book affair
முதல் பதிப்பு 2022
இந்தப் புத்தகத் திருவிழாவில் தவறவிடக் கூடாத புதிய புத்தகங்கள் சிலவற்றைத் தொடர்ந்து அடையாளப்படுத்தத் திட்டம். இங்கே முதல் சிலவற்றின் பட்டியல்
1. ஏன் வாசிக்க வேண்டும்
ஆர்.அபிலாஷ் எழுத்து பிரசுரம் 200 ரூ
புத்தக வாசிப்பைப் பற்றித் தமிழில் இருக்கும் போதாமையைப் பூர்த்தி செய்கிற ஆர்.அபிலாஷின் இந்த முயற்சி கவனிக்கத் தகுந்தது. தன்னுரையாடலாகப் பெருகும் இதன் நடையும் எளிய மொழியும் சுவாரசியமாக்குகின்றன.
2. எழுதுதல் பற்றிய குறிப்புகள்
பா.ராகவன் எழுத்து பிரசுரம் 240 ரூ
எழுதுவதைப் பற்றித் தமிழில் இருக்கும் குறிப்பிடத் தகுந்த நூல்களின் வரிசையில் நிச்சயம் இடம்பற்றக் கூடிய நூல் இது. ராகவன் தனது முப்பதாண்டுகளுக்கும் மேலான எழுத்துலக விழிப்புணர்விலிருந்து எடுத்துத் தொகுத்திருக்கும் தருணங்களின் வழியாக எழுத்து என்கிற கலையைப் பற்றிய முதற்சித்திரத்தைப் புதிதாய் எழுத வருகிற ஒருவரால் உருவாக்கிக் கொள்ள முடிவது இதன் சிறப்பு. ராகவனின் நேரடியான பூடகமற்ற மொழி நடை இந்த நூலை ரசிக்கத் தகுந்த சுவாரசியமாக்கித் தருகிறது. முக்கியமான நூல்
3. வாசிப்பின் வழிகள்
ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம் 210 ரூ
தீவிர இலக்கியத்தை வாசிப்பதைக் கைக்கொள்கிற யாவர்க்குமான கையேடு என இதனைச் சொல்வேன். ஜெ தமிழில் இயங்குகிற முதன்மையான படைப்பாளுமை.
அவர் முன்வைக்கிற வழிமுறைக் கடுமையைத் தாண்டி ஒருவரால் ஊடாட முடிகையில் கிட்டுகிற ஒளி அபாரமானது. வாசிப்பு எனும் உலகத்தின் ஆழத்தை அகழ்ந்து ஜெ எடுத்துக் காட்டுகிற சில நுண்மையான திறப்புகள் தவற விடக் கூடாதவை. வெம்மையைத் தாண்டினால் வசந்தம்.
4.தேவதைகளைச் சந்திக்கும் வழி
சுதீர் செந்தில்
உயிர் எழுத்து பதிப்பகம்
ஒரு நெடிய இடைவெளிக்கப்பால் சுதீர் செந்திலின் கவிதைத் தொகுதி வெளியாகிறது. எளிய மனதின் சொல்லாச் சொற்களை எடுத்துக் கோப்பதில் திறன் மிகுந்தவர் சுதீர் செந்தில். இந்தப் புத்தகத் திருவிழாவுக்கு சுதீரின் மேலும் ஐந்து நூல்கள் வெளியாகின்றன என்பதும் கவனிக்கத் தகுந்தது.
5.இசை சூஃபி
மானசீகன்
தமிழினி வெளியீடு
ஏ.ஆர்.ரகுமானின் திரையிசை குறித்து மானசீகன் எழுதியிருக்கும் நூல் இது. திரையிசை எழுத்து மீது தீராக்காதல் கொண்டவரான நூலாசிரியர் தொடர்ந்து அந்தத் தளத்தில் இயங்கி வருபவர். இதைத் தவிரவும் நாவல் கவிதை கட்டுரைகள் எனக் கவனிக்கத் தகுந்த படைப்புகளுக்குச் சொந்தக் காரரான மானசீகன் அடிப்படையில் ஒரு கல்லூரிப் பேராசிரியர்
6. மொழியின் மறுபுனைவு
எஸ்.சண்முகம்
யாவரும் பதிப்பகம் ரூ 650
சமீபத்தில் க.பஞ்சாங்கம் அவர்கள் பெயரால் வழங்கப்படுகிற மதிப்புறு விருதான பஞ்சு பரிசில் விருதைப் பெற்ற நூல். சண்முகம் பல ஆண்டுகளாக எழுதிய இலக்கியக் கட்டுரைகளின் தொகை இந்த நூல். முக்கியமான முன்னெடுப்பு.
7 நூலக மனிதர்கள்
எஸ்.ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம்
220 ரூ
புத்தகம் எனும் பண்டத்தின் பேருலகம் ஒன்றைக் குறித்துத் தொடர்ந்து எழுதுவது எஸ்.ரா விரும்பி நிகழ்த்தும் செயல்பாடு. நூலக மனிதர்கள் ஒரு புனைவின் சுவாரசியத்தைக் கண்ணறியாக் கண்ணிகளினூடாகப் பிறப்பிப்பது அவரது எழுத்தால் நிகழும் வசியம்.
8 காகிதப்பூ
சீனிவாசன் நடராஜன்
எதிர் வெளியீடு 250 ரூ
ரஜினி எனும் பெரும்பிம்பத்தின் உச்சவெற்றிக் காலத்தில் அவரது ஒவ்வொரு அசைவுக்கும் பல அர்த்தங்கள் அள்ளியிறைக்கப் பட்டன. ரஜினியைத் தவிர்த்து விட்டுக் கடந்த 40 ஆண்டுகால தமிழ்சமூகத்தின் கொண்டாட்ட வாழ்வைத் தொகுத்துச் சொல்வது கடினம். சீனிவாசன் நடராஜன் ரஜினி சங்கர் எனும் கதாபாத்திரத்தை நம்முன் உலவ விடுகிறார். அவனது கண்களின் வழியாகக் கிடைக்கிற பிரத்யேக கோணமாற்றங்கள் நமக்குத் தெரிவிக்கிற தரிசனமாக விரிகிறது நாவல். அயர்ச்சியற்ற இதன் நகர்தல் வாசிப்பை இனிமையாக்குகிறது
9.சுகிர்தராணி கவிதைகள் 1996-2016
சுகிர்தராணி
காலச்சுவடு பதிப்பகம் ரூ 375
சுகிர்தராணியின் 20 ஆண்டுக் கவிதைகள் தொகுக்கப் பட்டு வெளியாகி இருக்கின்றன. இந்த நூலுடன் சமீபத்திய கவிதைகள் புதிய தொகுதியாக நீர் வளர் ஆம்பல் எனும் பெயரில் வெளியாகி உள்ளன. தமிழ்க் கவிதைப் பரப்பில் தவிர்க்க முடியாத கவிதைகள் பலவற்றை அளிப்பவர் சுகிர்தராணி. இந்த வருடத்தின் விளக்கு விருது இவருக்கு வழங்கப்பட்டது.
10. பனி உருகுவதில்லை
அருண்மொழி நங்கை-
எழுத்து பிரசுரம் வெளியீடு-
ரூ 380
வாழ்வு ரசனை வாசிப்பு இவற்றினூடாக மனிதர்கள் சந்திப்புகள் தருணங்கள் இவற்றைத் தொகுத்துப் பார்க்கிற தன் அனுபவ விரிதல்களின் தொகை இந்த நூல். எளிமையும் நேர்தன்மையிலான கூறல் முறையும் இந்த நூலை எடுத்தால் கீழே வைக்க முடியாத புனைவு தரும் வாசிப்பு விரைவொன்றைச் சாத்தியப் படுத்துகின்றன. நூல் முடிவடைகிற இடத்தில் இன்னும் பேசியிருக்கலாமே என்கிற உணர்தலை ஏற்படுத்துவது இதன் சிறப்பு. கடந்த சில வருடங்களில் வெளியாகி இருக்கும் தன்-அனுபவத் தொகை நூல்களில் இதனை முதலிடத்தில் இருத்துவதற்கு இன்னுமொரு கூடுதல் காரணம் உண்டு. அது இந்த நூலின் மொழி நுண்மை. எடுத்து இயம்புதலாகவோ வழக்காடுதலாகவோ இல்லாமல் சன்னமான குரலில் தன்னோடு தான் உரையாடுகிற அதே மனோபாவத்தை நூல் முழுவதிலும் சாத்தியப்படுத்தி இருப்பது தான். தவற விடக் கூடாத புத்தகம்.