டெல்லி கணேஷ்
தினத்தந்தியில் சினிமா குணச்சித்திரக் கலைஞர்கள் குறித்து நான் எழுதத் தொடங்கி 4 அத்தியாயங்கள் வரும் போது கொடுந்தொற்று நோயின் பிடியில் உலகம் சிக்குண்டது. நாலே வாரங்களில் அந்தத் தொடர் இடையில் நிறுத்தப் பெற்றாலும் இன்றைக்கும் அவ்வப்போது சந்திப்பவர்களில் சிலபலர் அதைக் குறித்து என்னிடம் சிலாகிப்பது தொடர்கிறது. மக்கள் மனங்களை வென்ற குணச்சித்திரங்கள் என்ற தலைப்பில் அந்தத் தொடரின் முதல் அத்தியாயம் நடிகர் டெல்லி கணேஷ் பற்றியது. அந்த அத்தியாயம் வெளியான பிறகு எனது எண்ணைக் கேட்டறிந்து அழைத்துப் பாராட்டினார். அவருடைய வேடம் விட்டு வேடம் தாண்டிப் பரவும் வேகமும் துல்லியமும் குறித்து நான் பேசியதைக் கேட்டுக் குழந்தை போல் சிரித்து மகிழ்ந்தார். எழுதியதுக்கு தேங்க்ஸ் என்று சொன்னவர் இல்லையில்லை..என் நடிப்புக்காகத் தானே எழுதினீங்க…எனக்காக இல்லியே..என் நடிப்புத் தான் அந்த தேங்க்ஸ் என்று விளக்கம் சொன்னார். அதன் பின்னர் பொது நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காகத் தேனி வந்திருந்தவரை விடுதியின் வாசலில் சந்தித்தேன். நெடு நாள் பழகியவரைப் போலக் கைகளைப் பற்றிக் கொண்டு நலம் விசாரித்தவர் தன் மனத்தின் ஆழத்திலிருந்து அதே சொற்களை மீண்டும் பற்றிக் கொண்டு வந்து என் நடிப்புத் தான் தேங்க்ஸ் என்று சொல்லிச் சிரித்தார். ஒரு பெருங்கால கட்டத்தின் கொடுப்பினை டெல்லி கணேஷ். அவரது இழப்பு சொற்களில் அடங்காதது. அவர் விட்டுச் சென்றிருப்பது பல வேடங்களின் வருங்கால வெறுமையை .
இணை சொல்ல முடியாத பெரு நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
அவரது ஆன்மா இறை நிழலடையட்டும்.
கீழே தினத்தந்தியில் நான் எழுதிய டெல்லி கணேஷ் நடிப்பைக் குறித்த கட்டுரை
‘டெ ல் லி’ க ணே ஷ்
நகைச்சுவை என்பது வெறுமனே சிரிக்க வைக்கும் நடிப்பு என்ற எண்ணம் மேலோட்டமானது.சிரிக்க வைப்பது கடினமான கலை.உலக அளவில் சிரிப்பு நடிகர்கள் பலரும் குணச்சித்திர நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்கள். உண்மையை செயற்கையாகத் தயாரித்துத் தருகிற பொறுப்பு மிக்க நடிப்புக்கலை சினிமாவின் உச்சபட்ச சிறப்பு என்றாலும் பொருந்தும். திரையில் எல்லோரும் காணும் காட்சிக்கு ஏற்ப வெடித்துச் சிரிக்கையிலும் கண் கலங்கி அழுகையிலும் ரசனை உண்மையாக வெளிப்படுகிறதல்லவா? ரசிப்பதைப் போலியாக செய்வது சாத்தியமா என்ன..? ஒவ்வொரு நடிகருக்கும் தனித்துவங்கள் இருக்கும். அவர்களுடைய தொடர்ந்த திரைப்பயணத்தை இப்படியான தனித் திறமைகள் தான் தீர்மானித்துத் தரும்.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை என்ற ஊரில் 1944 ஆம் வருடம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பிறந்த கணேஷ் இந்திய விமானப்படையில் பணிபுரிந்தவர்.தன் வேலை நிமித்தம் டெல்லியில் வசித்து வந்தார். சின்ன வயதில் இருந்தே நடிப்புக் கலை மீது ஈர்ப்புக் கொண்டிருந்த அவர் டெல்லியைச் சேர்ந்த தக்சின பாரத நாடக சபாவில் தன்னை இணைத்துக் கொண்டு பல நாடகங்களில் நடித்த டெல்லி கணேஷூக்கு சினிமா வாய்ப்பு 1976 ஆம் ஆண்டு இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களால் பட்டினப் பிரவேசம் படத்தின் மூலம் நிகழ்ந்தது. சிவாஜி கணேஷ் ஜெமினிகணேஷ் ஜெய்கணேஷ் வரிசையில் இன்னுமொரு கணேஷான இவருக்குத் தான் கிளம்பி வந்த ஊரான டெல்லியை முன் பெயராக்கினார். அதுமுதல் டெல்லிகணேஷ் என்ற பெயரில் பிரகாசித்து வருகிறார்.
.தனக்கு எந்த வேடம் வழங்கப்படுகிறதோ அந்தப் பாத்திரத்துக்குள் தன்னைப் பிசகின்றி அசலாகப் பொருத்திக் கொள்வது தான் டெல்லி கணேஷின் சிறப்பு எனலாம். பாத்திரநியாயம் எதுவோ அதையே சதா சர்வ காலமும் தனக்குள் உணர்கிற நடிகர்களால் மட்டுமே அப்படி நடிக்க இயலும் தனது முதல் படத்திலேயே கனமான பாத்திரத்தை ஏற்று நடித்த கணேஷ் நல்ல தீய மலிந்த கொடூரமான உன்னதமான என்று பலவித கதாபாத்திரங்களுக்கு ஒளியூற்றினார்.ஏழ்மை இயலாமை குற்ற உணர்வின் பலவீனம் அறியமை வெகுளித் தனம் நடுத்தர வர்க்கத்தின் பிடிவாதம் விசுவாசத்தின் அடிப்படையிலான கண்மூடித் தனமான பற்றுதல் கோழைத் தனம் சார்ந்திருத்தலின் மனநடுக்கம் இப்படி மனித வாழ்வின் யதார்த்தங்கள் பலவற்றைத் திரையில் அச்சுப் பிசகாமல் தோற்றுவித்த நல்லதொரு நடிகர் டெல்லி கணேஷ்.
தணியாத தாகம் படத்தில் நாயகனாக நடித்தார் டெல்லி கணேஷ்.இனிய பாடல்கள் நிரம்பியது அந்தப் படம்.
உலக நாயகன் கமல்ஹாஸனுக்கு மனதுக்கு நெருக்கமான நடிகர் பட்டியலில் இவரது இடம் முக்கியமானது.அபூர்வ சகோதரர்கள் படத்தில் நாலு வில்லன்களில் ஒருவராக டெல்லி நடித்தார்.புன்னகை மன்னன் படத்தில் கமலின் அப்பாவாக எரிச்சலுக்குரிய அற்பமான பலவீனத்தை நம் கண் முன் அச்சு அசலாகத் தோற்றுவித்தார். மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் பாலக்காட்டு சமையல்காரர் மணி ரோலில் அற்புதமாய் வளையவருவார். காதலா காதலா படத்தில் கமல் பிரபுதேவாவை பாவம் செய்யத் தூண்டும் வீட்டு உரிமையாளர் வேறு யார் நம் கணேஷ் தான். நாயகனில் கமலின் பின்புல விசுவாசியாகப் படம் முழுக்கத் தொடர்வார். அவ்வை ஷண்முகி படத்தில் கோடீஸ்வர ஜெமினிகணேஷூக்கு ஜால்ரா தட்டியபடி ஊடாடும் மேனேஜராக அவரை விட்டால் வேறு யார் நடித்திருக்க முடியும்
துரை இயக்கத்தில் தேசிய அளவில் போற்றப் பட்ட தமிழ்ப்படம் பசி. ஷோபாவின் தந்தையாக ரிக்சா ஓட்டும் விளிம்பு நிலை மனிதராகத் தன்னை முழுவதுமாக அழித்து வேறொரு புதிய மனிதராக நம் முன்னால் தெரிந்தது டெல்லி கணேஷின் மேதமைக்கு சாட்சி.அதுவரை முற்றிலும் கவனத்திற்கு உட்படாத உலகத்தை காட்சிப் படுத்திய வகையில் பசி படமும் அவரது பாத்திரமும் இன்றும் பேசத் தக்கவை. பாலச்சந்தரின் சிந்துபைரவி படத்தில் இசைக்கலைஞர் குருமூர்த்தியாக டெல்லி கணேஷ் காட்டிய கச்சிதம் மெச்சப் பட்டது. ரஜினி காந்துக்கு மாமனாராக எங்கேயோ கேட்ட குரலில் நடித்த டெல்லிகணேஷ் காண்போர் மனதைக் கரையச் செய்தார்.வில்லன் வேடங்களிலும் வெளுத்து வாங்கினார் டெல்லி கணேஷ் விசுவின் இயக்கத்தில் சிதம்பர ரகசியம் படத்தில் சஸ்பென்ஸ் உடையும் வரை நல்லவராகத் தோற்றமளிக்கும் கறுப்புப் பூனையாக வில்லனாக மிளிர்ந்தார்.
45 வருடங்களைக் கடந்து நடிப்பில் மின்னுகிற பண்பட்ட நடிகரான டெல்லி கணேஷ் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் எதிரி படத்தில் கிட்டத் தட்ட இன்னொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு அபாரமாய் நடித்தார். தலைநகரம் படத்தில் அரசியல் வாதியாகவும் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் காசு வாங்கிக் கொண்டு அட்மாஸ்பியரில் தோன்றி மறையும் தற்செயல் மனிதராகவும் கேடிபில்லா கில்லாடி ரங்கா படத்தில் மகனுக்குச் செலவழித்த பணத்தை வருடக்கணக்காக டைரி போட்டு கணக்கெழுதும் தகப்பனாகவும் இன்றும் திரைப்படம் டீவீ தொடர் விளம்பரம் என எங்கும் எதிலும் டெல்லி கணேஷ் என்று சக்கை போடு போட்டு வருகிறார் டெல்லி கணேஷ்.
முத்தாய்ப்பாகச் சொல்வதற்கு விசு இயக்கத்தில் பாலச்சந்தரின் கவிதாலயா தயாரித்த பெண்மணி அவள் கண்மணி படத்தில் டெல்லி கணேஷ் விசுவின் வீட்டு மாடி போர்ஷனில் குடியிருப்பார். மருமகளின் சொல்லொணாக் கொடுமைகளைத் தானும் தன் மனைவி கமலா காமேஷூமாய்ப் பொறுத்துக் கொண்டு கஷ்டப்பட்டு வாழ்க்கையை நகர்த்தும் பாத்திரம் அவருக்கானது.தங்கள் இருவரையும் வெளியேற்ற திட்டமிட்டு மருமகள் அருணா பணத்தைத் திருடியதாக தன் மனைவி கமலா காமேஷ் மீது பழி சுமத்தும் போது அதைத் தான் செய்ததாக ஒப்புக் கொண்டு கோயில் குளத்தின் படிக்கட்டில் சென்று அமர்ந்து கொள்வார் டெல்லிகணேஷ். தன்னை சந்திக்கும் விசுவிடம் “என் மருமக கில்லாடி திட்டம் போட்டு திருட்டுப் பட்டம் கட்டி எங்க ரெண்டுபேரையும் வீட்டை விட்டு துரத்திரலாம்னு பார்த்தா. நான் விடுவேனா நான் தான் திருடினேன்னு ஒத்துக்கிட்டு வெளியேறுறாப்ல என் பொண்டாட்டியை வீட்லயே இருக்கறாப்ல செய்துட்டேன்.ஹஹா “என்று சிரிப்பார்.
அந்தச் சிரிப்பை வார்த்தையால் எழுத முடியாது.வேறாராலும் சமன் செய்ய முடியாது. இன்னொரு நடிகரால் அப்படி நடிக்கவே இயலாது என்று கூறத் தக்க அளாவில் அந்தக் காட்சியில் நடிப்பின் இலக்கணமாகவே மாறியிருப்பார் டெல்லி கணேஷ் வாழ்வில் புரையோடிப் போன வறுமையை எதிர்த்துச் சமர் செய்வதற்கான பிடிவாத ஆயுதமாகவே ஏழ்மையின் கெக்கலிப்பை நிகழ்த்தியிருப்பார் கணேஷ்.