டும் மீண்டும் ஒலித்தோங்குகிறது ஒற்றைச் சொல். ஒப்புமில்லை மாற்றுமில்லை என்று ஒளிரும் போது தன்னைக் கூடுதலாக்கிக் கொண்டே தப்பிச் செல்கிறது கவிதை எனும் உயிரி.
விழி வழி என்று ஒரு கவிதை
அந்நிய முகங்கள்
புரியாத மொழி
வழக்கமற்ற சாலைகள்
தொடர்பிழந்த அலைபேசி
நடக்கையில்
மறைக்கும் நீர் திரையை
உறிஞ்சுகிற காற்றறியும்
உன் நினைவின் கனதி
இந்தக் கவிதையில் வருகிற கனதி எனும் சொல்லைப் பற்றிக் கொண்டு நெடு நேரம் அமர்ந்திருந்தேன். இந்தச் சொல்லின் ஒரு பிரதியை எனக்குள் சேமித்துக் கொள்வேன். எப்போதேனும் எடுத்தாள்வதன் மூலம் ரத்னாவின் சொல்லொன்றை என்னுடைய சொல்லாகவும் ஆக்கிக் கொள்ள முடியுமல்லவா..?
மானுட வாழ்வெங்கும் சொற்களின் செல்வாக்கு அபரிமிதமானது. எல்லாச் சொற்களையும் எளிதாக எடுத்தாள்வதற்கில்லை. சில சொற்கள் தன் அர்த்தவிஸ்தாரங்களை நிகழ்த்தியடி தானும் நிகழ்கின்றன. அப்படியான சொற்களைத் தேடித் தேடி மாலை கோர்க்கும் வழிபடு மனம் ரத்னாவுக்கு வாய்த்திருக்கிறது. தானும் தன் மனமுமாய் அவரது கவிதைகள் மனதுள் மொழிதல்களாகவே பெருகிச் செல்கின்றன. கண்ணனைக் குழந்தையாகக் காணும் பாக்கியம் பெற்றவர்களுக்குக் கடவுளாகித் தருவதற்கென்று அவனிடத்தில் வேறேதும் பெரிதாய் விஞ்சியிருக்குமா தெரியவில்லை. கவிதையும் ஒருவகையான கடவுளாட்டம் தான் இல்லையா?. குன்றாத ஆரவாரத்தையும் சலனமற்ற ஆழமைதியையும் ஒருங்கே தருகிற பெருவரமாகக் கவிதையின் கரங்கள் அமைவது கொடுப்பினை. ரத்னா வெங்கட் தனது கவிதைகளின் வழியாக மொழியின் சகல சாத்தியக்கூறுகளையும் கண்டடைவதற்காக அளவற்ற வாழ்த்துகளைத் தெரியப்படுத்துகிறேன்.
வாழ்தல் இனிது.