மகிழ மரத்தடி
கதிருக்குத் தலை விண் விண்ணென்று தெறித்தது. அந்தத் தெரு பெரிய ஜன சந்தடியோ போக்குவரத்தோ இல்லாத துணை வீதி போலத் தான் வெறுமை வழியக் கிடந்தது. கதிருக்கு நடந்தது என்ன எனப் புரிவதற்குள் உடம்பெல்லாம் ரத்தம் கொதிக்கத் தொடங்கியது. தான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வண்டியைத் தூக்கிக் கொண்டு சென்றதைத் தாங்க முடியாமல் அல்லாடினான்.
நீ கெளம்பு நா இந்த வண்டி மேட்டரைப் பார்த்துட்டு வந்துர்றேன் என்று சிந்தாமணியின் முகத்தை ஏறிடாமல் சொன்னான். அவனுக்கு ஆத்திரமாய் வந்தது. சிந்தாமணி அதையும் சிரிப்புடனே அணுகினாள். ‘எங்க போகப் போறம்…சீக்கிறமே எல்லாம் சரியாய்டும்’ என்று காதோடு கிசுகிசுத்தவள் மிக நீளமான ஒரு முத்தத்தை முயற்சித்து அதைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு இவன் நெற்றியைக் கலைத்து மீண்டும் சிரித்தாள்.
சிந்தாமணியுடன் நடந்து தெரு முனையில் ஆளுக்கொரு ஆட்டோ பிடித்தார்கள். கதிருக்கு எங்கே செல்வது எனக் குழ்பபமாக இருந்தது.
திருப்பதியில் தான் தங்குகிற கெஸ்ட் அவுஸ் போன் நம்பரை எதற்கும் இருக்கட்டும் என எழுதித் தந்திருந்த வெங்கடேசனை வாழ்த்தியபடி அந்த நம்பருக்கு பூத்தில் இருந்து தொடர்பு கொண்டான் செல்வா. யாரோ எடுத்து ‘கோயிலுக்கு போய் இருக்காரு போல வந்ததும் சொல்றேன்’ என்று வைத்தார்கள். இவன் எப்ப வரது என கடுப்பானான் செல்வம். அரை மணி நேரத்தில் மீண்டும் அதே நம்பருக்கு முயற்சித்தான். இந்த முறை எடுத்தது வெங்கடேசன் தான். வண்டியைத் திருடி விட்டார்கள் என்று தான் செல்வா நினைத்தான். வெங்கடேசனின் வண்டி ட்யூ சிஸ்டத்தில் கடன் வாங்கி அதைத் திரும்பச் செலுத்தாமல் விற்கப் பட்ட விவரம் தெரிய வந்த போது சற்றே அமைதியானான்.
வெங்கடேசனின் குரல் தெளிவாக ஒலித்தது.
“ வண்டியை நா செகண்ட்ஸ் ல வாங்குனேன் மச்சான். எனக்கு முத்தரசு அப்டின்னு ஒருத்தன் தான் வண்டியை வித்தான். எந்த கடனும் இல்லைன்னு தான் சொன்னான். இதென்னவோ தெரியலை. நீ ஒண்ணு பண்ணு நேரா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயி சுந்தர்ராஜ்னு ஏட்டு இருப்பாப்ள என் ஒய்ஃபோட தாய்மாமா. நா பேசிர்றேன். அவரைப் பார்த்தா வண்டியை திரும்ப வாங்க எல்ப் பண்ணுவாப்ல. எனக்காக உதவி பண்ணு நண்பா…நா நாளை சென்று தான் திரும்புறேன். அதுக்குள்ள வண்டியை எதுனா பண்ணிட்டா ஆபத்து. ப்ளீஸ்” என்று பாதி கண்ணீரும் மீதி கட்டளையுமாகத் தொனித்தான்.
செல்வா மந்தையில் இறங்கி ஸ்டேஷனை நோக்கி நடந்தான். முதுகில் யாரோ உற்று நோக்குவதைப் போல் தோன்றவே சட்டென்று திரும்பிப் பார்க்க வைத்தி பெரிய சிரிப்போடு “என்ன செல்வா ஸ்டேஷனுக்கா” என்றான்.
என்னவோ வைத்தியைப் பார்த்ததும் ஆறுதலாக தோன்றியது செல்வாவுக்கு. ‘இருட்டிட்டு வருது இன்னிக்கு நிச்சயம் மழை வரும்’ என்றான் வைத்தி. பேசிக் கொண்டே கச்சேரிக்குள் நுழைந்தார்கள்.
வெங்கடேசனின் உறவினர் சுந்தர்ராஜ் பெரிய திருநீறு குங்குமம் தரித்து கால்களில் செருப்பின்றி ‘வாங்க வெங்கட்டு சொன்னப்ல’ என்று செல்வா தந்த ஜெராக்ஸ்களை வாங்கிக் கொண்டார். உள்ளே ரூமுக்குள் சென்று திரும்பியவர் “சேவற்கொடியோன் ஆட்டோ கன்சல்டன்சின்னு மேற்படி பேங்குக்கு சீசிங் ஏஜன்சி அதுலேருந்து வந்தவங்க தான் வண்டியைத் தூக்கிருக்கானுங்க. கணக்கு வழக்கை செட்டில் பண்ணிட்டு வண்டியை வாங்கிரலாம்” என்று வெங்கடேசனிடம் போனில் தெரிவித்தார். பதிலுக்கு அவன் சொன்னதை அ…அ..ஆ..ஆ…என்று பொறுமையாகக் கேட்டு விட்டு சரி அப்ப நேர்ல போயி பேசுனாத் தான் சரியா வரும் என்று வைத்தார்.
செல்வாவுக்கு ஏனோ அந்த விஷயத்தைப் பாதியில் விட சம்மதமில்லை. அவன் உள்ளெ ஆழத்தில் யாரோ அமர்ந்து கொண்டு அவனது வாழ்வின் இடவலங்களை எப்போதும் தீர்மானிப்பது வழக்கம். இப்போதைய கட்டளை இதை விடாத செல்வா என்றது.
” ஸார்…நாங்களும் வர்றம்” என்றவனை எந்த வியப்புமின்றிப் பார்த்த சுந்தர்ராஜ் “சரி எதுத்தாப்ல சிக்கந்தர் பாய் டீக்கடைல வெயிட் பண்ணுங்க நா போயி அய்யா கிட்ட அனுமதி வாங்கிட்டு வந்துர்றேன்” என்று உள்ளே சென்றார்.
****
குணாளன் ஏட்டய்யாவும் பவுன்ராஜூம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த செல்வா வேறு பக்கம் பார்த்தான். முதன் முதலில் பவுன்ராஜைக் காண்பித்து ‘இதான் எங்கக்கா புருசன்’ என்று சிந்தாமணி சொல்லும் போதே அவனது லீலைகளையும் சேர்த்தே சொல்லியிருந்தாள். உயரம் குறைவான ஒருவன் கஞ்சா வியாபாரி தனக்கு சகலையாக வருகிறான் என்பதன் சாதக பாதகங்களைப் பற்றி எல்லாம் செல்வா அன்றைக்கே யோசித்து விட்டான். அதன் பிற்பாடு பவுனை எங்கே பார்க்க நேர்ந்தாலும் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து விடுவதை வாடிக்கையாக்கிக் கொண்டான்.
மகிழ மரத்தடியில் அந்த டீக்கடை கச்சேரிக்கு வருபவர்களால் என்னேரமும் களை கட்டியபடியே இருந்தது. காலையில் தொடங்கி மதியம் வரைக்கும் ஓட்டலாகவும் செயல்படும். சிக்கந்தர் பாய் சாயங்காலம் புரோட்டா அடித்துப் பார்த்தார் ஓட்டம் சொல்லிக் கொள்கிறாற் போல் இல்லை என்றதும் கைவிட்டார். இன்னமும் அவ்வப்போது “பாய் நாலு புரொட்டா பார்ஸல்” என்று கேட்கத் தான் செய்கிறார்கள். அரும்பூரில் இருக்கும் அவரது மூத்த மகள் சாயிராவின் கணவனுக்கு எம்.எஸ் மில்லில் வேலை பர்மனண்டு என்று கட்டிக் கொடுத்தார். மில்லின் நிலைமை இப்போது சரியாக இல்லை. அரும்பூரில் இருந்து அவர்கள் குடும்பத்தைப் பெயர்த்துக் கொண்டு வந்து விடலாமா என்று அவ்வப்போது யோசிக்கிறார். சாயிராவின் கணவன் அயூப் ரொம்ப நல்ல பய்யன். கல்லாவைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்வான். அவன் வந்ததும் மறுபடி இரவுக்கடையைத் தொடங்கி விட வேண்டியது தான்.
எங்கிருந்தோ வந்த மழை எடுத்து எடுப்பிலேயே ஓங்கி அடிக்க ஆரம்பித்தது சடசடவென்று ஆங்காங்கே நின்று கொண்டிருந்த எல்லோரும் டீக்கடைக்குள் நுழைந்து நிற்க ஆரம்பித்தார்கள். எதிர்பாராத கூட்டம் உள்ளே நுழைந்து இருக்கிறது எல்லோரும் எதையாவது வாங்குவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது சும்மா நிற்பவர்களை பொறுத்துக் கொண்டு பொருள் கேட்பவர்களுக்கு தேவையானவற்றைத் தந்து கொஞ்ச நேரம் சிக்கந்தர் பாய்க்கு வேலை கடுமை தான் என்பது புரிந்தது.
கிடைத்த நாற்காலிகளில் பவுன்ராஜும் குணாளன் ஏட்டையாகும் அமர எதிர் பக்கம் செல்வாவும் உட்கார முடிந்தது வைத்தி பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். குணாளன் செல்வாவை பார்த்து சினேக பாவமாய் புன்னகைத்தார். மீண்டும் விட்ட இடத்தில் இருந்து பவுன்ராஜும் அவரும் பேச தொடங்கினார்கள்.
“அதான் பவுன்ராஜ், இப்ப நிலவரம் என்னன்னா ஜேம்ஸ் தூக்கு போட்டு செத்துட்டான், பகவதிக்கு முத்துன காச நோய் இன்னைக்கோ நாளைக்கோன்னு இழுத்துட்டு இருக்கான். பாக்கி இருக்கிறது மூணே பேரு இருதயம் தான் மெயின். பழனிச்சாமியும் நாராயணனும் சேர்த்து மூணு பேரையும் தூக்குல தொங்காம ஓய மாட்டார் எம்எஸ் முதலாளி. குரலை தாழ்த்திக் கொண்டு பகவதிக்கு சோத்துல எதையோ கலந்து கொடுத்தது அவருடைய ஏற்பாடு தான் பேசிக்கிடுறாங்க எல்லாம் வெள்ளையப்பன் உத்தரவு” என்று சத்தமில்லாமல் சிரித்தார்.
“அதான் ஏட்டய்யா தெளிவா சொல்றீங்கள்ல…அந்த பழனிச்சாமி பொண்டாட்டி சித்ரா தான் தன்னுடைய புருஷன் வெளியே வந்தே தீரனும்னு காடு மேடு எல்லாம் விற்று கேஸ் பாத்துட்டு இருக்கு போல..அப்டி வந்தது தான் இந்த இடம்”. என்று பெருமூச்சு விட்ட பவுன்ராஜ் “ஜே பி முத்து தானே ஆஜர் ஆகுகிறார்?” என்று கேட்டான்
” ஆமாய்யா கட்சியிலிருந்து அவரை தான் பார்க்க சொல்லி இருக்காங்க. அவருக்கு பெருசா நம்பிக்கை இல்லை கேஸ் போனபோக்கெல்லாம் தானும் போய் பார்க்கிறார் அந்த ஜேம்ஸ் மட்டும் எழுதி வைத்துவிட்டு செத்துப் போகாமல் இருந்திருந்தால் இந்நேரத்துக்கு மத்த நாலு பேரும் வெளியே வந்து இருப்பாங்க”.
“சரி ஏட்டய்யா விசயத்துக்கு வர்றேன்.ஏற்குடி போற வழியில அரசனூருக்கு ஒரு பெண்டு வரும்ல? அந்த இடத்தில் திரும்புனா சரியா அரை கிலோமீட்டர் ல மெயின் ரோடு மேலே 20 சென்ட் சன்ன சதுரமா இடம். சித்ராவுக்கு அவங்க அம்மா கோகிலா தான செட்டில்மெண்ட் செய்து கொடுத்தது. ஜெராக்ஸ் எல்லாத்தையும் வாங்கி வில்லங்கம் போட்டு பாத்துட்டேன். அங்கன ஒரு சென்ட் 60,000 போய்கிட்டு இருக்கு.பல்ல கடிச்சிட்டு விக்கிறா சித்ரா. அழுத்தி கேட்டா 50 ரூபாய்னு முடிக்கலாம். ரொம்ப நாளா நீங்களும் இடம் பார்த்துக்கிட்டே இருக்கீங்க அதான் சொல்லலாம்னு வந்தேன்”.
பேசியபடியே தன் கையில் இருந்த லெதர் பேக்கிலிருந்து நாலாய் மடித்த காகிதத்தை வெளியே எடுத்த பவுன்ராஜிடம் அவன் கையை அப்படியே பற்றி அழுத்தி “உள்ள வை பவுனு. கச்சேரியில் வச்சி இதெல்லாம் பேச வேணாம். சாயந்திரத்துக்கு மேல வீட்டுக்கு வா அங்க வச்சு பேசிக்கலாம்” என்றார்.
பவுன்ராஜின் குரல் அவனது முக மொழி, கைவிரல்களை நீட்டி மடக்கி அவன் பேசிய விதம் என அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா லேசாக மழை தாழ்ந்து மீண்டும் தூறல் ஆனது. அந்த நேரம் உள்ளே நுழைந்த சுந்தர்ராஜ் டீ எதுவும் சாப்பிடுறீங்களா கிளம்பலாமா என்றதும்
‘இல்லைங்க கிளம்பலாம்’ என எழுந்து கொண்டான் செல்வா.” என்ன சுந்தர் கிளம்பியாச்சா எனக் கேட்ட குணாளனிடம் “ஆமா ஏட்டையா அக்கா மகளோட வீட்டுக்காரர் வண்டிய சீசிங் பார்ட்டி தூக்கிட்டாங்களாம். அது என்னன்னு பார்த்து செட்டில் பண்ணிட்டு வரலாம்னு கிளம்புறேன்” என்று பாவனையாக ஒரு சல்யூட் செய்துவிட்டு திரும்பி நடந்தார். அவர் பின்னாலேயே தொடர்ந்த செல்வாவிடம் “சார் உங்க கர்ச்சீஃப்” என எடுத்துக் கொடுத்த பவுன்ராஜிடம் “தேங்க்ஸ் சார்” என்று அவன் முகத்தை பார்க்காமல் வாங்கிக் கொண்டு நடந்தான் செல்வா.
(வளரும்)